இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 7 March 2018

( குரு பாலுமகேந்திரா உடனான அனுபவத் தொடர் - பாகம் 6)


ஓலங்கள் 💝

பாலுமகேந்திரா என்கிற கலைஞனின் ஆளுமை எங்கே எவ்வன்னம் உயிர்த்ததென பார்த்தோம். அதைத்தொடர்ந்து அவர் கையாண்ட சில கதைகளைப் பார்ப்போம்.

அவர் எடுத்த படங்களில் அவர் போற்றும் இரு படங்கள் 'வீடு', மற்றும் 'சந்தியா ராகம்'.

இரு பெண்களும் ஒரு கிழவரும் மட்டும் கொண்ட குடும்பம் சொந்த வீடு கட்ட முயற்சித்து பாதி கட்டிய நிலையில் அரசாங்க சிக்கலால் அப்படியே நின்றுவிடுவதோடு முடியும் 'வீடு'.

இக்கதைக்கான உந்துதலாக அவர் சொல்வது தன் தாய் ஈழத்தில் வீடு தேடி அலைந்ததையும் தான் அகிலாவை மணந்த பிறகு மெட்ராஸுக்கு வந்த புதிதில் பெற்ற அனுபவங்களையும் தான். அவ்வகையில் அப்படம் சிறப்பு மிக்கதே. அதனோடு இவர் எடுத்த படங்களிலேயே அரசு எந்திரத்தின் அலட்சியப் போக்கையும் மெத்தனத்தையும் அதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களையும் ஓரளவேனும் காட்டியது இப்படத்தில் மட்டுமே. மற்றபடி பாலுமகேந்திராவின் பெரும்பாலான கதைகள் ஒரு ஆண் இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்டதே.

'வீடு' படத்தில் ஒரு பெண் சொந்த வீடு கட்ட போராடுவது தமிழ் சூழலில் அபத்தமானதென விமர்சிப்பர் சிலர். "இன்னொரு வீட்டுக்கு போகப்போற பொண்ணுக்கு எதுக்கு சொந்த வீடு?."

மேற்கூறிய விமர்சனத்தை இலக்கியவாதியும் கலை விமர்சகருமான மா. அரங்கநாதனிடம் சொன்னபோது கூறினார்,
"இவங்க யாரு முடிவெடுக்க.."

பிறப்பு முதல் இறப்பு வரையிலான பெண் வாழ்வை பங்கிட்டு உண்ணும் மனப்பான்மை கொண்டோர் வெளிப்படுத்தும் கருத்தே இது.
ஒரு பெண்ணுக்கு தேவையான அடிப்படையானவற்றுள் ஒன்று அவளுக்கான உறைவிடம். சுதந்திரமாக கால் நீட்டி ஜன்னலோரம் அமர்ந்து இளைபாற முடியாமல் தவிக்கும் பெண்கள் நிறைந்ததே நம் சமூகம்.

அவ்வகையில் 'வீடு' சிறப்பான படமே. அவற்றோடு பரவலாக அவர் படங்களில் கையாளும் மௌனம்,சிக்கனமான உடல்மொழி, இளையராஜா இசை என அனைத்தும் ஒன்றுகூடி ஒருமித்ததோர் பேரனுபவத்தை கொடுக்கும் படமே.

அதுபோல் 'மறுபடியும்' படத்தில் ரேவதி கதாபாத்திரம் தனக்கு துரோகம் செய்த கணவனை பிரிந்து தன் தோழன் பெருமிதமாக பார்க்க சுதந்திரமாக கம்பீரமாக நடக்கையில் சற்றே சலனமுற்று சில கணங்கள் நிற்க.. அத்தோழன் சொல்வான்,

"துளசி Don't. திரும்பிப் பாக்காதீங்க போயிட்டே இருங்க.."

பாலுமகேந்திரா காட்டும் அக்கணவனும் அத்தோழனும் அவரே தான்.

