சந்தியா ராகம் 🎵
இறப்பதற்கு முன் நாள் பாலு சாரை சந்திக்கச் சென்றபோது மிகவும் பயந்து தளர்ந்து காணப்பட்டார்.
"நீ வர்ற. பாலா வர்றான். வெற்றி வர்றான். ஆனா என் புள்ள வந்தானா? இல்லையே. நீங்கெல்லாம் தாண்டா என் புள்ளைங்க."
தேற்ற வழியின்றி சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தேன். அக்கணத்தைக் கலைக்க நினைத்து, அவர் ஏற்கனவே சொல்லிய அடுத்த படத்துக்கான திரைக்கதை வேலையை ஆரம்பிக்குமாறு சொல்லி,
கமல் ஹாசன் தலைமுறைகள் பற்றி பேசிய வீடியோவை போட்டுக் காட்டினேன்.
என் கைபேசியில் இக்காட்சியை காண்பிக்க நுனி நாற்காலியில் உட்கார்ந்தவாறு அதை பார்த்தபடி உடைந்தழுதார்.
நாங்கள் ஒருவரும் நம்பாத போதும் நண்பன் வசந்த் மட்டுமே உறுதியாகச் சொன்னான், "அவர் படம் எடுப்பார்."
தலைமுறைகள் நிகழ்ந்தது.
அவன் கூறியதைச் சொன்னேன். உற்சாகமானார். கதை விவாதம் நடந்தது. திரைக்கதையில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்தோம். தன் டிரைவர் சத்யாவை M.A. படிக்க வைத்தார். Black Tea கொண்டு வந்தவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
"மதியத்துல அவசியம் One hour, Rest எடுங்க சார்".
சத்யாவிடம், Daily இரண்டு 'Celin' Tablet கொடுக்கச் சொல்லி
"அப்ப நான் வர்றேன் சார்."
மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தவர் பிரிய மனமில்லாமல்,
" What's Going..?"
" Am writing my script sir. "
" You mean' 900 km'..?"
" Yes sir."
( அப்படத்திற்கு அவர் வைத்த தலைப்பு - 'பாதைகளும் பயணங்களும்')
" Good. Do it. நீ சொன்ன மாதிரியே எடுத்தயிண்ணா Surely, It's going to be a classical film. எதுக்காகவும் யாருக்காகவும் Compromise ஆவாதே."
Sure sir. Am going to odissa. Srikakulam Collector veerapandiyan friend of mine has invited me to meet the Tribals there.. "
" Good. Do it. You are always a traveller - பா. போயிட்டு வா. நாம பேசுவோம்."
" Sure Sir."
எழுந்தவனிடம்,
" Keep in touch with me.."
" Sure sir."
அறையை விட்டு வெளியேறியவன் சற்றே தயங்கி மறுபடியும் உள்ளே வந்து,
"சார். எனக்கு 'சந்தியா ராகம்' வேணும்."
ஏறெடுத்துப் பார்த்தவர், தன் அருகிலுள்ள Self -ல் இருந்து DVD எடுத்து என் கைகளில் வைத்து என் கண்களுள் தீர்க்கமாகப் பார்த்தார்.
"See you sir.."
அதுவே கடைசி சந்திப்பு.
**
"பாலு சார் விஜயாவுல அட்மிட் ஆயிருக்கார். வெற்றி சார் உடனே போகச் சொன்னார். ரெடியா இருங்க.." செந்தில் சொன்னார்.
அடுத்த பத்தாவது நிமிடம் ICCU சென்று பாலா சாரிடம் கேட்க,
"வெற்றிய வரச் சொல்லிடு.." என்றார்.
Dr. விஜயகுமாரிடம் பேசினேன்.
" He is very serious. Inform his relatives and friends."
" What happened doctor.?"
" He had Stroke as well as Myocardial Infarction."
நான் மௌனிக்க..
" What about his film,Thalaimuraikal. Is it Released..?"
" yes doctor. It's a successful film.."
" Good. Can i get a copy of that movie..?"
" Sure doctor."
