இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 7 March 2018

( குரு பாலுமகேந்திரா உடனான அனுபவத் தொடர் - பாகம் 8 )


உன் கண்ணில் நீர் வழிந்தால் 📚✒

பாலுமகேந்திராவின் ஆளுமையை விமர்சிக்கும் அதே சமயம் அதன் அவசியத்தையும் அறிய வேண்டியிருக்கிறது. அடிக்கடி சொல்வார், "படைப்பாளிக்கு ஒருவித திமிர் வேணும்டா. அந்த கர்வம் போயிட்டா அத்தோட அவனுடைய படைப்பாற்றலும் போயிடும்."

தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒரு மலையாளப் படத்தின் வெற்றியை முன்னிட்டு ஒரு Party நடந்தபோது அதில் நன்றாக குடித்துவிட்டு போதையில் அப்பட இயக்குனர் தன்னால் தான் படம் ஓடியதென்றும் ஒளிப்பதிவாளர் தனக்கு கீழ் தானெனவும் கூறியிருக்கிறார். அடுத்த நாள் போதை தெளிந்த பின் பாலுவிடம் தான் நேற்றிரவு போதையில் ஏதோ உளரிவிட்டதாகவும் பேசியது தானல்ல உள்ளே சென்ற சரக்கு தானெனவும் கூறியுள்ளார்.

'உள்ள போனது வேண்ணா சரக்கா இருக்கலாம். ஆனா பேசனது ஒங்க நாக்கு தான சார் ' என்றாராம்.

'என்ன பெரிய பாலுமகேந்திரா.. காச விட்டெறிஞ்சா நூறு cameraman கெடைப்பாங்க ' என்று சொன்னதற்கு,

"பணத்தால ஆயிரம் ஒளிப்பதிவாளர்கள வாங்கலாம் நீங்க. ஆனா இந்த பாலுமகேந்திராவ மட்டும் வாங்கிட முடியாது. Good bye என்னு சொல்லிட்டேன்டா. அதற்குப் பிறகு அவர் எவ்வளவு கூப்பிட்டும் நான் போகவேயில்ல. வேல இல்லாம அகிலாவோட இந்த மெட்ராஸ்ல வெறும் பன்ன மட்டும் தின்னுட்டு வாழ்ந்தனேயொழிய நான் போகவேயில்ல. "

அவருக்கென்று சில அடிப்படை ஒழுக்கங்கள் உண்டு. தன் தாள லயத்தில் பயணிப்பதில் கவனமாக இருப்பார். 'அது ஒரு கனாக்காலம்' படத்திற்கு பிறகு ஏழு வருடங்கள் படமின்றி இருந்தார். ஒரு கலைஞன் வேலையற்று இருக்கும் நாட்களில் அவருடன் இருப்பது அவசியம். அப்பொழுது தான் உண்மையாகவும் தீர்க்கமாகவும் பாடம் பயில முடியும்.

அக்காலகட்டத்தில் அவருடைய இயலாமையை மறைக்க எங்களை வாட்டுவார். தினமும் ஒரு சிறுகதை படித்து அதைப்பற்றி ஒரு பக்கத்தில் Synopsis எழுத வேண்டும். மதியம் மீன் சொதியுடன் சாப்பாடு முடிந்த பிறகு கண்கள் சொக்கும் சமயம் ஏதாவதொரு பெங்காளி படமோ மலையாளப் படமோ அது கலர் படமாக இருந்தால் அதனை கருப்பு வெள்ளைக்கு மாற்றி விட்டு brightness colour saturation contrast என சகலத்தையும் சரி தெய்து sharpness -10 என வைத்து, " இது ஒரு அற்புதமான படம்டா. 70's ல.." என அதற்கு ஒரு intro கொடுத்து.." பாருங்கப்பா. பாத்தப்பறம் பேசுவோம் " என்றவாரு 18ல் A/C வைத்து தூங்கப்போய்விடுவார். தூங்கும் போதும் தொப்பி Scarf அனிந்தே இருப்பார்.

"கலர்லன்னாலும் பரவால்லைங்க.. Black & white ல எப்படி செந்தில் ?"

