இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 30 December 2011

கணியன் பூங்குன்றன் என்னுள் கனிந்த தருணம்.


'சாதலும்  புதுவது  அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.'

- கணியன் பூங்குன்றன்.( புறநானூறு )

ஒன்னரை வருடங்களுக்கு முன்பு என் வலைதளத்தின் முகப்பு வரிகளாக கணியனின் இவ்வரிகளை இடுகையிட்டும் இதுநாள்  வரையிலும் அவ்வரிகளின் முழுமையை  உள்வாங்கவோ  அதனை நடைமுறைப்படுத்தவோ செய்ததில்லை. கடந்த ஆறுமாத கால  வாழ்க்கை கற்பித்த பாடங்களை கொண்டு நோககுகையில்..

முக்கியமாக, பற்றறுத்தல் பழகவே பிரியப்பட்டவனாயினும் இரத்த பந்தம் ஏற்படுத்தும் நெருக்கம், நடுக்கம்..      ' தானாடாவிடினும் தன் சதை ஆடும்'    எனும் கூற்றை எனக்குணர்த்தி வருகிறது.  பயணத்தில் என் நீட்சியான பைக்கில் பயணிக்கையில் பற்றருதொருபந்தத்தை அதனிடத்தில்  விட்டு விட்டு செல்கையில் பலகாலம் கழித்து என் கன்னங்களில்  வழிந்தோடிய உறவெச்சமும்,  'Helmet'- யினுள் வியாபித்த அழுகையொலியும் ' பற்று ' என்ற பதத்தை அலசுவதை விட்டு, அன்பின் அவசியத்தை ஆராய எனை வினவியது.

கடைசியாக கடவுள் கை விரித்த பிறகு தோள்சாய தாங்கி நிற்கும் மனமே மானுடப் பிறப்பில் மனிதன் பயில வேண்டிய பன்படவேண்டிய இடமாகப் படுகிறது. அவ்வகையில் தனி மனித லட்சியம், கொள்கை, தேடல் கடந்து  ஒருவன் தன வாழ்க்கையை கடவுளால் கைவிடப்பட்ட சகமனிதனுக்கு
அர்ப்பணிப்பதில் முழுமையடைகிறது  என உணர நேரிட்டது.

என் மற்றொரு பற்றருபொருள்  மனப்பிறழ்வு நோய்க்கு ஆளானதாக  மனோதத்துவ மருத்துவர்கள் அறிவித்த சமயமும் இதே உணர்வே மேலிட்டது.

( மனிதன், மனித வாழ்வின் சூட்சுமத்தை பிரபஞ்ச ரகசியத்தை முழுமையாக அறியாவிடினும் அறிந்தாற்போல் அனைத்தயும் அனைவரையும் கணித்து முத்திரை குத்திவிடுவதில்  வல்லவன் , [..the so called DOCTORS, WRITERS, etc.,] அவர்களால் அவ்வண்ணம் கணிக்கப்பட்டதோர் உன்னதாத்மா பலபேரின் வாழ்க்கையுள் ஒளியாக ஊர்ந்து தன்போல் யாவும் யாதும் பெறவேண்டி செயல்படுவதை மௌன சாட்சியாக பார்த்து கொண்டுதானிருக்கிறது இயற்கை. நிற்க.)

இருப்பினும் காலம் செல்ல செல்ல என் சிற்றின்ப தூண்டல்கள் தீண்டவே மீண்டும் உயிர்த்த பழகிய போக்குகள், அதன் தொடர்ச்சியாக அதனுடனான முரண், என கழிந்து வந்த நாட்களின் இறுதியாக கடந்த சில நாட்களாக கடைபிடித்து வந்த என் குருநாதன் பயில்வித்த நேர்மை,ஒழுக்கம்,திட்டம்,நிதானம் ஆகிய குணங்களை கடைபிடித்து வருகையில் ஏற்பட்ட உணர்வெழுச்சியின் உச்சமாக மார்கழி மாதக் காலைப்பொழுதில்,கடுங்குளிரில் வெந்நீர் கொண்டு குளிக்கையில், இதுபோல் தான் நினைத்தாலும் எதை கடைபிடித்தாலும் மாற்றிக்கொள்ள முடியாததோர் ( the so called..) வாழ்க்கை வாய்க்கப்பெற்ற என் பற்றுக்கானதோர் ஜீவியின் வாழ்வை எண்ணுகையில் சற்றுமுன் மேலெழுந்த உணர்வேழுச்சியாகப்பட்டது அதே வேகத்தில் அதர பாதாளத்தில் பணிந்தது.

அத்தருணம் என் அகத்துள் எழுந்த  எண்ணம்  இதுவே .

" கிட்ட இருக்கறதால தான நீ மத்த உயிர் பத்தி இவ்ளோ கவல பட்ற. ஒன் கிட்டக்க  மட்டுமில்ல, ஒலகம் முழுக்க ஒன் கண்ணுல படாத எத்தனையோ சக ஜீவிங்க ஒன்னால   நெனச்சி கூட பாக்க  முடியாத அளவு ரணமான வாழ்க்கைய வாழ்ந்துட்டு தான இருக்காங்க. இது ஒனக்கு தெரியாதா என்ன. ஆனாலும் எந்த நம்பிக்கையில அவங்கெல்லாம் வாழறாங்க. அந்தந்த உயிருக்கான வாழ்வாதாரம்னு, வசந்தம்னு கடவுள் ஏதோ ஒன்ன காட்டாமலா அவங்கெல்லாம் வாழ்ந்திட்டிருக்காங்க. அலறப்ப  தோள்  கொடுப்பியாம்.அது வரையில ஒனக்குன்னு விதிச்ச வாழ்க்கையில ஒன்  வேலைய மட்டும் நீ பாப்பியாம். என்ன சரியா.."

' சாதலும்  புதுவது  அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.'


குளித்து முடித்து பாதியில் விட்ட, 'Ernest Hemingway' - ன் ' கடலும் கிழவனும் ' நாவலை தொடர்ந்தேன்.
என் அகமாற்றத்தை சிறிதும் பொருட்படுத்தாது என்னை சுற்றி சக வாழ்வுகள் பயனித்தபடியே தானிருந்தது.


அப்பிரக்ஞையுடன் என் பார்வை அந்நேரம் அந்நாவலில் மட்டுமே குவிந்திருந்தது.