அகிலாம்மாவிடமும் அர்ச்சனாவிடமும் டாக்டர் 10% வாய்ப்பிருப்பதாகச் சொன்னார்.அதையும் கடவுள் எப்படியாவது எடுத்து விடவேண்டுமென பிரார்த்தித்தேன். பிழைத்து படுக்கையில் பிணமாக வாழ்வதை கிழவன் விரும்ப மாட்டான். திருப்தியா சாவட்டுமே.வெற்றி சாரைக் கூப்பிட்டேன்.
"நம்ம சார் இன்னும் கொஞ்ச நேரத்துல இறந்திடுவார். நீங்க கெளம்பிடுங்கசார்."
பெங்களூருவில் இருந்து புறப்பட்டார்.
அடுத்தடுத்து ஒவ்வொருவராக சேர்ந்தோம்.
ராஜா. சுகா. சீனு ராமசாமி . ராம். Lawyer சுரேஷ். ரவி. அமர்நாத். கிருஷ்ணகுமார். அர்ச்சனா, Film school Students என கூட்டம் கூட,
"இது தான் ரயில் பெட்டியோ..!!!" திருமணம் ஆனப் பொழுதில் மட்டக்களப்பில் ஆச்சர்யப் பார்வை பார்த்த பெண் 'அகிலா' அதே வெள்ளந்திப் பார்வையோடு அனைவரையும் வெறிக்க,
அவரைப் பார்த்த அனைவரும் கதறினார்கள்.
அடுத்தடுத்து நிகில் முருகன் மூலம் செய்தி பரவ, பாலா சார் எங்கள் குருவின் தொப்பியை கொண்டு வரச் சொன்னார்.
செந்திலும் நானும் ICCU - வினுள் சென்று சாரைப் பார்த்தோம்.
மூச்சு விடுவதைப் போலவே பிரமை.
ஆசானின் கரம் பற்றினேன். நெற்றியில் உள்ளங்கை வைத்து என் கண்கள் மூடினேன். செந்தில் பாலுசார் கரம் பற்றி அவர் கண்களுள் ஊடுருவினார்.
அவருக்கு அவரின் அடையாளங்கள் அணிவிக்கப் பட்டது. அதே கம்பீரத்துடன் மருத்துவமனையை விட்டு அழைத்து வந்து அவருடைய சினிமாப் பட்டறையில் படுக்கச் செய்து கூட்டத்தினை கட்டுப் படுத்தினோம். அனேகமாக தமிழ் திரை உலகைச் சேர்ந்த அனைவரும், எழுத்தாளர்களும், சில தலைவர்களும் வந்து அஞ்சலி செழுத்தினர்.
அகிலாம்மா தன்னை உளுக்கி ஆறுதல் சொன்னவர்களை சற்றே விலக்கி தன் கணவன் முன் சென்று அவரின் நெற்றியில் மூன்று முறை சிலுவை இட்டு அந்த மனிதனின் நெஞ்சில் கை வைத்து கண்கள் மூடியவாறு சற்றே உறைந்திருந்தார். பிறகு சட்டெனத் திரும்பிச் சென்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். ஆலயத்தில் இருந்த அனைவரும் ஏதும் புரியாமல் விழித்தனர்.
'வம்சி புக்ஸ்' ஷைலஜா தன் குடும்பத்துடன் வந்து 'அப்பா,அப்பா' என கத்திக் கதறி அழுதது அனைவரையும் சிலிர்க்கச் செய்தது. சென்னை போன்ற மாநகரில் அவ்வழுகை ஒலி அசலான கிராமத்தை நினைவு கொணர்ந்தது.
பாரதிராஜா தலையிட்ட பின் பாலாவின் கெடுபிடி சற்றே தளற மௌனிகா அணுமதிக்கப்பட்டார். கிடைத்த கொஞ்ச நேரத்தில் அழுதபின் காமிராக்களை பார்த்தபடி "எம் புருஷங்க.." என விம்மினார்.