"அதுல தாங்க depth அதிகம். Colors emotions அ distract பண்ணிடும்னு சார் அடிக்கடி சொல்லுவார்."

"அதெல்லாம் சரிதாங்க. சொதி சொக்க வைக்குதே. எப்படிங்க இத பாக்கறது.."

படம் போட்டு பதினைந்து நிமிடங்கள் கதைக்களம் கதாபாத்திரங்கள் கதைப்போக்கு என தெரிந்து கொண்டபின் இருவரும் சிரித்துக் கொள்வோம். மெல்ல ரிமோட் எடுத்து 4× fast forward செய்து ஓட்ட காட்சிகளை மனதில் பதியவைத்துக் கொண்டு towards climax மறுபடியும் நிதானமாக ஓட விட்டு ஒருவழியாக முடித்து இரண்டு மணி நேரம் கழித்து climax பார்க்கையில் சார் நிற்பார்.

"என்னடா.. எப்படியிருந்தது படம் " கைகளை கன்னத்தில் புதைத்தவாறு அமர்வார். Let's start..

படத்தின் ஆரம்பத்தை விலாவாரியாக விவரித்தபின்.. " அப்படியே போகுதுங்க சார்.. வாழ்க்க அவன ரனப்படுத்தி சூன்யப் பெருவெளியில தள்ள ஒரு வழியா மீண்டு வந்து அவன் அவள பாக்குறான்.. ரெண்டு பேரோட emotions மட்டும் தான்.. the deep n intense eyes..அப்படியே பாத்துட்டே இருக்க கன்னம் வழிய.. freeze sir. "

அவரை உற்று பார்த்தபடியே இருப்போம். சிக்கல் என்னவென்றால் பாலுமகேந்திராவின் கண்களை நாம் பார்க்க முடியாது. Coolers உடனே இருப்பார். தீவிரமாக எதையாவது விவாதித்தபின் கண்ணாடியை கழட்டுவார். Occasionally he used to remove his specs. அச்சமயங்களில் அவர் பார்வையை எதிர்கொள்ளவே முடியாது. தீர்க்கமாக நம்முள் ஊடுருவும் அது.

" This is the film. இதுதானடா.. இதத்தான் கத்துக்கணும் நீங்க. " திருப்தியுடன் எழுவார். எங்களுக்கு அப்போது தான் உடல் தளரும். எப்படியோ ஒரு கதைய சொல்லி escape ஆயிட்டோமே.

"சரிடா நான் மௌனி வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன். போகும் போது மறக்காம அம்மாவுக்கு brown bread வாங்கிட்டு போய் கொடுத்துடுங்க."

தப்பித்தோம் என சிறகடித்து பறப்போம். அடுத்த நாள் அசோகமித்ரன் ரித்விக் கட்டக் அரவிந்தன் என இந்த monotonous வாழ்க்கை தொடர்கையில் பல தயாரிப்பாளர்களை சந்தித்து பேசி அலுப்புற்று சோர்ந்து திரும்புவார். எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் நாங்களும் தளர்ந்து போக ஒரு நாள் வெற்றி மாறன் சார் சொன்னார்," நம்ம சார் இப்படி தான் இருப்பாரு. Once if he gets committed then you ll see an entirely different face of balumahendra. Very intense director he is. So.. அது வரையில நாம தான் அவர motivate பண்ணிட்டே இருக்கணும். "

"எவ்ளோ நாளைக்கி சார் சொதி சோற சாப்புட்டுட்டே.. it simply deteriorate us.."

அயர்ச்சியுடன் ஆபிஸ் வந்தால் பத்து மடங்கு கடுப்புடன் பாலு சார் வருவார்.
அந்த நாளை எப்படி கடத்துவதென தெரியாமல் தவிப்பார். யாராவது சந்திக்க வந்தால் பிரகாசமடைவார். மீரா கதிரவன் 'அவள் பெயர் தமிழரசி' கதையை சொல்வார். ராமசுப்பு(ராம்) 'தமிழ் M.A'(கற்றது தமிழ்) சொல்வார். சீனு ராமசாமி வருவார். பார்த்திபன் வந்து Threptin biscuit தந்து விட்டு போவார். விஜய்சேதுபதி தினேஷ் என நடிக்க வாய்ப்பு கேட்டு வந்து சாருடைய காமிராவில் போட்டோ பிடித்துச் செல்வார்கள்.

