இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Tuesday, 4 March 2014

வம்ச விருத்தி

வம்ச விருத்தி 

" ஊர்ல தல காட்ட முடியல.பாக்கறவனெல்லாம் இதே கேள்வி தான். தூக்கு மாட்டிகினு செத்துட்லாம்னு தோணுது "

" நீ பரவால்ல ஆம்பள. அப்டி போயிட்டு சேர்ல டிப் டாப்பா ஒக்காந்துண்ட்டு  வந்தா போச்சி. பொம்மனாட்டி என் நெலமைய யாரு கிட்ட சொல்லி அழுவறது. த்த.. இண்ணிக்கி பொழுதும் எங்க சித்தப்பன் பொண்ணு குன்னத்தூர்ல குடுத்துனு க்குதே. என்னவோட சின்னவ. அவ புள்ளைக்கு வளகாப்பு. என்னத்த சொல்ல.. பந்தல்ல ஜாதி ஜனமெல்லாம் என்ன அவ்வளோ எளக்காரமா பாக்கறாங்க. என் பெரியம்மா என் தவடையிலையே தட்டிட்டா. சீ ..நீயும் ஒரு பொம்பளன்னு இப்பிடி மிணிக்கினு வந்துட்ற - ன்னு . ..ன்னா சொல்லுவ.."

ஆளுக்கொரு சுப நிகழ்ச்சிக்கு சென்று எப்பொழுதும் போல் கூனி குருகிப்போய் வீடு திரும்பி புலம்புகிறார்கள். உற்றார் உறவினர் என்று  எந்த நிகழ்வானாலும் தவறாமல் கலந்து கொள்ளும் பழக்கமுடையவர்கள் இருவரும். அதுவும் சமீப காலமாக சுக துக்க கூடலில் அழையாவிடினும் சென்று வருகிறார்கள்.

" கல்யாணம் கருமாதின்னு ஒன்னுதுக்காவது போனா வந்தாத்தானே. இன்னார் புள்ளைங்கன்னு தெரியும். நாலு வரன் அமையும். இந்த வயசிலையும் நடக்க முடியாம இந்த கால வெச்சிகினு அத்தனைக்கும் நானே போய்கினு க்கறேன்.அப்புடியாவது யாராவது பாக்க மாட்டாங்களா ஏதாவது அமையாதாணு ஒரு நப்பாச.." சுவரில் சாய்ந்து கைகள்  ஊனி  உட்காருகிறாள் அம்மா.

"..நாளைக்கே செத்து பூட்டம்னா எப்படி வாழுங்க இந்த புள்ளைங்க. போய்ப்பாரு. IAS கலேட்டறு கூட குடும்பம்,அத்த, மாமான்னு எப்படி 'களோ முலோ'ன்னு பந்தில சிரிச்சி பேசிட்டு போறான்னு. அவனவுடவா. ரெண்டும் ரெண்டு விதம். அந்த புள்ளைக்கி ஏதும் சரியா அமையல. நானும் போகாத கோயிலில்ல, செய்யாத பரிகாரமில்ல. சரி அவளுக்கு தான் அப்படி தாமதமாகுதுண்ணா இவனுக்காவது முடிச்சிரலாம்னு பாத்தா ஒத்து வந்தா தான.பெருசா ஏதோ கிளிக்கிறானாம் .ஊரு ஒலகத்துல எவனுமே புடுங்காதத. மத்தவனெல்லாம் கல்யாணாம் பண்ணிகினு வாழல. இப்ப தான் அப்படியே பதனாறு வயசா. தளமுடில்லாம் இப்பவே வெழுத்துகிச்சி. இதுல தாடி வேற. ரோட்ல தல காட்ட முடியல. போறவ வரவெல்லாம் கேக்கறா.என்னாடி ஆச்சி உன் பையனுக்கு. இப்பிடி சுத்தறானேன்னு. என்னா சொல்லுவ.இந்த லட்சனத்துல எந்த பொண்ணுன்னு பாக்கறது  இந்த அழகனுக்கு. எப்ப இந்த வூட்ல நான் பேரன் பேத்தி எடுக்கறது. அது.. வளத்தது சரியில்ல. போதா கொறைக்கு சேர்க்க வேற. எவனோ தமிழ்நாடனாம் . கல்யாணம் பண்ணாம ஒன்னும் பண்ணாம அத்தையும் இத்தையும் பேசிகினே காலத்த ஒட்றானாம். அவனாண்ட சேந்துகினு விடிய விடிய பேசறது. என்னுமோ சுத்துற ஒலகத்தையே நிறுத்திட்றவணுங்கலாட்டும் . அவனுக்கு பரவால்ல. இனிமே ஒன்னும் இல்ல. ராவிக்கும் பேசிபுட்டு விடிஞ்சதும் தூங்கிடுவான். நாம அப்படியா. எல்லார் மாறியும் குடும்பம் கொழந்த ஒரு வேலன்னு சமுதாயத்துல கவுரமா வாழ்ந்து காட்டனா தான ஆம்பள. "