13 பிப்ரவரி 2014 இரவு முழுவதும் ஒரு கூட்டுப் பறவைகள் அனைத்தும் தங்கள் தாய்ப் பறவை உடனான நினைவுகளை கிளற சிரிப்பொலி சினிமாப் பட்டறையை அதிரச் செய்தது.
"Actual -ஆ இன்னைக்கு காலைலிருந்தே நாம இப்படி தான் ஜாலியா சிரிச்சிப் பேசிட்டு இருந்திருக்கனும்..தனக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்திட்டு திருப்தியா செத்திருக்கார் சார். எது..75 வயசா ?நீங்க வேற, கலையில தான் அவரோட ஜாதகத்துல பாத்தேன். Date of birth 1930 - ன்னு இருந்துச்சி." வெற்றி சார் கூறினார்.
பாலு சாரின் ஆத்ம விசுவாசிகளான முருகன் மற்றும் பாஸ்கர் இருவரும் அன்றிரவு அனைவருக்கும் ஈழத்து தேநீர் வைத்தும் பெண்களுக்கு மோர் பரிமாறியும் எப்பொழுதும் போல் கர்ம யோகிகளாகத் திகழ்ந்தனர். ஆனால், அந்த முருகன் ஊர்வலத்தில் தேர் மேல் ஏற முற்பட இறக்கி விடப்பட்டான். வந்தேறிகள் சிலர் தங்கள் விளம்பலுக்கு வழிவிடுமாறு சொல்ல ஏதும் அறியாதவனாய் எகிறி குதித்து சாலையில் கும்பலுள் ஒருவனாக நடக்கலானான். இந்நிகழ்வைப் பார்த்து பொங்கினார் செந்தில்.
ஸ்டில் ராபர்ட், சாரை சர்ச்சில் அடக்கம் செய்ய முயன்றார்.
கருணாஸ் சரக்கு பாட்டில்களை காருக்குள் வைத்து சாவியை டிரைவரிடம் கொடுத்தனுப்பியதால் தன் கூட்டாளிகளுடன் பெரும் அவஸ்தைக்குள்ளானார் .தன் மனைவியை இரவு இரண்டு மணிக்கு அழைத்து,
"கிரேசு.என்ன.. தூங்கிட்டயா.. ஒன்னும் இல்ல.. நான் பாலு சார் ஸ்கூல்ல தான் தம் அடிச்சிட்டிருக்கேன். சரக்கு கார்ல வச்சி சாவி ...வீட்ல ஏதும் சரக்கு இருக்கு.. சரி.. சரி.. நீ படு.. நாங்க ராத்திரி பூரா இப்டிதான்....! "
நாங்கள் அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்க, லாயர் சுரேஷ் சார்(எத்தன்),
"Wife கிட்டே சரக்கு கேக்கறீங்க..?!"
" மனுஷனா பொறந்தா யாராவது ஒருத்தர்ட்டயாவது உண்மையா இருக்கணும். நான் என் பொண்டாட்டி கிட்ட இருக்கேன்.."
தூரத்தில் பாலு சார் அருகில் அமர்ந்தவாறு அவர் முகத்தை வெறித்தபடி அகிலாம்மா..!
லாயர் சுரேஷ் சார் மொபைலில் கருணாஸ் திரும்பவும்,
" கிரேசு.. தூங்கிட்டயா..ஒன்னியும் இல்ல.. தொடர்ந்து சரக்கடிச்சா காத்தால சார் ஊர்வலத்தள ஸ்டாமினா போய்டும். அதான் ஸ்டாப் பண்ணிட்டு ஒரு தம் மட்டும் அடிக்கறேன். எது.. இல்லமா.. அட.. நீ தூங்கு..நா இனிமே டிஸ்டப் பண்ண மாட்டேன்.. அட..கட் பண்ணிட்டா..!"
அனைவரும் விழுந்து சிரிக்க, அடுத்த டாபிக் அரங்கேறியது.
இரண்டு நாட்களும் வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி விட்டு ஒரு மூலையில் நின்று அனைத்தையும் வெறித்தபடி நின்றிருந்தார் ராஜா கருனாகரன் சார்.