நாவலில் :

 கிழவா ! நீ  தூங்கவே  இல்லையே. பாதி நாள் - முழு இரவு - மற்றொரு நாளும் வந்துவிட்டது. இன்னும் நீ சரியாகத் தூங்கவில்லையே. மீன் நிதானமாக ஓடும்போது  நீ கொஞ்சம் உறங்கத்தான் வேண்டும். தூக்கமில்லாமல் மூளை தெளிவாயிராது.

" என் மூளை தெளிவாகத்தானிருக்கிறது. அதிகத் தெளிவாயிருக்கிறது. என் சகோதரர்களான வான் மீன்களைப்போல் என் மனம் தெளிந்தேயிருக்கிறது.
எனினும், நான் தூங்கத்தான் வேண்டும். எல்லாம் தூங்குகின்றன. சந்திரனும் சூரியனும் கூடத் தூங்குகின்றனர். காற்றில்லாத போது கடல் கூடத் தூங்குகிறது. "

***

பாடும் பறவை ஒன்று சோர்ந்து கிழவனின்  படகின் மேல் அமர்ந்துள்ளது. பருந்துகள் அதனை சுற்றி வளம் வருகின்றன.

கிழவன் கூறுகிறான் :

" சின்னஞ்சிறு பறவைச் சிறுமியே ! நன்கு இளைப்பாறு ! பின் வாழ்க்கை உனக்களிக்கும் சந்தர்ப்பத்தை  மனிதனைப்போலும், பறவைகளைப்போலும், மீன்களைப்போலும் தைரியமாக  ஏற்றுக்கொள். "

***

' சாதலும்  புதுவது  அன்றே ; வாழ்தல்

 இனிதென மகிழ்ந்தன்றும்  இலமே '.


                                                            *****



Sunday, 25 December 2011

" தாகம் மெய்யெனில் தண்ணீர் உன்னை அடையும்..!"

[ 'தமிழரின் சினிமா - காலத்தை மொழிகிற கதைகள்' ,என்ற தலைப்பில்,'காட்சிப்பிழை திரை' (டிசம்பர்' 2011) - தமிழ் திரைப்பட ஆய்விதழில் தங்கவேலவன் எழுதிய கட்டுரைக்கான மதிப்புரை.]

     'FIRSTISM' - என்ற புதியதோர் மெய்ஞான தத்துவ மரபொன்றை..! அறிமுகப்படுத்தி அதன் மூலம் கலைஞனின் அகந்தையொழித்தலின் அவசியத்தை உணர்த்திய அவ்வகத்தை அவர் வழியிலேயே ஆராய்கையில் பலகாலம் தான் கற்ற பெற்றவற்றைக் கொண்டு கலைஞனுக்குத் தேவையான சரித்திரப் பிரக்ஞை, தன் விழிப்பு, மதிப்பீட்டு நுண்மை மற்றும் குணங்களை.. உள்ளுள் ஊறவிட்டு அதன் பலங்களையும் பிழைகளையும் கருத்தில் கொண்டு ஆழ்ந்தாராய்ந்த பின்னரே இவ்வகம் வந்தடைந்த இடமிதென்பது தெளிவுறுகிறது.

        'FIRSTISM'.. 'FASCISM'.. என வி(இ)சங்கள் பல உழன்று வரும் காலத்தில் 'அறம்' ஒன்றே தன்னிசமாக, தன்வசமாக வாழ விழைபவன்.. அதை மீறும் நெருக்கடி ஏற்படின், 'ரஸவாதம்' தெரிந்திருந்தும் வெறும் 'ரசம்' உண்டு வீழ்வேனாயினும் அவ் வி(இ)சங்கள் கொண்டு வாழேனெனும் மிடுக்கு தெரித்தியங்கும் அகமிதாகப் படுகிறது.
  
      "அதெல்லாஞ்செரி.. இம்முட்டையும்  உள்வாங்கி பாத்து பாத்து படம் எடுக்கறது அவ்ளோ ஈசியா என்ன ?"

      " தாகம் மெய்யெனில் தண்ணீர் உன்னை அடையும்..!"
                                                                                                                             
        வாழ்த்துகள்.


                                                       ****

Friday, 9 December 2011

ஷோபாசக்தி' யின் 'கப்டன்' - கதையை முன்வைத்து..

இக்கதையின் துவக்கம் முதல் இறுதி  வரையிலுமான  எழுத்தாளரின் கதை சொல்லும் ஆளுமையைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன். ஒரு யுத்த பூமியில்,  ஒரு சாமான்யனின் வாழ்வை, ரணத்தை  இவ்வளவு அநாயசமாக பகடியுடன் கூறிய வேறெந்த கதையையும் நான் வாசித்ததில்லை. இக்கதையை முன் வைத்து 'தகவல் பிழை'  என்றெல்லாம்  சிலர் இணையத்தில் விவாதித்துக் கொண்டிருப்பதாக நண்பர் கூறினார். அது உண்மையே ஆயினும் அவர்களுக்கு என் குருநாதர் திரு. பாலு மகேந்திரா, அவர்கள் கலையை அணுகும் விதத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்ததை  தெரிவிக்க விரும்புகிறேன்.

" ஒரு படத்தப் பாத்தயினா அது ஒன் மனசுக்குள்ள போய் என்ன
பண்ணுதுன்னு தாண்டா  பாக்கணும். சினிமா மொழி, குறியீடு, படிமம், கத சொல்றவனோட அறிவு, அது இதுன்னு மத்ததெதுவும் தேவ இல்லடா. "

எவ்வளவு அறிவாளித்தனமாக கதை கூறியிருந்தாலும், "சோ வாட்..?" என்று அதை வெகு சாதாரணமாக நிராகரித்து  விடுவார்.

 " மனசத் தொடனும்டா அதான் கலை."

அப்பெரியவரின் வாழ்வை முன்வைத்து ஒரு வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் கதாசிரியர்.
கதைத்த விதத்தைக்  கொண்டு பார்த்தால் ஒரு கலைஞனாக, மனிதனாக தன் சக மனிதன் படும் துன்பத்தையும், துயரையும் கண்டு தன்னுள் எழும்
உணர்வுகளை சமநிலை தவறாமல் கலைஞனுக்குரிய நுட்பத்துடன் அணுகியுள்ளது தெரிய வருகிறது.

கடுந்துயர் வாட்டுமிடத்து  அப்பெரியவரின்  செயல்பாடுகள்  நம்மை நகைக்க வைக்கும் அத்தருணத்திலும்
நம் கன்னம் நனைவதை யாரும்  மறுக்க இயலாது.

அவ்வகையில் காலத்தால் அழிக்கவியலா உலக இலக்கிய வரிசையில் இடம் பிடிக்கிறது இக்கதை.

                                                                         ****

Thursday, 8 December 2011

..ப்ச்..

 பாலு சார வச்சி 'SCRIPT' எழுதிட்டிருக்கும் போது அவருக்கு EYE CHECK UP பண்ண போனா
CATARACT . நான் ஒடஞ்சே  போனேன். மனுஷன் தளர்ந்துட்டாரே. இவர நாம கலர் கலரா யோசிச்சி வச்சிருக்கோமே. Again the Oscillation starts as usual.

'Road script' - க்கு தாவிடுவோமா ?

 ராஜா கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வருது.

" நீங்க யேன் Script - அ ரெண்டு நாளைக்கு ஒருவாட்டி மாத்தறீங்க? " 

" 'தெர்ல'யே ராஜா..! "

எதுலயும் நெலைக்கவே முடியலே. 30 th வேனுவோட பிறந்த
நாளன்னைக்கு 'Tidel park' Road - ல Stills எடுத்துட்டிருந்தப்ப ( அவர இல்ல. ரோட்ட.!) Night Duty முடிஞ்சி வந்தவர  வழியிலேயே வாழ்த்திட்டு  போட்டா புடிச்சேன்.( ரோட்ட.!!)

அவரு கேட்டாரு..

" என்ன.. ரோட்ல..? "


" ஏனோ 'தெர்ல ' வேணு.. Road - ல தான் Comfort - ஆ Feel - பண்றேன். ஒரு எடத்துல என்னால இருக்க முடியறதில்ல.எப்பவோ வசந்த்தோட 'Train Travel ' பண்ணப்போ அவன் கிட்டே இதையே சொன்னேன்.

" Movement - ல ஒவ்வொரு Moment - ம் மாறிட்டே இருக்கறதால அடுத்தடுத்த Scenerio, Fresh - ஆவே பதியும் கண்ணுலேயும்,மனுசலேயும். ' BEING IN PRESENT ', Thoughts - க்கு வேலையே இருக்காது."

இதுவாவும் இருக்கலாம். இல்ல தொடர்ந்து ஒரு நெலையில இருந்தா வர்ற பயந்தான் காரணமா? 'தெர்ல'. ஆனா யார் என்ன சொன்னாலும் பாலு சார் கிட்ட இருந்து அவர அருகாமையில பாத்ததில ஏதோ புரிஞ்சிகிட்டேனோ என்னவோ 'தெர்ல'..

அவர பத்தின அந்த Script -ல பரவசமாயிட்டேன்.

But, ராஜா கேட்டாரு..

" பரவசத்த Express பண்ணிட்டீங்கனா அத எப்படி
'Observe' பண்ணுவீங்க? "

" 'Express'  பன்றோம்கற 'Awareness' இருக்கும்."

எம்.டி.முத்துகுமாரசாமி, ' பயித்தியக்காரத்தனத்துக்கும் அறிவாளித்தனத்துக்கும் நடுவுல ஊசலாடும் போதுதான் கலையும் எழுத்தும் பிறக்கும்'- ன்னு  எழுதியிருந்தாரு.

ராஜா எனக்கு அப்படி நேர்ந்திருக்கான்னு கேட்டப்ப..
பாலு சார் Script - ல 'Oedipus Complex'  எழுதின அனுபவத்தச் சொன்னேன்.

" எழுத ஒக்காரும்போது அந்த 'Idea' - வே  இல்ல. ஆனா அது அமைஞ்சது. இது MDMK சொல்றமாதிரியான்னு 'தெர்ல.."

" தெரியலேன்னா.. 'Watch' பண்ணலையா? "

சில நேரங்கள்ல, 'Breath Watch' பண்றேன்னு அவர் சொல்லும் போதெல்லாம் நமக்கு சங்கடமாத்தான் இருக்கும்.
(Unusual Mask like appearance in contrast to usual hyperexpressiveness.) But.. He is a Gem.

So, அன்னைக்கு வேலையெல்லாம்( வீட்டுக்கு Tablets - அ courier பண்ணி..) ஒரு வழியா முடிச்சி ரூமுக்கு வந்தேன் களைப்பா.

 கொஞ்சங்கூட சுவாரஸ்யமே இல்லாம பிறந்த நாளன்னைக்கு ஜடம் மாதிரி தாடிய  சொறிஞ்சிக்கிட்டு ஒக்காந்திருந்தாரு  வேணு.

கொஞ்ச நேரங்கழிச்சி...

அவர் சிரிச்சாரு. நானும் சிரிச்சேன்.

                                                                 ***

இந்த கலியுகத்துல அனுதினமும் சுட்டெறிக்கற சென்ன மாப்பட்டணத்துல விதியேன்னு வேல செஞ்சி
அலையிற லட்சோப லட்ச  மக்க கூட்டத்துல நாம எதுக்கு ஓடறோம் என்ன பண்றோம்கற  ஒரு யளவும் 'தெரியாத' மூணு ஜீவனுங்க ஒண்ணா குடும்பம் நடத்துதுங்க. தெச மாறி இருக்கற செருப்புகளப் பாத்து ராஜா வர்ற நேரத்த கணிச்சிகிட்டு ஒக்காந்திகினு இருக்குதுங்க ரெண்டு.

மூணு ஆஷ்பத்திரிகள்ள  ரெண்டு பேரு
வேல செய்யிறானுவோ. ஒருத்தன் அங்க போனா இன்னொருத்தன் இங்க வர்றான். இவன் அங்க போனா அவன் வேற எங்கயோ  போறான். திடீர்னு ரெண்டு பேரும் கூடி பெசிக்கறானுவோ,

 " மச்சி நான் நாளைக்கு இங்க பாத்துக்கறேன்.
நீ அங்க பாத்துக்க.' நான் இங்க வந்தப்பறம் நீ அங்க போவியாம்."