" ..த்தா..எக்கா.. செத்த சும்மா கெடக்கறையா. பேசி எதனா ஆவப்போதா. அதது நடக்கற காலத்துல நடக்கும். அவன் தான் இன்னும் ஆறு மாசத்துல நான் நல்ல நெலமைக்கி வந்துடுவேன் சித்தி. அது வரைக்கும் என்ன டிஸ்ரப் பண்ணாதீங்கன்னு சொல்றானல்ல. ஆக்கப் பொருத்தவளுக்கு ஆற பொறுக்கலையா. த்தா.. ஓடிடப்போது ஆறு மாசம்."

 " நீ கொஞ்சம் மூட்றி. வண்ட்டா நீட்டிகினு. அவன் சொல்றானாம் இவ கேட்டுகினாலாம். ஒனக்கென்ன தெரியப்போது எங்கஷ்டம். நீ ஓங்கோயிலே கதின்னு கெடப்ப. இந்த மாதிரி எத்தன ஆறு மாசத்த பாத்துனு க்கறம் நாங்க தெரியுமாடி ஒனக்கு?

" சரியா எக்கா. அதுக்கு என்னா பண்றது சொல்லு.எல்லாருக்கும் ஒரே மாறி அமையுமா.அஞ்சி வெரலும் ஒரே மாதிரியா க்குது. எதுக்குமே கடவுள் மனசு வெக்கணும்."

" ஆங்..வெக்கிது ஓங்கடவளு. சரி, நான் கும்பட்ற கடவளு தான் கைய விரிச்சிறிச்சி. தெனம் ஓயாம ஆறு வேல கும்பட்றயே முக்காடு போட்டுகினு. அத்த  செய்ய சொல்லு பாக்கலாம்."

" கர்த்தர் நாம கேட்ட வுடனேல்லாம் கொடுத்துட மாட்டார். நம்ம வேல ஜபிக்கறது மட்டுந்தான். நேரம் வரும் போது அவன் கொடுக்கறத யாராலும் தடுக்க முடியாது."

"..ங்கும். இதுல தடுக்க வேற யாரு இக்க போறாங்க. இன்னைக்கோ நாளைக்கோண்ணு  இழுத்துகினு கெடக்கறோம். புடுக்கு செத்தப்பறம் குடுத்து என்னாடிம்மா  புருவோசனம். இந்த வம்சம் விருத்தி அடையப் போறதுமில்ல. எங்கட்ட வேகப் போறதுமில்ல."

" இந்த முண்டய செத்த நேரம்  பேசாம இக்க சொல்றியா இவளே.." பொறுமுகிறார் அப்பா.

" நீங்க படுங்க மாமா. யக்கா.. செத்த  ஓய்யா ஏய். மாமா பாரு ஒடம்பு சரியில்லாத மனுசன கத்த வெச்சிகினு. பையன் வந்துடுவான். அரிசி எங்கக்குது சொல்லு. நானாவது ஒல வெக்கறேன்.பாவம் புள்ள பசியோட வருவான்."