('நாச்சியார்'- கதாசிரியர்.அன்றிரவு கூட்டத்தில் அதிகளவு எங்கள் ஆசானுடனான நினைவுகளைக் கூறி பகடி செய்தவரும் இவரே.)
மீரா கதிரவனை (விழித்திரு) சற்றே தூங்குமாறு அனுப்பி வைத்தேன். சென்றவர் இரவு முழுவதும் Phone செய்து,
"ரொம்ப Guilty -யா இருக்கு. எல்லா Ego வைராக்கியத்தையும் தூக்கிப் போட்டுட்டு அவர ஒருவாட்டி பாத்திருந்திருக்கணும். இப்ப Feel பண்றேன். எனக்கு அங்கயே இருக்கணும் போல இருக்கு. ஆனா முடியல" என்றார்.
" நீங்க நல்ல படம் பண்ணியிருக்கீங்க மீரா.."
" யாரு கேட்டா..இந்த மாதிரி சமயத்துல தான் சமூக வெற்றியோட மதிப்பு ரொம்ப புரியுது.." என்றார். அவரை தேற்றி தூங்க வைத்தேன். அடுத்து அரைமணி நேரத்தில் வந்து நின்றார்.
"இந்த கிழவன் இவ்ளோ கூட்டத்த சம்பாதிச்சது பெருசில்ல. அதோ. அந்த மூலையில மூணு மணி நேரமா ஒக்காந்திருக்காரே ஒரு பெரியவர். யார் தெரியுமா. நம்ம சொக்கலிங்க பாகவதரோட(வீடு)புள்ள. அதான் பாலு மகேந்திராவுடைய சொத்து.." என்றார் சுகா.
இளையராஜா தன் தோழன் அருகில் நின்று பிரார்த்தித்து மௌனமாகச் சென்றார்.
இறந்ததற்கு இரங்கல் சொல்வதைவிட முக்கியம் பெற்றதர்க்கு நன்றி சொல்வது என்றார்,கமல் ஹாசன்.
பாலு மகேந்திராவை ஐஸ் பெட்டியில் பார்த்ததும் உடைந்து அழுத பாரதிராஜா தேரில் தன் நண்பனைக் கிடத்தி வெய்யிலில் தானும் அவர் அருகிலேயே பயணித்து மின் தகன மேடை வரை வந்தார்.
பாலு மகேந்திராவின் மார்பில் கற்பூரம் ஏற்ற தகன மேடை அவரை உள்ளிழுத்துக் கொண்டது. சுற்றி நின்ற அத்தனைப் பேரும் உடைந்தழுதார்கள். சக்தியை இழந்த சித்தன் வானை வெறிப்பதைப் போல் செயலற்று சுவரில் சாய்ந்து கிடக்கிறார் பாலா. தகன மேடையில் நடக்கும் நிகழ்வுகளை பதட்டத்துடன் பார்த்தபடி சாரு நிவேதிதா .
சுகா ஒரு புறம், ராஜா கருனாகரன் ஒரு புறம் கதற, செந்தில் உடைந்து அழுகிறார். அவரை கட்டி அணைத்து,
"ங்கோத்தா.. என்ன.. ம்.. ஒண்ணுமில்ல.. வா.."
ஆச்சர்யம். வெற்றி சாரின் கண்களிலும் துளி.
இச்சூழலிலும் என் கண்களில் ஒரு துளி கண்ணீரோ மனதில் துயரமோ இல்லை. அனைவரையும் பார்க்கும் போது அவமானமாகக் கூட நினைத்தேன்.
ஒரு மணி நேரம் கழித்து, அஸ்தி எடுக்கப் போனோம். உடைந்து வெந்து சாம்பலான பாலு மகேந்திராவின் உடலை பானையில் போட்டு வெளியே கொண்டு வர,அனைவரும் வழிபட்டார்கள். வெற்றிமாறன், ராம்,செந்தில் மாரி செல்வராஜ் 'நான்' அனைவரும் காரில்'வீடு' திரும்பினோம். என் கைகளில் பாலு மகேந்திரா. கீழே வைக்க மனம் வராமல் சூட்டோடு கைகளிலேயே ஏந்தி வந்தேன் அவரை.