தன் கண்ணெதிரே நடக்கற இந்த மானுட விளையாட்டுங்க  எதுவும் 'புரியாம' தான் பண்றதும் என்னான்னு 'தெரியாத' குழப்பத்துல  சினிமா எடுக்கறேன்னு திரிஞ்சிகினு இருக்கறான் இன்னொருத்தன். 'Road Script'- ஆ? கோமாளியா? பாலு மகேந்திராவா? 'Crime & Punishment' - ஆ? எதுன்னு முடிவெடுக்க முடியாத நெலையில.. கெடச்ச கேப்புல தம்மபதம், Dostevesky -ன்னு  பிட்டு பிட்டா படிச்சிபுட்டு எதையோ புரிஞ்சிகிட்டாப்புல லைட்டயே உத்து உத்து பாத்துகிட்டு இழுத்து இழுத்து  மூச்ச உள்ளயும் வெளியயும் வுட்டு, நிதானப் பட்டுட்டோம்டான்னு நோட்டெடுத்து
குறுக்கும் நெடுக்குமா நடந்தாப்ல 'Scene' எழுதன திருப்தியில பாய விறிச்சி, Economy - ல A/C போட்டு நண்பர்கள் இல்லாத சுதந்தரத்துல ரெண்டு காலையும் ரெண்டு, கையையும் விறிச்சி
மல்லாக்க படுத்து   எப்டியோ இன்னைக்கு ஒரு வழியா 'ONE DAY MATCH '- ஆடி முடிச்ச திருப்தியில தூங்கப் போறான், தன் பேர 'ஆதவன்', 'கரிகாலன்',' மாமல்லன்'னு மாத்த நெனெச்சி எழுதி பாக்குற கேப்புல அந்த பேர்ல ஒரு சினிமாவே  ரிலீஸ் ஆவுற சூட்சுமம் 'அறியாத' தன் வாழ்க்க  'HIGH SPEED ' -க்கு ( 500 f/s ) மாறி பல வருஷமானத தன் நண்பன் பல வாட்டி போன் போட்டு சொல்லியும் 'புரியாத' புதிரான.. பசுபதி.

இவ்வளவு அளப்பறைக்கு அப்பறமும் ஒரு கேள்வி மட்டும் தொக்கி நிக்குது.

" இதெல்லாம் எதுக்கு..? "

உன்னியும் ஒரு நாப்பது வருஷம் கழிச்சி இதே கேள்விய கேட்டீங்கனாலும் நான் தோள்  குலுக்கி ஒதடு  பிதுக்கி தெளிவா சொல்வேன்...

" ....ப்ச்....?! "

                                                                    ***

Saturday, 8 October 2011

Loneliness

Loneliness - the crucial and vital part of each individual to know the ultimate aim of their existence on this planet.
                               ****

Sunday, 27 February 2011

Saturday, 12 February 2011

பகட்டுடுத்திய பயணம்

மாநகர்  விட்டு
ஊர் திரும்புகையில் 
வரவழைக்கப்பட்ட பகட்டோடு
தத்துவப் புத்தகத்தினுள்
முகம் புதைக்க

"ஊமையனூர் எறங்கு.."
மாமா அத்தை
சித்தி பெரிம்மா மச்சான்
கூட்டத்தோடு ஏறிய அச்சிறுவன்
என்னருகில் உட்கார்ந்து
அழகாக முறுக்குத் தின்றான்.

" யெம்மா ஒனக்கு.."

" ந்தாடா பையா கொய்யாக்கா.."

 வாங்குகையில் 
அது  உருண்டோட
தாவிப் பிடிக்க குப்புற விழுந்து
அவன் சட்டையில் அழுக்கு.

" அட்ராத் தாய்லி
 சட்டைய இப்புடி பண்ணிட்டயேடா .."
அப்பா அதட்ட,

பெரியம்மா பனங்கிழங்கு
உரித்த  கையால்
சட்டையை துடைக்க
இன்னும் அழகானது அது - மண்பட்டு.

எச்சில் தெறிக்க உச்சுக்  கொட்டி
மாங்கா தின்றான் சிறுவன்.

மௌன சாட்சியாக
அமர்ந்திருந்தேன் 'நான்'.

" அண்ணா சாப்புட்றியாண்ணா.."
மென் புன்னகையோடு தலையசைத்து
" நீ சாப்பிடு.."
சன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன்.

சிறுவனும் நானும்
ஒட்டியவாறு அமர்ந்திருந்தோம்
சிறுவன் முன்சீட்டு சொந்தங்களுடன்
அரட்டையடித்து கலைத்து
கண்ணயர்ந்தான்  என் தோள்மீது.

மாமா அத்தி சித்தி
பெரிம்மா  மச்சான்
அனைவரும்
கலைத்து கண்ணயர 

சன்னலில் வெறித்த
'என் பார்வை' மட்டும்
கடைசி வரை
அப்படியே நீடித்தது.

        ****

Tuesday, 4 January 2011

அகிலம் சுற்றி அகத்துள் முற்றிய அரங்கானுபவம்

அங்கிங்கெனாதபடி எங்கெங்கிளுமுள்ள திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்த்து தேவைகளை சேகரித்து, ஆவணங்களைக் கொண்டு நெய்த ஆடையினை உடுத்திப் பார்க்கிறேன் பரவசத்தில். அழகாய் தான் இருக்கிறது அணிந்த ஆடை. ஆனால் மனம் தான் அம்மணத்தை நாடியே பயணிக்கிறது. என் அம்மணத்தின் அடியாழத்தில் புதைந்து கிடக்கும் போக்கீஷங்களை, பிறவி சூட்சுமத்தை கடைந்தெடுக்க முனைகிறேன். நான் கண்ட படங்களின் மூலம், 'என் மூலம்' அறிய முற்பட்டு முனைப்போடு இயங்க இருண்டதோர் பொந்திடை தடைபட்டு விழுகிறேன். பிரபஞ்ச சிருஷ்டியின் சூட்ச்சுமம் புதைந்து கிடக்கும் மனிதனின் எல்லாக் கேள்விகளுக்குமான விடையை பிணைந்து வெய்த்திருக்கும் அவ்விருலினை  தகற்த்தெறிந்து மையம் தொட்டு ஐயம் விளக்க விளையும் அனைத்து ஜீவராசிகளின் வழியே யானும் கை கோர்க்கிறேன்.