தவிர யாராவது பேட்டி என்றால் உடனே ஆயத்தமாகிவிடுவார். Framing ஐ அவர் தான் செய்வார். அவர் இருக்கைக்கு அருகில் இலைகளோ பூக்களோ இருக்கவேண்டும். Roll பண்ணுங்கப்பா..

"..ஆக இந்த பயித்தயக்காரத்தனத்த சகிச்சிக்கறவ தான் இந்த பாழாப்போன கலைஞர்களோட மனைவிமார்களா இருக்கறவங்க... இன்னும் மூனு படம் எடுக்கத்தான் nature என்ன விட்டு வெச்சிருக்கு.." நாத்தளுதளுக்க..
"Ok Cut." என்பார்.

அனைவரும் கலைய வெறுமை சூழும். அவர் அறைக்குச் சென்று ஒரு chocolate உறித்து உச்சுகொட்டியபடி, DVD க்களை அடுக்கி வைத்து அதற்கான Catalogue ஒன்று தயார் செய்து அதை சரிபார்க்க மணி 1pm.

"டேய் குமாரு. இந்தா போய் வசந்த பவன்ல வத்த கொழம்பு வாங்கிட்டு வந்துடு. நீங்க சோறு செஞ்சிடுங்கப்பா.."

மௌனம். மயான வெறுமை.

"அந்த A/C ய கொஞ்சம் கூட வைடா.."
"சார்.18ல தான் இருக்கு.."
"அப்படியா.. அப்ப இந்த fan அ போடு.
இந்த தனஞ்செயனுக்கு ஒரு DTP அடிக்கச் சொன்னேனே எங்கப்பா ?"

டேபிள் மேல் வைக்க..

"கமலுக்கு எழுதனது எங்க.." கொடுத்ததும்,"இத அவர் office க்கு post.. இல்ல வேண்டாம். நானே நேர்ல போய்.. i have to request him in person. உதவுவான்னு நெனைக்கிறேன்."

எங்களிடம் எந்தவித முகமலர்ச்சியும் இல்லாததால் ஏமாற்றமுற்று,

"ஏன்டா.. இந்த பாலா இப்படி பண்றான். காசில ஒரு schedule, முப்பது நாள் shoot பண்ணிட்டு வந்துட்டு அது சரியா வரல Reshoot செய்யணுங்கறான். எவ்ளோ பணம்.. கேட்டா 'நான் கடவுள்'ம்பான். நமக்கு அவனோட ஒரு schedule பணத்த கொடுத்தா இந்த Terrorist கதைய எடுத்திடலாம். ப்ச்..எங்க.. ஒருத்தனும் தர மாட்டேங்கறான். ம்ம்.. என்ன கத படிச்சீங்க இன்னைக்கி?"

அலுப்புடன் ஏதோ ஒன்று சொல்ல..

"என்னடா narration இது. யாருக்காக வாசிக்கறீங்க. ஒரு மண்ணு எழவும் இல்ல இதுல. இல்லடா Fire இல்ல. தீவிரத்தன்மையே இல்ல ஒங்ககிட்ட. என்னத்த கிழிக்க போறீங்களோ தெரியல. ஒங்க கைய புடிச்சி அ' ணா, ஆ'வண்ணா ன்னு சொல்லித்தர தான் முடுயும் என்னால. அத வெச்சி ஒன் கவிதைய நீ தான் எழுதனும். அதுக்கு அந்த வெறி வேணும்டா வெறி.பித்து பிடிச்சி அலைய வேணாமா.."

"சாரி சார். இனிமே.."

"இப்படியே இருந்தா துரு பிடிச்சு போயிடுவீங்கடா..ச்சே.."

சட்டென கண்ணாடியை கழட்ட உக்கிரமாக தணல் கக்கி... பின் மெல்ல கலங்கி நிற்கும் அந்த கலைஞனின் கண்கள்.

அவ்வளவு நேரமும் அவர் சொன்னது எங்களுக்கல்ல. 📚✒

(End of part - 8 )

****

No comments:

Post a Comment