வீடு 🏡
------------
தான் வசிக்கும் வீடும் அலுவலகமும் எப்போதும் சுத்தமாகவும் பொருட்கள் பாங்காக அடுக்கியும் வைத்திருக்க விரும்புவார் பாலு சார். ஆனால் அகிலாம்மா வசிக்கும் வீடு அதற்கு நேர்மாறாகவே இருக்கும். இந்த காரணத்தைச் சொல்லியே தான் வேறு வீடு செல்வதை ஞாயப்படுத்துவார்.
'தூய்மையான இந்தியா'வைப் பற்றிய அரசாங்கத்தின் கண்ணோட்டமே ஆசானுடையதும். எது தூய்மை..?
அகிலாம்மா பராமறிக்கும் வீடானது குழந்தைகளின் பொம்மை வீடு போன்றதே. கலைந்து கிடக்கும். ஆனால் அதிலே வெள்ளந்தித்தனமும் ஜீவனும் நிரம்பித் ததும்பும். அவ்வீட்டில் தாவரங்கள் அணில் பூனை நாய்கள் என அஃறினையும் உயர்தினையும் இரண்டற கலந்திருக்கும். அவைகளே அப்பெண்ணின் உலகம். அதை உணராதவரில்லை அவர் கணவர்.
கடைசி சில வருடங்களாகவே எங்கள் அலுவலகத்தில் செய்யும் சமையலானாலும் உணவகங்கள் செல்லும் போதிலும் மறக்காமல் அகிலாம்மாவுக்கென ஒரு பார்சல் சென்றுவிடும். அவர் அன்பை இவ்வண்ணமே வெளிப்படுத்தினார்.
அகிலாம்மாள் வசிக்கும் வீட்டில் அவர் அருகாமையில் இருக்க இறந்துவிட வேண்டுமென ஏங்கினார். அப்படியே நிகழ்ந்தது.
**
தான் பிறந்த மண்ணை ஒரு முறையேனும் தன் வாழ்நாளில் ஸ்பரிசித்துவிட வேண்டுமென பலவருடங்கள் ஏங்கிக் கிடந்தார் பாலு சார். அம்மண்ணைப் பற்றி எப்பொழுது பேசினாலும் அவர் மொழி கவிபாடும். பின்னெழும் ஏக்கப் பெருமூச்சி அவ்விடத்தே மயான அமைதியை உண்டாக்கும்.
ஈழத்து எழுத்தாளர் எஸ். பொ. அவர்களும் ஆசானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்(மட்டக்களப்பு).
அவர் எழுதிய 'வரலாற்றில் வாழ்தல்' புத்தகத்தை பார்த்து,
'He just reflects our land and life there' கண்கள் மூடி சிலிர்ப்பார் பாலு சார்.
இருப்பினும் ஆண் பெண் உறவையும் சில மெல்லிய உணர்வுகளையும் தவிர சமூக அரசியலையோ ஆன்மிகத் தேடலையோ அவர் படங்களில் கையாண்டதில்லை.
ஆயினும், ஒரு கலைஞன் அவன் படைப்புகளின் வாயிலாக வெளிப்பபடுத்தியதைக் கொண்டே அவனை விமர்சிக்க வேண்டுமே தவிர வெளிப்படுத்தாததைக் கொண்டல்ல என்பதால் அக்காரணங்களைத் தவிர்ப்போம்.
'கனாக்காலம்' படத்தின் சிறப்புக் காட்சியைக் கான எஸ்.பொ. அவர்களை அப்போதைய '4 Frames' க்கு அழைத்துக் கொண்டு போனபோது அவருடைய 'சடங்கு' நாவலை நான் பாலு சாரிடம் படமெடுக்க கேட்டுக்கொண்டதை கூறினேன். மௌனமாக பயணித்தவர் திடமாகக் கூறினார்,
"இது வரையில பாலு எடுத்த படங்களிலேயே ரொம்பவும் ஆத்மார்த்தமாவும் வாழ்க்கைக்கு நெருக்கமாவும் இருந்தது தமிழ்ல அவர் எடுத்த மொத படமான 'அழியாத கோலங்கள்' மட்டும் தான். அதுதான் நாங்கள் சிறுவர்களாய் இருந்த போது வாழ்ந்த வாழ்க்கையையும் மண்ணையும் அப்படியே பிரதிபளித்தது"
**
தன் தந்தை தனக்கு எப்படியோ அப்படியே தன் மகனையும் வளர்க்க விரும்பினார் பாலுமகேந்திரா.
