இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 7 March 2018

( குரு பாலுமகேந்திரா உடனான அனுபவத் தொடர் - பாகம் 7 )


நீங்கள் கேட்டவை 🎻

வீடு மற்றும் சந்தியா ராகத்தை அடுத்து தன் வாழ்க்கையின் பொற்காலமாக பாலு சார் சில்லாகித்தது'கதைநேரம்' எடுத்த காலகட்டத்தையே(2000). அப்பொழுது தான் வெற்றி மாறன், சுரேஷ்(எத்தன்) விக்ரம் சுகுமாறன்(மத யானைக்கூட்டம்) போன்றோர் உதவி இயக்குனர்களாக பாடம் கற்றனர்.

நாம் ஏற்கனவே பேசியதைப் போல் ஆண் பெண் உறவுகளின் சிக்கலை உணர்வுகளின் ஆழத்தை மிகத் துள்ளியமாக கையாளும் ஆற்றல் வாய்க்கப்பெற்றவருக்கு சமூகம் சார்ந்த கதைகளை கையாள்வதில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டது. கதை நேரத்திலும் அப்படியே ஆனது.

சில எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து வாரத்திற்கு ஒரு கதையென புதன் தோறும் 'சன் டிவி'யில் அரை மணிநேரப் படமாக இயக்கி வெளியிட்டார். அந்த ஒரு கதைக்காகக் குழுவில் அனைவரும் ஐம்பது கதைகளைப் படிப்பார்களாம்.

அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கதை தான் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களின் 'போர்வை' என்னும் சிறுகதை. சமூகம் சார்ந்த மிகவும் நுட்பமாக எழுதப்பட்ட பல உள்ளீடுகளை கொண்ட கதை அது.

ஒரே அலுவலகத்தில் தனக்கு கீழ் வேலை செய்யும் தலித் இளைஞரிடம் பொய் சொல்லி கடன் வாங்கிவிட்ட குற்ற உணர்வு தன்னை அலைக்கழிக்க அந்த எரிச்சலை தன் மனைவியிடம் காட்டிவிட்டு நிம்மதியாக தூங்கிவிடுவோமெனும் நம்பிக்கையோடு போர்வை போர்த்தி உறங்கப் போவார் அந்த பிராமனர். இது ஒரு அடுக்கு மட்டுமே.

இக்கதையின் களம் ஒரு காம்பவுண்டுக்குள் இருக்கும் இரு வீடுகள். கீழ் வீட்டு பிராமனர் ஒருவர் இறந்துவிட மேல் வீட்டில் இருக்கும் பிராமனர் வீட்டில் சமைக்க முடியாததால் யாருக்கும் தெரியாமல் சுவர் தாண்டி ஓட்டல் சென்று தன் குடும்பத்திற்கு சாப்பாடு வாங்கி வருவார் அவர்.

பாலு சார் 'திருடன்' என்ற பெயரில் இக்கதையை குரும்படமாக எடுத்திருப்பார். ஆக, தலைப்பிலேயே அவர் பார்வை என்ன என்பதை வெளிப்படுத்தி விடுகிறார். நுட்பமான கலைஞனாக அல்ல, சராசரி வாசகனாக கூட இக்கதையை நகைச்சுவையாக அணுகமுடியாது. ஆனால் அவர் எடுத்த படம் கிச்சு கிச்சு மூட்டுவதாகவே இருக்கும்.

சார் அடிக்கடி சொல்வார்.. 'ஒரு எழுத்தாளரோட கதைய திரைக்கதையா convert பண்ணனும்னா மொதல்ல அவருடைய ஆளுமைய தூக்கி எறி. அந்த வார்த்தை ஜாலமெல்லாம் படத்துக்கு தேவையில்ல. அந்த கதையோட கருவ மட்டும் எடுத்துக்க. நீ புதுசா ஒன் படத்துக்கான திரைக்கதைய எழுது'.