" ஆமா கலேட்டறு உத்தியோகம் பாத்துட்டு வர்றான், தொறைக்கி நல்லா ஆக்கி கொட்டு. அவ்ள தான் நாலு வார்த்த கொட்டி தீத்தாச்சி. எல்லாரும் எதையாவது கொட்டிகினு மொடங்கலாம்  மிருகம் மாதிரி. குடும்பமா இது.."

" ஆயிரந்தான் இருந்தாலும் அவன் உன் புள்ள எக்கா. அவனும் போராடிகினுதான  க்கறான். "

" போராடி என்னாத்த பண்ணப் போறான். அதது அந்தந்த பருவத்துல நடந்தா தான். தெனம் பேப்பர்ல டீவீல சொல்றானே தெர்லையா. முப்பத்தஞ்சி வயச தாண்டிட்டா ரொம்ப கஷ்டமாம். அதும் இவன் குடிக்கற சிகரட்டு சாராயத்துக்கு வெளங்கிடும். இவனோட படிச்ச புள்ளைங்கல்லாம் கல்யாணம் கட்டி புள்ள பெத்து சமுதாயத்துல நாலு பேரு மெச்சற  மாறி எப்புடி டிப் டாப்பா வாழ்றாங்க . நான் என்னா  சொகத்த கண்டேன். இதுங்கள படிக்க வெக்கலயா, என் வவுத்த கட்டி கூட ஊட்டி வளத்தேன். யாருமே படிக்காத காலேஜுல படிக்க வச்சேன். வேற என்னா கொற  வெச்சேன். படிச்ச படிப்ப பயன்படுத்தி ஒரு வேலைக்கி போய் நல்லா வாழக்கூடாதா. இதுல வேற ஆவூண்ணா திர்ணாமல வேற போயிடறான் கூட்டம் சேந்துகினு. காவித்துணி மாட்டிகினு சாமியாராத்தான் போகப்போறான். இவன் வாழ மாட்டான்...வாழவே மாட்டான். எல்லாரும் குடும்பத்தோட பால்டாயலு குடிச்சிட்டு சாக வேண்டியத்தான். இந்த குடும்பம் நாசனமாத்தான் போகப் போது ." தேம்பி அழுகிறாள் அம்மா.வெடுக்கென கட்டிலிலிருந்து எழுந்து வந்த அப்பா,

" கண்டாரோலி முண்ட. " உதைத்ததில் சற்றே தள்ளாடி சுதாரித்துக் கொள்கிறாள் அம்மா.

"அடி... அடிச்சே கொன்னுடு என்ன. இப்படி எகிரிகினு ந்ததாலதான் அந்த காலு வெளங்காமப் போச்சி.."

" மாமா. நீங்க எதுக்கு இப்ப டென்சன் ஆவறீங்க. BP எரிடப்போது. ஏற்கனவே கைகாலு வராம இருக்கறீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சினா அப்பறம் இந்த புள்ளைங்கள யாரு பாக்கறது."

"அட நீ வேற சும்மா இரும்மா. செத்தா சாவறேன். இந்த முண்டையோட ஓரியாடறத்துக்கு அப்படியாவது போய் சேரலாம். பேசி பேசிதான் என்ன ஒலிச்சா. ஏதோ இந்த புள்ளைங்களுக்கு நல்லது நடந்துடாதான்னு உயிரை கைல புடிச்சிகினு காலத்த தள்றேன். இதுல தெனைக்கும் இவ பொலம்பளு  தாங்கள."

" நீ என்கிட்ட தான் வருவ. ஏன் ஒன்  பையனாண்ட காற்றது ஒன்  வீறாப்ப.இப்படி ஊற சுத்திகினு க்கறையே, உருப்படியா ஒரு வேலைக்கி போயி காலா காலத்துல கல்யாணம் பண்ணுன்னு சொல்றது, வரவன் போரவனாண்ட எல்லாம் என் மவன் அத்த சாதிப்பான் இத்த சாதிப்பான்னு ஜம்பம் அடிக்கறியே."