திரைப்பட விழா :

உலகை சுற்றும் வாகனமாக நான் பயன்படுத்துவது. இம்முறை சற்றே தெளிவுடனும். கற்ற கல்வியாலும்,  உற்ற உறவுகளாலும், பெற்ற பக்குவப் பார்வையின் வாயிலாக உலகை சுற்ற.. அணி வகுத்து நிற்கிறது மானுட வாழ்வின் ரகசியம் களைய முனையும் கலைப்படைப்புகள். பல நாடுகள், பல மனிதர்கள், பல வாழ்முறைகள்
என பார்த்த, வெகுவாக பாராட்டப்பட்ட அனைத்துப் கலைஞர்களின் ஒரே நோக்கம் - 'இருளினுள் புதிந்துள்ள ஒளியினை அறியும் வேட்கை'.

பூட்டிய பூட்டினுள் புதைந்து கிடக்கும் சாவியின்  சூட்சுமம் சுமந்து நிற்கும் பேரிருப்பாய்  படர்ந்து விரிந்து எங்கெங்கிலும் வியாபித்திருக்கிறது இப்பிரபஞ்ச வெளி.

CRAB TRAP :

கனடாவின் சலனமற்ற இளைஞன் ஒருவனைக்  கண்டேன். கணத்தை முழுமையாக வாழ்கிறான். மானுடம் விதித்த கட்டுப்பாடுகளை எல்லாம் களைந்து காமப் பசிக்கிரையாய் கண்ட அவளை புசித்து காமத்தீயினில் கனன்று, தன்னை இழந்து, தன்னை  மீட்டெடுத்து  தனியனாய் படகினில் தவழ்ந்து செல்லும் இளைஞன். [தாமரை இலைமேல் நீர் போல..] பக்கத் துணையாய் சிறுமி நின்று கையசைத்து வழியனுப்ப விடை பெறுகிறான். அச்சிருமிக்கும் அவனுக்குமான அற்புதமான 'உறவு' மானுடம் இயங்குவதற்கான அடித்தளம்.

THE DREAMERS :

செய்து  வைத்த  வேலிகளைக்  கடந்து  அண்ணனும்  தங்கையும்,
அவர்களுடன்  சேர்ந்து  கொள்ளும் அமெரிக்க  இளைஞனும் வாழும் முப்பது நாட்கலும்,
அது  ஊதும் அபாயச் சங்கும், கடைசியில் வீடு திரும்பும் பெற்றோரின்  'மெளனம்' நம் அகக் கேள்விகளாக விரிகிறது.
காமத்தின் பால் எழும் புதிர்களை காட்டிவிட்டு லாவகமாக விடை பெறுகிறார் இயக்குனர்
'BERNALDO BERTOLUCCI' .

SILENT SOULS :

காமங்கடந்து மரணம் கடந்து  காதலிக்கும் 'அற்புதமாய்' பெண்ணை சித்தரிக்கிறார்
இயக்குனர். ருஷ்ய நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். வடமேற்கு  ருஷ்யாவின் பாரம்பரியம் தொலைந்ததோர்  நகரத்தின் வழி செல்லும் கணவனும், தன் மனைவியை காதலித்தவனும், அம்மண் இழந்த பொக்கீஷங்களின் முக்கியத்துவம் உணர்த்துகிறார்கள்.

THE BLUE BUTTERFLY :

எதையும்  வெல்லும்  வலிமை, மனிதன் கண்ட அதிநுட்ப உண்மை,  என அனைத்தையும் தகர்த்தெரியும் வலிமை இயற்கையிடமே உள்ளது. 'சரணாகதி' - தத்துவத்தை வெளிப்படுத்தியப்  படங்கள்..

1. THE BLUE BUTTERFLY,
2. THEMBA - A BOY CALLED HOPE ,

'தன்நம்பிக்கையே  கடவுள்' என்பதை உணர்த்துகிறார்கள் இவ்விரு  படங்களின்  சிறுவர்களும் .

கடவுள் - கட- உள்.., உள்- கட..  உள்ளே கிடந்து தன்னை அறிந்து பின் தன்னை கடந்து செல்லும் எங்கும் பிரகாசமாய் இருக்கும் பேரிருப்பின் ஓர் அங்கமாய் சங்கமிக்கும் வழியினை உணர்த்தின..

1. THE LAST SUMMER OF LA BOUTILA,
2. THEMBA - A BOY CALLED HOPE ,
3 .THE BLUE BUTTERFLY,
4. VELMA,
5. SILENT SOULS,  - போன்ற படங்கள்.

THE TREE :

கீதை சொல்லும்  'பற்றறுத்தல்'  வழியுருத்திய படம் - THE TREE .
கணவனை  இழந்த  மனைவியும், தந்தையை இழந்த  சிறுமியும் (ஒரே குடும்பம்) அவனின் நினைவாக அவர்களடைய வீட்டில் வளர்ந்த ஒரு மரத்தை பாவிக்க, பிள்ளைகளுக்காக தனக்கேற்பட்ட புது உறவை விட்டு விட்டு ஒரு பெரும் புயலில் அழிந்த வீட்டையும் அம்மரத்தையும் விட்டு வேறு இடம் செல்கிறார்கள் அம்மாவும், பிள்ளைகளும். தியாகத்தின்  அழகை காட்டிய  படம்.

மெளனம் :

...'ஆதியில்  ஒரு  சொல்  இருந்தது. பின் அது பிரபஞ்சமாக மாறியது'...
 - வேதம் கூறும் கூற்று இது. பரவலாக இத்திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களில் வரும் 'மெளனம்' எனக்குனர்த்தியதும் இதுவே. மெளனம் வெளிப்படுத்தாத எவ்வுனர்வையும் எந்த ஒரு சொல்லும் வெளிப்படுத்திவிடாது. அதனால் தானோ என்னவோ, வேதங்கள் அனைத்தும் சப்தத்தை மையமாகவே கொண்டுள்ளது. [ 'சமஸ்கிருதம்'- தாய் என்றால், 'தமிழ்'- தந்தை  அல்லவா..? ] வார்த்தைகளின் வீரியத்தை உணர்த்தியது ஈரானிய இயக்குனர், ABBAS KIAROSTAMI - யின்  'CERTIFIED COPY'.  வேறு எந்த ஒரு மொழிக்கும் இல்லாததோர் தனிச் சிறப்பு தமிழ் மொழிக்கு உள்ளதாகவே படுகிறது. என்னளவில், தமிழ் மொழியின் 'உச்சரிப்பு'ஏற்படுத்தும்
அனுபவம் மற்றமொழிகளில் கிடைப்பது  இல்லை.ஒரு  மொழியின்  தன்மைக்கேற்பவே
அந்நிலத்தின்  பண்பாடு , நாகரிகம், வாழ்க்கை  முறை அமையும்  என்பதையே   ஒவ்வொரு நாட்டுப்  படங்களைப்  பார்க்கும்  பொழுதும் அறிகிறேன்.
 'பாரதி' கூறியதை உணர முடிகிறது.
தமிழன் என்பதால் அல்ல, வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் இதையே கூறுவேன்.