மாமல்லனின் கருவை உருவாக்கி காட்சி படுத்தியிருக்கும் விதத்தை கண்டோமானால் தெரியும் எழுத்தாளரின் ஆளுமையை தூக்கி எறிந்துவிட்ட காமிரா கவிஞரின் ஆளுமையை.

The duty of a film director is to focus more on the soul of the spectator.
- Ken Loach

பாலுமகேந்திராவிடம் சமூகம் சார்ந்து ஏதாவது உரையாடல் நிகழ்த்தினால் கன்னத்தில் கைவைத்தபடி மௌனம் காப்பதைப் பழகிய பலர் அறிவர். அதுசார்ந்து அவர் ஆழ்ந்து யோசிப்பதாக தோன்றும். அல்ல. அவரின் விருப்பமின்மையையே அப்படி வெளிப்படுத்துவார்.
Cinema is 'Passion 24 frames / second' என்பார். உண்மை தான். ஆனால் அவரின் அந்த ஆர்வம் மிக குறுகிய வட்டம் சார்ந்தது.

சினிமா பட்டறைக்கு அருகில் சாலை வியாபாரிகள் மீன் விற்று வந்தார்கள். அந்த துர்நாற்றத்தை தவிர்ப்பதற்காகவும் தன் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு அக்கடைகள் முகச்சுழிவை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும் அவர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி வந்தார். அச்சாலை தொழிலாளர்கள் மறுத்துவிட காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மட்டுமின்றி திட்டம் தீட்டியபடி காரில் அவ்வழியே வருபவர் திடீரென கீழிறங்கி அவர்களை படம் பிடிப்பார். இதை முதல் நாள் பார்த்தபோது சிலிர்த்துப் போனேன். "What an artist he is..?!"

பிறகுதான் தெரிந்தது அது காவலரிடம் காட்டுவதற்கான ஆவனமென்று.

அந்த வியாபாரிகள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள். பிடிவாதமாக இருந்தவர் ஒரு நாள் கூறினார்,

' இந்த உலகத்துல நாம மட்டும் வாழலியே. சினிமா நம்ம தொழில்னா மீன் விக்கறது அவங்க தொழில். பாவம் அவங்க எங்க போவாங்க..' கண்கள் ஈரமாக நெகிழ்ந்து போவார்.

தவறு அவரிடம் இல்லை. மூன்றாம் பிறை, வீடு, மறுபடியும் என உறவுகளை கையாண்ட படங்களை பார்த்தோமானால் இயக்குனராக அவரின் நுண்ணுணர்வும் கலையாளுமையும் தெரியும். அந்த அளவில் அபாரத் திறன் படைத்தவரே. ஆனால் அதைத்தாண்டி தமிழ் சினிமாவின் பிதாமகனைப் போன்ற ஒரு பிம்பத்தை ஊடகங்களும் விமர்சகர்களும் சினிமா ஆர்வளர்களும் கற்பித்து விட்டனர். அவரும் உள்ளூர அதை மௌனமாக சிரித்தபடி ரசித்தே பழகிப்போனார்.

கடந்த இருபது வருடங்களாக ஒரு நல்ல நடிகரான தன்னை அரசியல்வாதியாக பாவித்து இச்சமூகம் சாடுகையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்டு வரும் அதே நிலைமை தான் பாலுமகேந்திராவுக்கும் ஏற்பட்டது. நிலைகுலைந்து போவார் மனிதர்.

'Facts do not cease to exist because they are ignored '- Aldous Huxley 🎻

**
'திருடன்' குறும்படத்தைப் பற்றிய மாமல்லனின் ஆற்றாமை :
(இதைத் தொடர்ந்து போர்வை சிறுகதையும் திருடன் குறும்படமும் உள்ளது.)

http://www.maamallan.com/2014/02/blog-post.html?m=1

(End of part - 7 )

****

No comments:

Post a Comment