" எம் முன்னால கைய நீட்டி பேசணா எனக்கு பித்தம் தலைக்கி ஏரும்னு தெரியுமில்ல.."

எட்டி உதைக்க போனவரை தடுக்கிறாள் சித்தி.

"மாமா இப்ப சும்மா ஒக்காற்றீங்களா இல்லையா."

" ஏ.. அமாண்டீ. நான் அப்படி தான் ஜம்பம் அடிப்பேன்.என் மவன் பெரியாளா வரத்தான் போறான். " மூச்சிரைத்தபடி கட்டிலில் அமர்கிறார்.

"அதானே ஓங்க பையன உட்டு குடுப்பீங்களா." புன்னகைக்கிறாள் சித்தி.

" ஆமாண்டி எம்மா, நீ தான் மெச்சிகினும் ஒம்மாமன '

" ஏன்  எனக்கென்னடி கொற . சிங்கம்டீ நான். அந்த காலத்துல... சரசு நீ வேண்ணா பாருமா என் மகன் கல்யாணம் கட்டி அஞ்சி புள்ளைய வரிசையா பெத்து போடப்போறான். நான் அதுங்களாண்ட  வெளயாடியே சாகப்போறேன்."

" சந்தோஷம். அப்படி நல்லதாவே நெனைங்க. நல்லதாவே நடக்கும். கேட்டயாயா எக்கா மாமன் சொல்றத. எழு. போய் மூஞ்சி கழுவி தலவாரி பொட்டு வையி. வெள்ளிக்கெழமையும் அதுமா வூட்ல வெளக்கு  ஏத்தி ஒரு ஜபம் பண்ணுவோம். நான் காப்பி போட்டு எடுத்துனு வரேன்." கூந்தல் முடிந்தபடி சமையலறை  செல்கிறாள்  சித்தி.

" " அட்ரா செக்க அதான பாத்தேன். அடுத்தவன் தலைல இடியே வுழுந்தாலும் அலுக்காம சொல்லுவா 'அல்லேலூயா இந்த தர்மபுரிகாறி .."

"என்ன மாமா..?"

காப்பில சக்கர போடாதடீம்மா சரசு.."

" அறுவது வயசானாலும் அடங்குதாப் பாரு.." அப்பாவை முறைக்கிறாள் கட்டியவள். அந்த நேரம் பார்த்து,

" எக்கா..!எக்கா..?!" குளியலறை பக்கமிருந்து சித்தியின் வினோத ஒலி.
வேகமாக ஓடுகிறாள் அம்மா. இரு பெண்களும் கையில் எதையோ வைத்தபடி விழிக்க,கட்டிலிலிருந்து எழுந்து அவ்விடம் நோக்கி செல்லும் அப்பா. அவரை பார்த்ததும் வெட்கித் திரும்பும் சித்தி.

" என்னா சத்தம். அட.. என்னான்றேன்." திரும்பி நிற்கும் அம்மாவின் தோள்தொட்டு திருப்பி அவள் கையில் சித்தி திணித்ததை  பார்க்கும் அப்பா.
மூவரும் ஒருவரையொருவர் புதிருடன் கூடிய இனம் புரியா பரவசத்துடன் பார்த்தபடி உறைந்து போகிறார்கள்.

வீட்டில் விளக்கேற்றி 'ஓம்முருகா' 'அல்லேலூயா' எல்லாம் முடிந்து ஒருவித அமைதியுடன் அமர்ந்துள்ளார்கள் மூவரும். வழக்கத்துக்கு மாறாக டீவியில் ஜோராக பாடல்.

" ஏவாளுக்கே தங்கச்சித்தான் எங்கூடவே இருக்கா;
 ஆளுயர ஆலிவ் பலம் அப்படியே எனக்கா..!"