BROUGHT BY THE SEA :

 ' அன்பின் வழியது உயிர்நிலை '
- என மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் கலைஞர்களுடன் துருக்கி நாட்டின்  இயக்குனர், 'NESLI COLGECEN' - ம் இணைந்துகொள்கிறார்.
அழகிருக்குமிடத்து கனநேரமேனும் கருணை கெட்டால் துவண்டு போகிறது  இதயம். அழகில் குடிகொள்ளும் 'அருள்'  பாடும்  ராகமாய் அவளின் (நாயகி) படைப்பு . இக்கட்டான சூழ்நிலையிலும் அவளிடம், அவள் உடல் நிலையை விசாரிக்கும் அவனுடைய  (நாயகன்) கரிசனம் -  காதலின் வித்து. அஃறிணை(பந்து) , இணைத்த இதயங்கள்.

HOW I ENDED THIS SUMMER :

 விரும்பி  ஏற்கும்  தனிமை அவனை கடவுள் ஆக்குகிறது.
கோவம், வெறுப்பு, வன்மம் =  அருள்.
இருவேறு முரண்களின் சங்கமத்தில் பிணைந்திருக்கிறது 'எல்லாம்'. ஆதியும்,  அனுபவமும், முட்டி மோத.. களத்தில் ஆடும் ஆட்ட நாயகர்கள் இருவரின் ஆட்டத்தில் பார்வையாளனின் 'அகம்' தரிசிக்க வைத்த ருஷ்ய படம்.

THE WHITE RIBBON :
என்  குரு, பிரான்சு இயக்குனர், 'MICHAEL HANEKE' - ன் மேதமையை காட்டிய  திரைப்படம். வாழ்க்கையை, ஒரு பற்றற்றப் பார்வையாளனாகப் பார்க்கும் கலைஞர்களுள் முக்கியமானவர் இவர்.  'புதிர்' - இவருடைய மைய பலம். எவ்வொரு கலைப்படைப்பும் அதன் ரசிகனிடமே முழுமையடைகிறது..அவ்வகையில் பார்வையாளனுடன் தானும் சேர்ந்து கொண்டு தன் படைப்பு எழுப்பும் புதிரின் விடை தேடி அலையும் கலைஞன்.

முதலாம் உலகப்போருக்கு சற்றே முன்பு ஜெர்மனியிலுள்ள ஒரு கிராமத்தில் பல புதிரான சம்பவங்கள் நிகழ்கிறது. அச்சம்பவங்களைக் காட்டி, அதன் விளைவுகளையும் காட்டியதோடு விடைபெறுகிறார் இயக்குனர். விடை தேடும் பார்வையாளனுள் எழும் பல கேள்விகளோடு பயணிக்கையில் அவனைப் பற்றிய பல உண்மைகள் அவனுக்குத் தெரிய வரும். அவ்வகையில் என்னுள் எழுந்த கேள்விகளை பற்றியபடி தொடர்கிறேன்...

BEAUTIFUL :
THOUGH, COMPLICATED ' LIFE IS BEAUTIFUL..!' - என் வாழ்வில் நான் கடைபிடிக்கும் தாரக  மந்திரம். அதனை மீண்டும் நிரூபிக்கும் கலைஞர்களோடு கை கோர்க்கிறார்  ஸ்பெய்ன்' நாட்டின் இயக்குனர், ALEXANDRO GONZALEZ INARITTU -வும்.
மரணம் கடந்த  வாழ்வின் 'அற்புதத்தை',  'அழகை' காண்கிறோம் நாயகனின் வாழ்வினுள்.

CLOSING CEREMONY :
தமிழ்  திரையிசைப்  பாடல்களின்  நினைவலைகள் அரங்கத்தில் 'ஒலி'யாய்த் தவள..
நான் கண்கள் மூடி அகத்துள் பயணிக்க.. அலையலையாய் அனந்தகோடி
ஆத்மாக்களின் சங்கமத்தில் ஒருமித்ததோர் 'பரிபூரணம்'  என்னுள் குடிகொண்டது. இவ்வாறே, ஒரு கூடாரத்தினுள் -  உலகை சுற்றி உள்ளுள் உறைந்தேன்.

                                      -  'சுற்றலின் சுற்றாமை நன்று' -

                                                              ****

Monday, 3 January 2011

அசோகமித்திரனின் 'பிரயாணம்' - ஒரு பார்வை


அசோகமித்திரன்

மானுடம் கண்டறியாத பல கேள்விகளுக்கான விடையைத் தேடத் தூண்டும் தருணங்கள் அமையப்பெற்ற கதை அசோகமித்திரனின் 'பிரயாணம்'. தன்னை மிஞ்சிய குரு தானேவெனும் உணர்தலில் இருந்துவரும் எனக்கு இக்கதையும் மற்றுமொரு  உதாரணமே.

 உதவத் திராணியற்ற சதைத் தொக்குப்பாகத் திகழ்ந்தாலும் பிறன் இருப்பு தரும் மனோதிடம், புதிரான ஒன்றே.. இந்த குருவும் அவனுக்கு அப்படியே. மரணம் நெருங்கும் தருவாயில் உயிர்களுள் ஏற்ப்படும் அசாத்திய அசுர பலம் வியப்பிற்குறியதே.

   'நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல்கூட அப்போது
அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது.'  - மலைப்பாதைகளில் பிணத்துடன் பயனிப்பவனின் விழிப்புணர்வு , இயற்கையோடு அவனையுமறியாமல் இயந்து போனதின் வெளிப்பாடே இது.

'...கடைசியில் மரணம்-உயிரின் வாழ்வாசை என்ற இரு அடிப்படை இயற்கைச்சக்திகள் மட்டுமே எஞ்சுகின்றன. மிச்சமெல்லாம் வெறும் கற்பனை, வெறும் பிரமை-- என்று எண்ணச்செய்கிறது இந்தக்கதை' - என்னும் திரு. ஜெயமோகன். அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.

  'அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில்
சிதறுண்டுபோயின' - என்னும் வரிகள் எண்ணத்தூண்டும் கேள்விகள் பல..

                                                                  ****
பிரயாணம்- சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_25.html


                                                                 ****

Sunday, 2 January 2011

- பாலம் -

வேறு எந்த நாட்டிலும் இல்லாததோர்  சிறப்பியல்பு  தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது.  ஒரு மண்ணின் மொழியை, பண்பாட்டை,  நாகரீகத்தை,  பாரம்பரியத்தை, அம் மண்ணின் மனிதர்கள் அறியாமலேயே  வாழ்வதும், அறிந்த பிறகும்,  அயலார் மொழியை மட்டுமே பின்பற்றி  பிறள்வதும் அவ்விடம் மட்டுமே சாத்தியப் படுகிறது.

அம் மண்   -   தமிழ் மண்.

அம் மக்கள் -   அந்நில மக்கள்.

இச்சூழலில் அம்மக்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்த பல அறிஞர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

அவ்வண்ணம், தமிழை தமிழர்களுடன் இணைக்கும்  பாலமாக செயல்பட்டு வரும்  மேலான்மைகளுள் முக்கியமான ஒருவர் சேலத்தில் வாழ்ந்து வருகிறார்.

 பாலம் - எனது ஆசான், திரைப்பட இயக்குநர், திரு. பாலுமகேந்திரா. அவர்கள் தொடங்கி வைத்த புத்தகாலயம்.
 'ஏழைகளின் ஊட்டி' - ஏற்காட்டிற்க்கு சென்று  திரும்பியிருந்தோம் நானும்,
நண்பன், மருத்துவன், ஆராயிச்சியாளன் 'டிஜிட்டல் ஆத்மாவும்'. கடும் மழையில் நனைந்தவாறு திரும்பும் போதே அவரை சந்திக்கலாமா, எதுவும் தயார் செய்யாது சந்தித்து என்ன செய்வதென பேசியவாறே பாலத்திற்க்கு  சென்றோம்.

புத்தககங்களை புரட்டிக் கொண்டிருக்க வாசலில் ஒரு வயோதிகர் வந்து நின்றார். டிஜி என்னைப் பார்த்து புன்முறுவலிக்க நான் விழி பிதுங்கி ஓரம் ஒதுங்கினேன்.
         
  திரு. இரா. குப்புசாமி, அவர்கள்.

" நல்லாருக்கீங்களா ஐயா..? "  - இரா.

" நீங்க எப்படி இருக்கீங்க..? " - டிஜி.

" மகிழிச்சி யா. என்ன புத்தகம் பாக்கறீங்க.. ஆராச்சில தான் இருக்கீங்களா..? "
" ஆமாங்க .."

 நான் ஒரு புத்தகத்தினுள் முகம் புதைக்க..

" இவன் என்னோட Friend- ங்க.. சினிமால...

  கைகூப்பி வணங்கினேன்.

... ஒங்ககிட்ட பேச தயக்கப் பட்டுகிட்டு ஓரமா நிக்கறான்.."

என் பக்கம் திரும்பியவர்..
" என்னங்கையா தயக்கம். நாம எல்லோரும் மனிதர்கள் தானே. எல்லாம் ஒன்னு தான்.."
பாலம் ஊழியர் நாற்காலி கொடுக்க நால்வரும் அமர்ந்தோம்.

" திரைப்படம் அற்புதமான ஊடகங்க யா.. வெகுஜெனத்த ஊடுருவுற ஆளுமை மற்ற கலைகளை விட இதுக்கே அதிகம்...

தலையாட்டி ஆமோதித்தேன்.

 ...நானெல்லாம் பாருங்கையா ஒரு கவிஞன். யாருக்கென்ன தெரியும் என்ன..? "

( அவர், ஆழுமை பற்றிய கவலையை கூறவில்லை. மக்களுக்கான அவருடைய பணி வெகுவாக யாரையும் சென்று சேரவில்லையே..என்ற வருத்தத்தையே வெளிப்படுத்தினார்.)

" நீட்சே -பத்தி நீங்க எழுதின புத்தகத்தைப் படிச்சேங்கையா.. அதுல, அவரப் பத்தி பெருசா எதையும் சொல்லல நீங்க. ஒங்க நோக்கமெல்லாம் படிக்கற வாசகனோட மேன்மையைப் பத்திதான் இருந்தது. ஒரு அடையாளத்துக்குத்தான் தலைப்ப
'நீட்சே'- ன்னு வச்சிருக்கீங்கனு நெனைச்சேன். " என்றேன்.

" ஆமாங்கையா. 'நீட்சே' பத்தி தெரிஞ்சிக்கத்  தான் ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கே. நாமளும் அதையே ஏன் பண்ணனும். ஆனா நம்ம  மூதாதயரப் பத்தி பேச யாரிருக்கா..?

இருவரும் ஆமோதிக்க..

...ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியே  எல்லாத்தையும் சொல்லிட்டுப்   போயிட்டானேயா நம்மாளு. இப்ப வர்றவங்க யாரும் நம்மோட வரலாற அறிஞ்சிக்கறது இல்ல..
 எல்லாம் அவசர எழுத்துக்களா இருக்கு.
அவங்களோட மன வியாதியப் பத்திதான் எழுதுறாங்க..
 மேற்குல உருவான தத்துவ மரபு - எதுவும் தொடாத நுட்பத்த தொட்டு தெளிவா விளக்கிட்டு போயிட்டானேயா திருக்குறள்ள.
 நீட்சேக்களும் , ரூசோக்களும் அதப் புறிஞ்சுக்கலையே கடைசி வரையிலும். "

" திருக்குறள முழுசாப் புறிஞ்சவன் அதுக்கு மேல வாழ்க்கையைப் பத்தி தெரிஞ்சுக்க பெருசா எதுவும் இருக்க முடியாதுன்னு தான் தோணுதுங்க சார். " என்றான் நண்பன்.

" பொருள் இல்லார்க்கு  இவ்வுலகில்லை'-
 -ன்னு சொல்லிட்டு போயிட்டானேங்கயா.." என்றார்.
நாங்கள் இருவரும் அதிர்ந்தடங்கினோம்.

'அருளீனும் அன்பின் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.'

( இக்குறளின் பொருளை ஒரு அதிகாலை பொழுது விளக்கி இருந்தான்  நண்பன்.சமூகப் பொருளாதார  வெற்றியின் முக்கியத்துவத்தை அன்றே வள்ளுவர் சொல்லியிருந்தது இன்றும் பொருந்துவதை எண்ணி வியந்தோம்.)

உணர்ச்சிப் பெருக்கில் எழுந்து  நின்றார்.

" வள்ளுவரையும், வள்ளலாரையும் அறியாம அறிவுத் தளத்தளையும் சரி, ஆன்மீகத் தளத்தளையும் சரி மனிதன் முன்னோக்கிப் போயிட முடியாதுங்கையா.." என்று காற்றில் இரு கைகளையும் வீசினார்.

சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டு..

...அது.. நம்மோட பொருளைப் பத்தி எப்பவுமே நமக்கொரு எலக்காறம்கையா..அதான் கையிலேயே அற்புதத்த வச்சிக்கிட்டு வெளியல போய் தேடறோம். "

" நவீன இலக்கியம் தேவை இல்லன்னு சொல்றீங்களா..? "

" இல்ல. ரெண்டுமே முக்கியந்தான். ஒரு சங்கப் பாடல் படிங்க..ஒரு புதுக்கவிதை படிங்க..நம்ம தொன்மங்களை அறியற அதே  சமயம் தற்காலத்தையும் தெரிஞ்சுக்கணும் இல்லீங்களா..? "

" நவீன இலக்கியம் படிக்க வசதியா இருக்குங்களே.."

" குறியீடு, படிமம்  -ன்னு இரு தளங்கள்ள மட்டுமே புதுக்கவிதை இயங்குதுங்கையா. மெய்த்தேடல் இல்ல.. அதான் பெருங்குறையே. அகத்த ஆராஞ்சி பதிஞ்சி வச்சிட்டுப் போயிட்டானே நம்மாளு. அதத் தெரிஞ்சிக்குவோம் மொதல்ல. அப்புறம், அதுக்கு மேல போக முயற்சி செய்வோம்.." 

நவீன இலக்கியவாதிகள் சிலர் இவரை தங்களின் குரு இடத்தில் வைத்து மதிக்கிறார்கள்.எளிமையே வாழ்வாக கொண்டுள்ளவர். தமிழ் பழகியே தன்னை நெய்தவர். வெள்ளிநகை  வியாபாரி.

 ' வியாபாரிகள் பேராசிரியர்களாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்க உண்மையான பேராசிரியர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்'. - என்று  திரு. ஜெயமோகன், அவர்கள் இவரைப் பற்றி எழுதியுள்ளார்.

அச்சந்திப்பில் அதை உணர்ந்தேன்.

சொடுக்குக :  தமிழ்ச்சித்தர் மரபு
(நன்றி. திரு. ஜெயமோகன். அவர்கள் )


வள்ளலாரைப் பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

சொடுக்குக : http://www.youtube.com/watch?v=Cs1zwzKQTj8 

பேசி முடிக்குமிடத்து என் தொலைபேசி எண் மற்றும்  மின்னஞ்சல் முகவரியை கேட்டு  பெற்றுக் கொண்டார்.  அச்செயல், எனக்கு எண் கடமையை உணர்த்தியது.

தொல்காப்பியத்திற்க்கென்று தொகைநூல் இல்லாததை சுட்டிக் காட்டி, அதனை யாராவது எடுத்துச் செய்ய வேண்டும், ஆனால் அதற்கு ஒரு வாழ்நாள்
செலவழியும் என்றார். என் இயலாமையை விளக்கி
நண்பகளிடத்து சொல்வதாகச்  சொன்னேன்.  எங்கள் இருவரிடத்தும், 'பாலம்'  ஊழியரிடத்தும்,  விடை பெற்றார்.

இருவரும் பயணிக்கையில்..

நண்பன் மௌனமாகவே வந்தான்.
" என்னடா பேசாம வர்ற .."
"ல்ல..கெளம்பும் போது அவர் அந்த ஊழியர்ட்டையும்  சொல்லிட்டுப் போனார் பாத்தியா. அதான்....!" என்றான்.

அவருடைய அச்செயல் என்னையும் ஆச்சர்யப் படவே செய்தது.
( தமிழைக் கற்றவரிடத்து இது இயல்பெனும் போதிலும்..)

 "அவர்ட்ட குறைன்னு சிலது இருக்கு. ஒரு ஆராச்சியாலனா அத என்னால சுட்டிக் காட்ட முடியும். இருந்தாலும் அவர் வயசுக்கும், அவர் இது  வரையில தமிழுக்காக தன்ன அற்பணிச்சிக்கிட்ட காரணத்துக்காகவும்,  அத என்னால செய்ய முடியல.." என்றான்.

இதுதான்.  இதுதான்.. தமிழ் மரபின் 'தனித்துவம்' எனப்படுவது.

' நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது'.         
                                                                            குறள் - 124.


" யே.. நான் இப்படி சொல்றதால அவர நீ சாதாரணமா நெனச்சிடாத. நீ அவரோட தொடர்பு ஏற்படுத்திக்க. அறிவியல் சார்ந்து சில நுட்பமான விசயங்கள என்னால அவரோட பகிர்ந்துக்க முடியாதேத் தவிர அவரோட பணிங்கறது அசாதாரணமானது. ரொம்பவே பெரிய ஆள்  அவரு...மதிக்க வேண்டிய மனிதர்..." என்றான்.

'அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்'.              
                                                                             குறள் - 443.

நீண்ட நேரப் பயணத்தில் எங்களின் மெளனம் அவ்வொற்றைக் குறளையே சூழ்ந்திருந்தது.

'அருளீனும் அன்பின் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.' 

தமிழை போற்றி வளர்த்த  மனிதர் தன் கடைசி காலத்திலும் தன் பணிக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தள்ளாடி தளர்ந்து சென்ற காட்சியே கண்களுள் நிரம்பி இருந்தது. ஆயினும், தளராத அவர் பேச்சும் முனைப்போடு அவர் தமிழ் பற்றி முன்வைத்த கருத்துகளும் எங்கள் பயணத்தை உத்வேகித்தது.

'தமிழ் வாழும்'.  தமிழ் என்று அழியுமோ அன்று 'மானுடம்' அதன் அர்த்தம் இழக்கும்.

                                                          *****