இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 28 March 2018

பத்து ரூவா (Breakdown stories - 1)


'Break Down 'குறும்படத்திற்காக நாங்கள்தேர்வு செய்து வைத்திருந்தவர் மொய்யன். வயது 75. ஏற்காட்டிலிருந்து இருபது கி.மீ. தொலைவிலுள்ள வெள்ளக்கடை எனும் மலை கிராமத்தில் ஆடு மேய்த்து வாழ்பவர். ஆனால் படப்பிடிப்பிற்கு ஒரு நாள் முன்பு அவருடைய மகன் அவரை நடிக்க அனுப்ப மறுத்துவிட்டார். அதன் பின் பல கிழவர்களை பார்த்தும் அக்கதாபாத்திரத்திற்கு யாரும் பொருந்தாததால் தோழர்கள் கார்த்திகேயன் மற்றும் மனோவுடன் ஒன்டிக்கடையில் செய்வதறியாது விழித்துக் கொண்டிருக்கையில் சாலையில் ஒரு பெரியவர் கோலூன்றியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். "இவர் மாதிரி ஒருத்தர் கெடச்சா நல்லாருக்குங்க" என்றதும் இருவரும் அவரை மடக்கி விசாரிக்க நான் அவரருகில் சென்றவுடன் என்னை ஏறெடுத்து பார்த்து கேட்ட முதல் கேள்வி

"பத்து ரூவா குடுக்கறியா.
பொகல (புகை இலை) வாங்கணும். "

அசம்பூர் மலை கிராமத்தின் கானகத்தில் ஒரு ஓடை அருகே சிறு குடிலில் வசித்து வரும் அவர் குடும்பத்தாருடன் பேசினோம். அவர் நடிக்க ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் தருவதாய் அவர் மகனிடம் சொல்லி சம்மதிக்க வைத்து நடிக்க அழைத்துச் சென்றோம். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்ததும் பெரியவரை பத்திரமாக அழைத்துச் சென்று அவர் குடிசையில் விடுகையில் போதையிலிருந்த அவர் மகன் "சம்பளம் எப்ப தருவீங்க " என கேட்க மொத்தமாக தருவதாக சொன்னோம்.

இரண்டாம் நாள் பெரியவர் லட்சுமனன் மலையின் மார்கழி கடுங்குளிரிலும் மழையிலும் நனைந்தபடி மிக உற்சாகமாக எங்களுடன் பழகி நடித்தார். Prompting action cut எல்லாம் அத்துப்படி ஆனது அவருக்கு. கடுங்குளிரிலும் உற்சாகமாகவே நடித்தார். அவரை விடுகையில் "ஐயாயிரம் தராட்டி நாளைக்கு கெழவன அனுப்ப மாட்டோம்" என்றார் அவர் மகன்.

மூன்றாம் நாள் moody யாகவே இருந்தார் தாத்தா. "ஊட்டுக்கு போவணும். கூட்டினு போ.." சரியாக சாப்பிடவுமில்லை. நடிப்பிலும் ஆர்வமில்லை. அவரை அழைத்து

"ஐயா..இன்னும் கொஞ்சந்தான் இருக்குது. போயிடலாம். வேற எதாவது வேணுங்களா..சாப்பிட.."

"அதெல்லாம் இல்லீங்கய்யா. நீங்க தான் என்ன நல்லா பாத்துக்கறீங்களே"

"அப்ப வேறென்ன. காசு தராம போயிடுவோம்னு பயப்படறீங்களா. வேண்ணா மூனு நாளைக்கும் மொத்தமா மூவாயிருவா இப்பவே ஒங்ககிட்ட தந்துட்டுங்களா.."

பதறியவர், "ஐயோ..என்ன சுட்டு போட்டாலும் வாங்க மாட்டன். எம்புள்ள கிட்டயே குடுத்துடுங்கய்யா".

படப்பிடிப்பு தொடர்ந்தாலும் அவர் முகத்தில் இருக்கம் களையவில்லை. உதவியாளர் அவரை தனியாக அழைத்து கேட்கையில் " எம்மவன் ஏழாயிரம் வாங்கினு வரச்சொல்லிட்டான். அதான்.." என்றிருக்கிறார்.

ஒரு வழியாக படம் முடிந்து அவரை விடுகையில் அவர் மகனிடம் பேசி அடுத்த வாட்டி திரும்பவும் வருவோம் என மொத்தமாக மூவாயிரம் நீட்ட கண்கள் விரிந்தாலும் மௌனமாக சற்றே சலிப்புடனே வாங்கிக் கொண்டார். பெரியவர் அவ்விடத்தை விட்டு விலகி ஆட்டுப்பட்டியிடம் சென்றுவிட்டார்.

ஒரு மாதம் கழித்து மிச்ச காட்சிகளை எடுக்க அம்மலை கிராமம் சென்று பெரியவரை பார்த்தோம். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் பரவசத்துடன் என் கைகளை பிடித்தவாறு குழுவிலிருந்த அனைவரின் நலனையும் விசாரித்தார். தாடி மழித்துவிட்டதால் வளர்க்கச் சொல்லி "அடுத்த வாரம் தயாரா இருங்க" என்று கிளம்பினோம்.

ஒரு வாரம் கழித்து அவரை பார்த்தால் அவருடைய shawl இல்லை. கிழிந்து நைந்திருந்த அது continuity க்கு அவசியம். படத்தில் அது ஒரு குறியீடு. இரண்டு நாட்களாக தேடி அலைந்து கடைசியாக இடுகாட்டில் ஒரு புதரில் அவர் பேரன் மணி தேடி எடுத்த போதே உயிர் வந்தது. இப்படியாக ஒரு 95 வயது கிழவரின் தாடியும் கிழிந்த சால்வையும் தன் அந்திமக் காலத்தில் அர்த்தப்பட்டது. அந்த சால்வையை பத்திரப்படுத்தி வைத்துள்ளோம். யார் கண்டது.. நாளை அதுவே ஏலத்திற்க்கும் வரலாம்.

குடித்து விட்டு "பத்தாயிரம் குடுத்தா தான் அணுப்புவேன்" என்று ரகளை செய்த அவர் மகனின் அளப்பறைகளை அவர் வீட்டின் மற்றவர்கள் உதவியுடன் சமாளித்து படப்பிடிப்பு முடித்து அவரிடம் பேசிய தொகையை கொடுத்து பெரியவரை தேடினோம். ஒரு பாறை மேல் அமர்ந்தபடி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

"அப்ப போயிட்டு வருட்டுங்களாயா.." என்றதும் கண்கள் துடிக்க "இனிமே எப்ப ஏற்காடு வந்தாலும் என்ன பாக்காம போவக்கூடாது.." கட்டளையிட்டார். அவர் கைகளை பற்றியபடி " நிச்சயமா வறேங்கய்யா." என்று கூறிச் சென்றேன்.

" ஐயா.."என்றார். திரும்பினேன்.

"பத்து ரூவா இருக்குங்களா. பொகல வாங்கணும்."

கொடுத்ததும் கண்கள் விரிய கெத்தாக புது சால்வையை தோள் மேல் சுழற்றி போட்டபடி ஆடுகளை ஓட்ட ஆரம்பித்தார் எங்கள் கதாநாயகன்.

***

No comments:

Post a Comment