பெரும்பாலான கலைஞர்களின் அகவுலகம் இவ்வாறு சிக்கலானதே. தனக்கு நியாய தர்மம் தெரியும். அந்த பிரக்ஞையும் நுண்ணுணர்வும் கொண்டவர்களே அவர்கள். ஆனால் அந்த மதிப்பீடு அவர்களுக்கு பொறுந்தாது. அவர்கள் கடவுள்களால் ஆசிர்வதிக்கப்பட்ட தேவ தூதர்கள்.

சேரனின் 'ஆட்டோகிராப்' ஒரு பெண் பற்றியதாக இருந்திருக்குமானால் அப்பெண் கதாபாத்திரத்தின் கதி தான் என்னவாகியிருக்கும். துளசி தன் கணவனிடம் கேட்பாள்,

"இதே நான் இன்னொருத்தன் கிட்ட போயிட்டு உங்ககிட்ட வந்தா நீங்க என்ன ஏத்துப்பீங்களா?"

ஆக, இது ஒரு படத்தில் பார்த்திபன் சொல்வது போல்,
"எனக்கு பொய் சொல்றது புடிக்கும். ஆனா சொல்றது நானா இருக்கணும்".

இந்த அளவு புரட்சி மனோபாவ மிக்கவர்களே பெரும் படைப்பாளிகள்.

பெண்ணின் எல்லாத் தேவகளையும் துயரங்களையும் அறியும் கலைஞன் அதையும் மீறி தன் இச்சைகளுக்காக அவர்கள் வாழ்வை இருளாக்கும் தன்மையை எவ்வகையில் சகிக்க முடியும்.

இவர்கள் அனியும் 'கலைஞன்' என்கிற முகமூடி அப்பெண்ணின் துயரத்தை போக்கிடுமா ?.
'ஆம்' என்றால் எதுவும் சரியே.

கலைஞர்கள் தத்துவவாதிகள் விஞ்ஞானிகள் போன்ற அறிவுசார் துறையில் உள்ளோர்க்கு அவசியம் சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அது அவர்கள் சிந்திப்பதற்கான சூழல் சார்ந்ததே.

பாலுமகேந்திரா தன் கலை மூலம் வெளிப்படுத்தும் அறமானது முழுமுற்றாக மானுடத்தின் பால் கொண்ட பேரன்பினாலோ கருணையாலோ அல்ல. மாறாக, தன் கலைத்திறனை, ஆளுமையை பறைசாற்றிக் கொள்வதே பிரதான நோக்கம்.

David lean - ன் ஆளுமையை பார்த்து "நானும் action cut சொன்னதும் எல்லாம் இயங்கணும்" என்னும் ஆசை வேரூன்றிய மனத்தின் வெளிப்பாடு இவ்வாறே இருக்கும். நிற்க.

நாம் விவாதித்து வரும் கூறுகள் அனைத்தும் கலைகளின் தேவை மற்றும் நோக்கம் சார்ந்து ஒரு பரிசுத்தமான கலைஞனுக்கு இருக்க வேண்டிய பண்புகளே.

மற்றபடி,The so called கோடம்பாக்க சினிமாக்காரர்கள் எவரும் நெருங்க முடியாத இடம் பாலுமகேந்திராவுக்கு உண்டு.

தசரதபுறத்தில் ஓர் இடம் வாங்கி அதிலே வீடு கட்ட கட்ட எடுக்கப்பட்ட படமே 'வீடு'. அப்படத்தில் தான் இயக்குனர் பாலா பாடலாசிரியர் அறிவுமதி மூலம் உதவி இயக்குனராக பாடம் கற்றார்.

படத்தின் உச்சகாட்சியில் பாதி கட்டிய நிலையில் நிறுத்தப்பட்ட அக்கட்டடம் பல வருடங்களாக அப்படியே கிடந்தது. பிறகு சில வருடங்களுக்கு முன்பு தான் அக்கட்டடத்தை முடித்து அதற்கு 'சினிமாப்பட்டறை' என பெயர் சூட்டி அதை தன் அலுவலகமாகமும் 'Balumahendra film school' ஆகவும் பயன்படத்தினார். இறந்த பின் அவர் உடலை அவ்விடமே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

For him, Its a kind of saturation and a good completion, there.💝

(End of part - 6 )

No comments:

Post a Comment