இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 9 March 2018

களவாடிய பொழுதுகள்



ஒளி ஓவியரின் படம் . சிக்கலான மனிதர். இதற்கு முன்பான படமான அம்மாவின் கைப்பேசியால் நம்மை charge down ஆக வைத்தவர் என்பதால் சற்றே பயத்துடனே பார்க்கச் சென்றோம். ஆனால் அன்றைய அழகி போல் ஒரு அழகனை காட்டிவிட்டார்.

தமிழரின் நவீன வாழ்வானது தரிகெட்டு தான்தோன்றித் தனமாக சென்று வெகு காலமாகிறது. நமது பண்பாடு உறவுகளுக்குள் இலையோடும் மாண்பு அறநெறி என மிகவும் பலம் வாய்ந்த இச்சமூகம் வளர்ச்சி என்ற பெயரில் சீரழிந்து போனதின் விளைவை நாம் அறிவோம். நிலம் மொழி கலாச்சாரம் என நம் அடையாளங்கள் அத்தனையும் சூரையாடப்படுவதை பார்த்து வருகிறோம்.

எல்லா வகையிலும் தளர்வுற்றிருக்கும் இந்நிலையிலிருந்து நாம் மீள எல்லாத் துறைகளிலும் மாற்றம் நிகழ வேண்டியுள்ளது. கலைத்துறையில் அவ்வகையிலான மீட்டெடுப்பாக்கங்கள் ஆங்காங்கே நிகழத்துவங்கியுள்ளது.
இந்த இடத்தில் தான் தங்கர் பச்சான் சீனுராமசாமி போன்றோரின் கதையாடல்கள் முக்கியத்தும் பெருகிறது. தொடர்ந்து தமிழரின் வாழ்வை உறவுகளின் மகத்துவத்தை பதிவு செய்தபடி வருபவர்கள் இவர்கள்.

தங்கரின் படத்தில் அழகியல் கூறுகள் சற்றே குறைவாகத்தான் தென்படும். ஆங்காங்கே பிரச்சார தொனி பிதுங்கி நிற்கும். அது மையக்கதைப்போக்கை சிதைப்பதோடு அல்லாமல் பிரச்சார பாடுபொருளையும் நீர்த்து போகச் செய்யும். இப்படத்திலும் அப்படியே. இருப்பினும் படம் முடிந்து வெளியேறுகையில் நம் மனம் நாம் தொலைத்த எதையோ நினைத்து ஏங்கித் தவிக்கும். இவ்விடத்திலே தான் கலைஞராக தங்கர் பச்சான் பிரகாசிக்கிறார். தர்மதுரையில் சீனு ராமசாமியின் இடமும் இதுவே.

கதாபாத்திர வடிவமைப்பில் தெளிவின்மை தெரிகிறது. பொற்செழியன் கோட் சூட்டுடன் தன் காதலியின் கணவருடைய அலுவலகத்தில் பணியாற்றுவது நெருடல். அது போலவே பூமிகா தன் காதலனுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப் போவதை அறிந்தவுடன் காட்டும் முகபாவம். அழகி தனத்திடம் இம்மியளவும் இப்படிப்பட்ட உணர்வை காண முடியாது.

"இன்னும் அந்த பழைய செருப்ப எடுத்து வெச்சிகினு.. நீ நல்லா இருக்கணும் சண்முகம் " கண்டிப்பும் அக்கறையும் காதலும் கண்ணியமும் ஒருங்கே வழிந்தோடிடும் தனத்திடம்.

ஒரு வகையில் இது காலமாற்றத்தின் விளைவாகக் கூட பார்க்கத் தோண்றுகிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் அரிதாகிப் போனார்களோ?

பூமிகா மாத்திரை சாப்பிட்டு மயங்குவதும் நெருடலே. இது போன்ற இடர்களை மறக்கடிக்கச் செய்யும் காட்சி தான் அவர்கள் இருவரும் அனிச்சையாய் கட்டியணைத்த பின் சட்டென விலகி நிற்பது. இதை வழியுறுத்தவே இப்படம்.

2003 ல் பெசன்ட்நகர் கடற்கரையில் தென்றல் படப்படிப்பு நிகழ்த்திக் கொண்டிருந்தார் தங்கர். குரங்கை வைத்து விளையாட்டு காட்டும் காட்சியது. நீண்ட நேரமாக அக்குரங்கின் ஒத்திசைவிற்காக காத்திருந்தவர் சட்டென அவர் நினைத்தபடி அது நடக்க Crane ல் ஏரி படம் பிடிக்க துவங்கி விட்டார். உதவியாளர்,

"சார். ரெண்டு நிமிஷம். லைட்டு வந்திடும்.." என சொல்ல,

"ஏ..போங்கடா..பெரிய லைட்டு.ரெடி..கேமரா.."

என அக்காட்சியை எடுத்து முடித்து திருப்தியுடன் இறங்கினார்.

குரு பாலுமகேந்திரா கூறுவார், " ஒரு இயக்குனர் தான் பகிர நெனச்ச உணர்வ பார்வையாளனுக்கு கடத்தறாராங்கறது தான் முக்கியம். அது நிகழ்ந்துட்டா போதும். திரைமொழி இலக்கனம் அழகியல் மத்ததெதுவும் முக்கியமில்லடா."

மகேந்திரன் அவர்களின் 'சாசனம்' பார்த்த பிறகு எங்களுக்குள் நடந்த உரையாடலில் இவ்வாறு கூறினார்.

2009 ல் களவாடிய பொழுதுகள் படப்பாடலான சேரனெங்கே சோழனெங்கே.. படப்பிடிப்பின் போது தங்கர் அவர்களை சந்தித்தேன். "அண்ணார் எப்படி இருக்காங்க.." என பாலுமகேந்திராவை பற்றி விதாரித்தவர்,

"பழச்சாறு சாப்படறீங்களா இல்ல தேநீர் அருந்தறீங்களா. தம்பிக்கு இருக்கை கொடுங்க.." என்றார். சில நொடிகள் தடுமாறித்தான் போனேன்.

அப்போது இயக்குனர் மகேந்திரன் தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த சிறந்த நடிகரென பிரபுதேவாவை குறிப்பிட்டு ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை குறிப்பிட்டேன்.
"ஓ.. அப்படியா.. மிகச்சரியா சொல்லியிருக்காங்க. இந்த படத்துல நானே அவர் நடிப்ப பாத்து அசந்துட்டேன்.." என்றார்.

பொய்க்கவில்லை.மௌனத்தின் அத்தனை பரிபாணங்களையும் வெளிப்படுத்தியுள்ளார் பிரபுதேவா.

பாலு சார் இறந்தபோது அஞ்சலி செலுத்த வந்திருந்த தங்கர் பச்சான் அங்கே நடமாடிக் கொண்டிருந்தவர்களை சாதாரன கிராமத்தானாக வெள்ளந்தியாய் வெறித்தபடி நின்றிருந்தார். அக்கணங்களின் நீட்சியே அழகியாய் தலைகீழ் விகிதங்களாய் ஒன்பது ரூபாய் நோட்டுகளாய் களவாடிய பொழுதுகளாய் பறந்து விரிந்து கிடக்கிறது. விழுமியங்களை தாங்கி வந்து வருடும் இத்தென்றல் தற்போதைய வேனிற்காலத் தேவையே.

***

No comments:

Post a Comment