டப்.. டப்.. டப்.. அனைவரும் அலெர்ட் ஆகிறார்கள். அனைவரின் முகத்திலும் பரவசம். கதவை எப்பொழுதும்போல் அசதியோடு திறப்பவள் போல் முகத்தை அஷ்ட்ட கோணலாக வைத்தபடி திறக்கிறாள் அம்மா. எப்பொழும் கதவு திறக்கும் வரை சாதாரணனாய் இருந்து திறந்ததும் சிடுசிடுக்கிறான் கதையின் நாயகன்.

பேரமைதி. பளிச்சென வீட்டினுள் எல்லா லைட்டுகளும் மின்ன மூவரின் முகங்களும் ஜொலிக்கிறது. கணப்பொழுதில் அம்மாற்றத்தை உணர்ந்தவன் காரணம் தெரியாததால் விறைப்பாக உள்ளே செல்கிறான்.

" வா கண்ணே. நல்லா இருக்கயா  ?" சித்தி.

".. ஆங்.. எப்ப வந்தீங்..?

சித்தி பதில் சொல்வதற்குள் உள்ளே சென்று விடுகிறான்.மூவரும் சிரித்துக் கொள்கிறார்கள். குளித்து முடித்து சாப்பிட உட்கார,

" என்ன கண்ணே மதியம் சாப்ட்டயா.?"
" ரெஸ்ட் எடுத்தயா இல்ல காலையிலேயே போய்ட்டயா ?"
" ஆங் சித்தி. வீட்லதான் இருந்தேன். Evening தான் வெளில போனேன்."
"சரசு. அவன் சாப்புட்டும் வாம்மா இங்க.." அப்பாவின் கர்ஜனை.
" அவன் கிட்ட நாம ஏதும் தெரிஞ்ச மாறி காட்டிக்க கூடாது டீ ,வர சொல்லு அவள.." மனைவியிடம் ரகசியமாக சொல்கிறார்.
" ஏய் இவளே அஜீத்தப் பாறேன்.வெள்ள முடியோட சின்னப் பையன் மாறி என்னாவா ஆட்றான்."

நடப்பதெதுவும் விளங்கவில்லை அவனுக்கு.உள்ளறையை தாழிட்டு புத்தகம் புரட்டுகிறான். அவர்களின் திடீர் மாற்றத்திற்கான காரணம் யோசித்தபடி புத்தகத்தினுள் மூழ்கிப்போனவன் ஒரு மணி நேரம் கழித்து எதேச்சையாக   மதியம் பயன்படுத்திய ஆனந்த விகடன் அட்டைப்படம் பார்க்க.. அதிர்ந்தவனாய்  விழி பிதுங்க குளியலறை செல்கிறான். அவ்விடமுள்ள திட்டுமேல் மடித்து வைத்த தினசரி காகிதத்தை தேடுகிறான். இல்லை.இரண்டு கைகலாலும் தன்  முகத்தை மூடியபடி சுவரில் சாய்கிறான். இதயம் இடிக்கிறது.

" Oh, my god..! god..!! சொதப்பிட்டயேடா.."

நேரம் செல்ல நிதானித்து மெல்ல தன்  அறை  வந்து புத்தகமேந்தி நெடுநேரம் அமைதி காக்கிறான். மென்புன்னகை அரும்ப, மெல்ல நடந்து சென்று ஹாலில் தன் பெற்றோரைப் பார்க்கிறான். நெடுநாட்களுக்குப் பின் நிம்மதியாக உறங்குகிறார்கள். பெருமிதப்  பெருமூச்சு .திரும்ப வந்து லைட் அனைத்து படுக்கையில் படுக்கிறான். தன் பெற்றோருக்கு தற்காலிகமாக தன்னாலான நம்பிக்கை கொடுத்த திருப்தியில் இமைகள் இளகுவாய்  இணைய அன்றிரவு அவனும் நிம்மதியாகவே உறங்குகிறான்.

                                                                 *****

1 comment: