இரண்டாம் நாள் படப்பிடிப்பு. பெரியவரை காரில் அழைத்துச் செல்லும் பொழுது புலம்பியபடியே வந்தார். "ஐயா 12 மணிக்கு கூட்டினு வந்துடுவீங்கல்ல.." உடல் நிலை சரியில்லை அவருக்கு. முதல் நாளே காய்ச்சல் மலைப்பாதை வளைவுகளில் தலைசுற்றல் வாந்தி. பயத்துடனேயே அழைத்துச் சென்றோம். பயம் எமக்கு இருவகையில். ஒன்று, 95 வயது கிழவர் நம் பொறுப்பில் வருகிறார். ஏதாவது ஆனால் என்னாவது. மற்றொன்று, படப்பிடிப்பு பாதியில் நின்று போனால் என்ன செய்வது. அதுவரை அவரை பத்திரமாக பார்த்துக் கொள்வது நமது தலையாய கடமை. குழுவினர் காரில் வர மழையில் நனைந்தபடி பைக்கில் முன் சென்றேன். சற்றே சென்றதும் ஏதோ மனதுள் பிசைந்தது.
Achieving an appropriate balance between creating an authentic, compelling film and protecting actors rights is essential.
"ஐயா, வூட்டுக்கு போணும். கூட்டினு போறீங்களா.."
"ஆத்தா வையும். வூட்டுக்கு போகனும் வழி வுடு "
சப்பானியாக நச்சரித்தபடியே இருந்தார் தாத்தா.
இயக்குனர் தீவிரமாக கலைப்பணியில் மூழ்கி இருந்தபடியால் குழுவிள்ள அனைவரிடமும் புலம்பிய படியே இருந்திருக்கிறார். இயக்குனரின் பார்வைக்கு வர, " என்னங்க வேணும் ஒங்களுக்கு.. அதான் போயிடலாம்னு சொல்றோமில்ல. எதாவது சாப்பிடறீங்களா. கலை இவருக்கு.."
"ஐயா..எனக்கு எதும் வேணாங்கய்யா. ஆட்டுக்கு தான்.. "
"ஆட்டுக்கு என்ன ?"
"நேத்தே ஆடு மேய போவல. இன்னைக்கும் போவாட்டி பாவங்கய்யா பசி தாங்காதுங்க.."
அன்று அவர் வீடு செல்ல இரவு ஏழு மணியானது. அவர் நடிக்கும் கதாபாத்திரம் ஆடுகளுடன் கூடி வாழ்ந்து அதில் நிறையை உணரும் தன்மையைக் கொண்டது. சாலையில் எதேச்சையாக தென்பட்ட அப்பெரியவரின் நிஜ வாழ்க்கை இப்புனைவில் உள்ளவரை ஒத்திருந்தது கொடுப்பனை. ஆனால் அப்பெரியவர் இப்புனைவுப் பாத்திரத்தில் ஆடுகளுடன் நெறுங்கி பழகுவது போல் நடிக்க நிஜ வாழ்க்கையில் தன் ஆடுகளை பட்டினி போட வேண்டிவந்ததை நகைமுரணென்று நகைத்துக் கொள்ள முடியவில்லை.
அடுத்த நாள் கராராகவே இருந்தார். அன்று ஒரு ஆட்டுக்குட்டி தேவைப்பட்டது எங்களுக்கு. அவர் மகனின் கெடுபிடியைத் தாண்டி பணம் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றோம். அன்று ஏற்காட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு நீரோடையில் இறுதிக்காட்சி எடுக்கச் சென்றோம். போகும் வழியெல்லாம் பெரியவரின் நச்சரிப்பு. "ஆட்டுக்கு தீனி.."
"ஹலோ.. ஆங்..எல பறிச்சி வச்சிருக்கீங்கல்ல..வந்ததும் குடுக்கணும்.." நாங்கள் ஒத்திகை பார்க்காமலேயே ஒரு நாடகம் நடத்தினோம். வழியில் பிஸ்கட் போண்டா பிரியாணி என்று எதை கொடுத்தாலும் சிடுசிடுத்தபடியே இருந்தார்.
"ஆட்டுக்கு எல.."
"ஹலோ..எல ரெடி தானே..இந்த டீயாவது.. சரி வேணாம்னா வுடுங்க "
"ஐயா..டீ மட்டும் குடுங்க " வழிந்தார்.
குடித்து முடித்தபின் திரும்பவும் முகம் இறுக " ஆட்டுக்கு எல.." என்றார்.
உதவியாளன் கலை கடுப்பாகி
"ஹலோ..எல ரெடியா இல்லயா..வந்தனா வவுந்துபுடுவேன் பாத்துக்க.. ஆடு பசியா கெடக்குதுன்றேன். என்னா வெளயாடறியா நீ " கார் ஓட்டியபடியே கைபேசியில் கதைத்தார்.
"என்னா சொல்றான் அந்தாளு. எல ரெடியா இல்லயா கலை. " இல்லாத ஆளைப்பற்றி கேட்டார் இயக்குனர்.
"ரெடியா இருக்குதுங் சார். அருவிகிட்ட போனதும் நிப்பாங்க. மாப்ள.. இன்னும் பத்து நிமஷத்துல போயிடலாம் கவல படாத.." கலை பெரியவரை அப்படியே அழைப்பார்.
"நீ இப்டி தாண்டி மாப்ள சொல்லினு கெடக்கற ஒரு மணி நேரமா.."
"என்னா மாப்ள நீயி. ஒனக்காக வளச்சி வளச்சி எவ்ளோ வேகமா ஓட்டறேன். "
"நீ எனக்காக ஒன்னும் புளுத்த வேணாம் மாப்ள. ஆட்டுக்கு தீனி குடுத்தா போதும் "
ஒளிஓவியர் நடிகர் திலகம் இயக்குனர் இமயம் அனைவரும் காருக்குள் சுருங்கி அடங்கிப் போனார்கள்.
மலைப்பாதையில் ஓர் வளைவில் ஒரு மாடு மகிழுந்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. ஆட்கள் கூட்டமாக பஞ்சாயத்தில் ஈடுபட அவ்விடத்தை கடக்கையில் கிழவர் அவர் மடியிலிருந்த ஆட்டை இறுக அணைத்துக் கொண்டார்.
அதற்குப் பின் மௌனம் நிலவ அருவி வந்ததும் கலை காரை நிறுத்தியதும் இலை தழைகளை பறித்தபடி " மாப்ள ஆட்ட கொண்டா.." என்றதும் தாவிக்குதித்து ஆட்டை அவ்விடம் கூட்டிச்சென்றார் பெரியவர். ஆடு ஆனந்தமாய் மேய சால்வையை சுழற்றி தோள் மேல் போட்டபடி
"மாப்ள நான் ரெடி.."
பெரம்பாறை மேல் ஏறி நடிக்கத் தயாரானார் எங்கள் கதாநாயகன்.
***
No comments:
Post a Comment