யாத்ரா🚶♂️
-------------
'பிறப்பு' என்னும் திரைப்படத்திற்கு ஷங்கி மகேந்திரா தான் காமிரா மேன் . அவருக்கு வேறொரு டாக்யுமென்ட்ரி வேலை இருந்ததால் அப்படத்திற்கு ஒரு வாரம் பேட்ச் வொர்க் செய்ய பாலு சார் சென்றார். நான் தான் அவருக்கு உதவியாளன்.
அவர் காமிரா இயக்குவதை கனாக்காலத்தில் தூரத்தில் நின்று பார்த்தவன் இன்று அவருடன் வேலை செய்கிறேன்.
Lens, View-finder,Track and Trolley, Apple Box, Meter என அவர் கேட்க நான் இயங்க அவருக்கு கிடைத்த அனைத்து மரியாதைகளும் எனக்கும் கிடைத்தது. Pack up சொல்லி திரும்பும்போது காரில்,
" இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்து கொடுத்திருக்கலாம் டா.."
" Shot Division பண்ணி Shoot பண்ணியிருக்கனுமோங் சார். "
" இல்லடா. அது வந்து...."
" கொஞ்சம் Rules - அ Break பண்ணி இருக்கலான்றீங்களா.?"
" இந்த காலத்துல நெறைய பேர் இப்படி பேசறத கவனிச்சிட்டு தான் வர்றேன். மொதல்ல ஒன்ன தெளிவா புரிஞ்சிக்கோங்கப்பா. கையில இல்லாத ஒன்ன தூக்கி போட முடியாது."
அப்பயணத்தில் அவருடன் விவாதித்தது என் சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்டம்.
அக்காலக்கட்டத்தில் அவருடன் செந்திலும் நானும் மட்டுமே ஒரு வருட காலம் இருந்தோம். எங்களுக்கு அலுவலகமே வீடு. தினமும் கூட்டி கழுவி அமைதி கோர்த்து காத்திருப்போம் சார் வருகைக்காக. அவரே குரு, தகப்பனார், நண்பர் எல்லாம். நாங்கள் தினமும் படிப்போம். படம் பார்ப்போம். விவாதிப்போம்.
பாலு சார் மதியம் கருவாட்டுச் சொதி சமைக்க காலையிலேயே தயார் ஆவார். தேங்காய்ப் பால் பிழிந்து சூடாக ஒரு கோப்பையில், சில்லென்று ஒரு கோப்பையில், பச்சைப் பட்டாணியின் அளவை வைத்துக் கொண்டு அதற்கு இணையாக பீன்சை வெட்டச் சொல்வார். இந்த அளவு வெப்பத்தில் இவ்வளவு நேரம் வேக வேண்டும் . பரிமாறுவதில் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிப்பார்.
செந்திலிடம் கேட்பேன்.
"என்னங்க நடக்குது இங்க.. நாம சினிமா கத்துக்க வந்தமா இல்ல சமையல்ல Ph.D பண்ண வந்தமா.."
சொதியை சுவைத்தவாறே சிரிப்பார் செந்தில். பாலு சாரிடம் இரண்டு படங்கள் உதவி இயக்குனராக சினிமா பயின்றவர். பிறகு 'எதிர் நீச்சல்' மூலம் இயக்குனறானார்.
"சமைக்கத் தெரியாதவனுக்கு Creativity - யே கைகூடாதுடா." என்பார்.
"அநியாயமா இருக்கே.. சமையலுக்கும் சங்கீதத்துக்கும் என்ன தொடர்பு..?!"
'நாம் உண்ணும் உணவே நாம்' - சூட்சுமக்காரன் எங்கள் குரு.
நாங்கள் பேசாத விஷயமே இல்லை. சினிமா, இலக்கியம்,ஓவியம், சிற்பம், உறவுகள் என நீளும், பொழுது.
அவர் பூனே திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது, தான் செய்தவற்றைப் பற்றியும் பெண்களுடனான அவருடைய அனுபவங்களைப் பற்றியும் ஈழத் தமிழில் அவர் கூறக் கேட்கையில்
'செந்தமிழ் நாடெனும் போதினிலே..'
எங்கள் கையில் காசிருக்காது. ஆனாலும் படு மிடுக்காகக் கிளம்பி விடுவோம் நகருலா.
மகேந்திரன் அவர்களின் 'சாசனம்' திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தோம் பாலு சார்,நான், ஆதவன் தீட்சண்யா மூவரும். பாதியில் நான் நெளிந்து,
"சார். Rest Room போயிட்டு வர்றேன்.."
சற்று நேரத்தில் ஆதவன் தீட்சண்யா வர்றார். இருவரும் சிரித்துக்கொள்கிறோம்.