"ஒரு டீ சாப்புட்டு கெளம்பிடலாம்.." என்றார் வெற்றி சார்.
"நேத்துதான் நீ சாரப் பாத்தல்ல. அது ..ஒரு மாதிரி..அது.. நீ Gifted ப்பா.."
மௌனமாக டீ அருந்தி முடித்து அனைவரும் களைய, அவ்விடத்தே நிலைத்த வெறுமை என்னுள் புதைந்திருந்த ஆழ்கடலை திரட்டி எழுப்பி கண்கள் வழி கொப்புளிக்க உடைந்தேன் 'நான்'.
செந்தில், ஸ்டில் ராபர்ட்,அவர் மனைவி மூவரும் என்னை தேற்றினார்கள்.
எனக்குள் சினிமா புகட்டி சினிமாவில் என் முகவரியை நிலை நிறுத்திய
என் குரு, என் கிழ நண்பன் இனி இல்லை.
அன்று நான் கலங்கியதைப் பார்த்த பாலா என்னும் சினிமாப் பட்டறை மாணவர் என் கைகளைப் பற்றியவாறு,
" நேத்துதான் பாலு சார் 'மறுபடியும்'படம் போட்டுக் காட்டி அவனுக்கு ரொம்பப் பிடிக்கும் ஒரு நாள் அதப்பத்தி ஒங்க கிட்ட பேசச் சொல்றேன்னார்." என்றார்.
சரி தான். நிறைய வேலை இருக்கிறது. கிளம்பலாம். "ஆமா.சார் எங்க.. ? "
'அட. என்னையே நான் வெளியில தேடலாமா'.
**
பாலு மகேந்திராவை கடைசி காலகட்டத்தில் பிரிந்திருந்த அவர் மகன் ஷங்கி மகேந்திரா,
" Actual- ஆ நான் இந்த Death Ceremony- க்கு வரவேண்டாம்னு தான் இருந்தேன். but, இந்த procession - ல யாரோ ரோட்ல போற பெரியவர் எல்லாம் தன் செருப்ப கலட்டி விட்டுட்டு அப்பாவ கை எடுத்து கும்பிடறதப் பாக்கும் போது, அது அவ்வளவும் just அவருடைய படங்கள் மூலம் அவர் சம்பாதிச்ச மரியாதைன்னு புரியுது.
He might not be a good film maker. But he is an absolute film maker. அப்பாவோடய அஸ்திய அவர் பொறந்த இடத்துல உள்ள கடல்லயே கறைச்சிடறேன் ."
பாலு மகேந்திரா தன் சந்தியா ராகத்தை திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் நிகழ்த்த நினைத்தார்.அவருடைய சரிபாதி அஸ்தியை அவ்விடமே சேர்ப்பதாக பாலா சார் கூறினார்.
வடபழனி சிக்னலில் ஒரு மூதாட்டி பாடி பிச்சை எடுக்க, அவரை அழைத்து வந்து தலைமுறைகளில் ஒரு கதாபாத்திரம் உருவாக்கி நடிக்கச் சொன்னார். அவர் மறுத்து விட்டார். அவரை பாடச்சொல்லி பாலு சார் ரசிக்க நான் படம் பிடித்தேன்.
'தலைமுறைகள்' படத்தில் இறப்பதற்க்கு முன் மழையில் நனைந்தவாறு கூத்தாடியபடி தன் பேரனிடம் அவர் பேசி நடித்த கடைசிக் காட்சி.
"தமிழ மறந்துடாதே. இந்த தாத்தாவ மறந்துடாதே.."
"I MAY BE A VULGAR MAN.
BUT, MY ART IS NOT..!"
கலையையும் கலைஞனையும் ஒன்றாக்கிடும் வேட்கையோடு
தன் மாணவர்கள் மூலம் தொடர்கிறார் ஆசான் பாலு மகேந்திரா.
நன்றி. 🎶
****