கணிதம், ஆங்கிலம், சமஸ்கிருதம் என போதித்ததோடு பெஞ்சமின் மகேந்திரனின் (பாலு மகேந்திரா) காதலுக்கும் உதவி இருக்கிறார் அவர் தந்தை பாலநாதன்.
"உன் காதலியை என்னிடம் காட்டு. நான் பார்க்கனும் ."
இருவரும் ஒளிந்திருந்து அவளைப் பார்ப்பார்களாம்.
" Do you Masturbate..?" - அப்பா.
" Yes dad.."
" How do you do..?"
" It's just like everybody else dad.."
" No. Do it with your saliva in hand. It'll arouse more pleasure.."
1940 - களில் ஈழ மண்ணில் அப்படியொரு வாழ்க்கை அது.
சிறுவன் மகேந்திரன் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவன். ஒரு நாள் தன் நாயிடம் பகடி செய்ய முற்பட்டு தன் வீட்டெதிரே உள்ள மரத்தின் மேல் ஏறி அங்கிருந்து கீழே குப்புற விழுந்து மூர்ச்சை ஆகிறான். படபடத்த நாய் அவன் அருகே சென்று தன் நண்பனை பிராண்டுகிறான். சிறு சலனமும் இல்லை. பரிதவித்தவன் வீட்டை நோக்கிச் சென்று அனைவரையும் அழைத்து வந்து தன் நண்பனின் முகத்தை மூக்கால் வருட,
"ப்பே ..!" - சிரித்தவாறு துள்ளி குதித்தெழுகிறான் மகேந்திரன்.
நிசப்தம்.
மௌனமாக தன் நண்பனை பார்த்தவன் மெதுவாகத் திரும்பிச் சென்று விடுகிறான்.
"நான் எவ்வளவு முயற்சி செய்தும், சாரி கேட்டும் ஒரு மாசம் என்னோடப் பேசவே இல்ல அவன். அன்னையிலேந்து அவன் கிட்ட அந்த மாதிரி விளையாடறத நிறுத்திட்டேன் நான்."
என்றும் தன் வீட்டில் எஜமானர்களாய் வாழும் வள்ளி,சுப்பு இருவருக்கும் நேரம் ஒதுக்கியப் பிறகு தான் மற்ற வேலைகளே ஆரம்பமாகும்.
ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பினோம். அசதியாக இருந்தார் சார். நான் விடை பெறுகையில் வாசலில் நின்றபடி ,
"டேய். நான் ஒனக்கு என்ன கொற வெச்சேன். வர வழியில ஒன்ன மாதிரி ஒருத்தன பாத்தேன். எவ்வளோ Healthy யா அழகா முகமெல்லாம் பிரகாசமா சிரிக்கிறான் தெரியுமா. நீயும் இருக்கயே.. அது.. ஒனக்கு செல்லம் கொஞ்சம் அதிகமாயிடுச்சி அதான். இன்னியிலேந்து ரெண்டு நாளைக்கி ஒன்னோட பேசப் போறதில்ல."
வீட்டினுள் நடந்தபடி,
"பசு,அப்பதான்டா இவன் சரிபட்டு வருவான்."
சினிமாப் பட்டறை வாயிலிலுள்ள பூச்செடியிடம் நடந்த சண்டை இது.
'இயற்கையில் கறைதல்' என்பதை கண்கூடாக கண்ட நாள்,அது. 🌿
( End of Part - 3 )
****
No comments:
Post a Comment