படம் முடிந்து Tic-Tac சென்று DVD வாடகைக்கு எடுத்துக்கொண்டு
Woodlands - Drive In நோக்கிப் பயணிக்கையில்,
"என்னடா.. ஒண்ணுமே பேச மாட்டேங்கிற.. நானே கேட்கணுமா.."
"இல்ல சார்.."
"அப்ப சொல்லு.. எப்படி இருந்துச்சி படம்..?"
"No sir.. It's like.."
"பிடிச்சிருக்கு. பிடிக்கல.. இவ்ளோதானே.. இத சொல்ல ஏண்டா இவ்ளோ பீடிக..!"
"சார். கண்ண மூடி பத்து நிமிஷம் படத்த கேட்டேன். எனக்கு புரிஞ்சிச்சி..அதான்.."
"Cinema is basically a Visual Art. நான் தான் சொன்னேன். இலலேங்கள. ஆனா ஒரு படம் எந்த ஒரு உணர்வ சொல்ல வந்ததோ அந்த உணர்வ பார்வையாளனுக்கு கடத்திட்டா அது நல்ல சினிமா தாண்டா. அதுக்கு 'Grammar' முக்கியமில்ல. இயக்குனரோட பார்வை தான் முக்கியம்."
பின்னொரு சமயம் ' Inception ' படம் பார்த்துத் திரும்பும் போது நான் கேட்டேன்.
"How was the Film Sir..?"
"Intellectual.. Very Very intellectual.."
"..along with the psychedelic music it's like an illusionary world, sir. "
"So What..?!"
அவர் கேட்ட இந்த கேள்வியை பின்னொரு நாள் வெற்றிமாறன் சாரிடம் சொன்னேன். குபீரென்று சிரித்தார்.
"அதான் நம்ம சார்..! "
பூனே திரைப்படக் கல்லூரியில் சத்யஜித்ரே மற்றும் ரித்விக் கட்டக்' கிடம் பயின்றார் பாலு மகேந்திரா.
அவர் படைப்புகளைப் போல் அடிக்கடி அதீத உணர்ச்சிக்குள்ளாவார்.
"இது ஒரு வித வரம். ஒரு படைப்பாளி எங்கறவன் சாமான்யன் பாக்க முடியாததையும் பாக்கற நுண்ணுணர்வு மிக்கவன். அதாலையே அவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் அதீத பரவசத்துக்கு ஆளாகறான். துயரத்துக்கும் ஆளாகறான். துரதிஷ்டவசமா அந்த நுண்ணுணர்வே அவனுடைய சொந்த வாழ்க்கையையும் சீரழிச்சிடுது.
It just collapses his very own Life.."
பல மேடைகளில் அவர் தவறாமல் பேசும் வாசகம் இது.
பின்னாட்களில் கார் வசதி மட்டும் வாய்த்த போது மதிய வேளைகளில் பணமில்லா நாட்களில் மனம் தளராது நிலைக்க நகருலா செல்வோம்.
சாலையில் சென்று கொண்டிருக்க,
"எல்லாமே மாறிடுச்சிடா. சினிமா உட்பட நம்மைச் சுத்தன உலகம், வாழ்க்க, Everything... காரத்திருப்பு.."
சம்பந்தமே இல்லாமல் விஜயா மருத்துவமனையினுள் போகச் சொல்வார். தேநீர்க் கடை மரத்தடியில் அமர்ந்தவாறு நோயாளிகள் உறவினர்கள் என பலதரப்பட்ட முகங்களையும் பார்த்தபடி,
"கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்."
என நாலடியார் சொல்லி வானை வெறிப்பார்.
மாலை நேர மேகக் கூட்டம் நிசப்தத்துடன் நிற்கும் மரக் கிளைகளினூடே மெல்ல நகர்ந்தவாறே மந்தகாசப் புன்னகை பூக்கும். அத்தருணங்களில் அவர் விழிகளில் பனி படர்ந்திருக்கும்.
தேநீர் கொடுத்து மௌனம் கலைப்போம் செந்திலும் நானும். சட்டென எதிரே செல்லும் சிட்டைப் பார்த்து,
"இவ தன்ன பசங்க பாக்கனும் எங்கறதுக்காகவே இப்படி Dress பண்ணிட்டு போறாடா. இப்ப நாம பாத்தா சிடுசிடுப்பா. பாக்காட்டி Disappoint ஆயுடுவா.. நாம என்னடா செய்யறது?"
"சார். நம்மால இப்ப ஒன்னும் பண்ண முடியாது சார். போலாமா.."
"நீயா எப்படிடா இப்படி ஒரு முடிவுக்கு வருவ.. I am still 25 at heart.."
"Of course i agree if it's about your heart, sir..!"
அது தொட்டு அவர் அனுபவங்கள் பகிர,
நாங்கள் சிரித்தவாறே அலுவலகம் நோக்கிப் பயணிப்போம்.......🚗
(End of part - 2)
****
No comments:
Post a Comment