இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 24 September 2010

காரணம் வேண்டின்



பெரிதாய்
காரணம் ஒன்றும் தேவைப் படுவதில்லை
வாழ்வதற்க்கு.

உடம்பு வலி. கை கால் குடைச்சல்.
தூக்கமின்மை. ஒற்றைத் தலைவலி.
பல் சொத்தை. வாயுத் தொல்லை.
உக்காந்தா எல முடியல..
எழுந்தா நடக்க முடியல..


...போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும்
அறிய வலி நிவாரணி
- நர்கூஜ் தைலம்.

மழை நீரும்  மூத்திரமும்
தேங்கிக் கிடக்கும்
பொது கழிப்பிடத் தருகில்..
ஒற்றைக் குடையின் கீழ்   
விடிகாலை முதல் நள்ளிரவு வரை
சளைக்காமல் கூவி விற்பவர்.

Tooth Brush, Ear Buds, Kerchief,
செல்லரித்த கதைப் புத்தகங்கள்
விற்கும் குருடன்.

பரட்டுத் தலை, வரட்டுத் தோல்,
கிழிந்த பனியன்,
'இந்தியா டுடே' விற்கும் சிறுவன்.

யானைக்கால் கிழவனை
சக்கரத்  தகரத்தில் கிடத்தி
பிச்சை எடுக்கும்  சிறுமி.

சீழ் வடியும் புண்ணில்
ஈக்கள் மொய்க்க
எச்சில் இலையில் மிச்சத்தை
சிரித்தவாறு 
வழித்துத் தின்னும்
பைத்தியக்காரன்.

இரண்டு கால்களுமற்ற
பார்வையற்ற கிழவர் 
ரயிலில்
அலுமினியத் தட்டில்
தாளமிட்டபடி
பாட்டுப் பாடி
பிச்சை எடுக்கிறார்,

" யாரை நம்பி நான் பிறந்தேன்
  போங்கடா போங்க..
  என் காலம் வெல்லும்
  வென்ற பின்னே
  வாங்கடா வாங்க ."

பெரிதாய்
காரணம் ஒன்றும் தேவைப் படுவதில்லை
வாழ்வதற்க்கு.

                     ****

3 comments: