வேறு எந்த நாட்டிலும் இல்லாததோர் சிறப்பியல்பு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. ஒரு மண்ணின் மொழியை, பண்பாட்டை, நாகரீகத்தை, பாரம்பரியத்தை, அம் மண்ணின் மனிதர்கள் அறியாமலேயே வாழ்வதும், அறிந்த பிறகும், அயலார் மொழியை மட்டுமே பின்பற்றி பிறள்வதும் அவ்விடம் மட்டுமே சாத்தியப் படுகிறது.
அம் மண் - தமிழ் மண்.
அம் மக்கள் - அந்நில மக்கள்.
இச்சூழலில் அம்மக்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்த பல அறிஞர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.
அவ்வண்ணம், தமிழை தமிழர்களுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வரும் மேலான்மைகளுள் முக்கியமான ஒருவர் சேலத்தில் வாழ்ந்து வருகிறார்.
பாலம் - எனது ஆசான், திரைப்பட இயக்குநர், திரு. பாலுமகேந்திரா. அவர்கள் தொடங்கி வைத்த புத்தகாலயம்.
'ஏழைகளின் ஊட்டி' - ஏற்காட்டிற்க்கு சென்று திரும்பியிருந்தோம் நானும்,
நண்பன், மருத்துவன், ஆராயிச்சியாளன் 'டிஜிட்டல் ஆத்மாவும்'. கடும் மழையில் நனைந்தவாறு திரும்பும் போதே அவரை சந்திக்கலாமா, எதுவும் தயார் செய்யாது சந்தித்து என்ன செய்வதென பேசியவாறே பாலத்திற்க்கு சென்றோம்.
புத்தககங்களை புரட்டிக் கொண்டிருக்க வாசலில் ஒரு வயோதிகர் வந்து நின்றார். டிஜி என்னைப் பார்த்து புன்முறுவலிக்க நான் விழி பிதுங்கி ஓரம் ஒதுங்கினேன்.
திரு. இரா. குப்புசாமி, அவர்கள்.
" நல்லாருக்கீங்களா ஐயா..? " - இரா.
" நீங்க எப்படி இருக்கீங்க..? " - டிஜி.
" மகிழிச்சி யா. என்ன புத்தகம் பாக்கறீங்க.. ஆராச்சில தான் இருக்கீங்களா..? "
" ஆமாங்க .."
நான் ஒரு புத்தகத்தினுள் முகம் புதைக்க..
" இவன் என்னோட Friend- ங்க.. சினிமால...
கைகூப்பி வணங்கினேன்.
... ஒங்ககிட்ட பேச தயக்கப் பட்டுகிட்டு ஓரமா நிக்கறான்.."
என் பக்கம் திரும்பியவர்..
" என்னங்கையா தயக்கம். நாம எல்லோரும் மனிதர்கள் தானே. எல்லாம் ஒன்னு தான்.."
பாலம் ஊழியர் நாற்காலி கொடுக்க நால்வரும் அமர்ந்தோம்.
" திரைப்படம் அற்புதமான ஊடகங்க யா.. வெகுஜெனத்த ஊடுருவுற ஆளுமை மற்ற கலைகளை விட இதுக்கே அதிகம்...
தலையாட்டி ஆமோதித்தேன்.
...நானெல்லாம் பாருங்கையா ஒரு கவிஞன். யாருக்கென்ன தெரியும் என்ன..? "
( அவர், ஆழுமை பற்றிய கவலையை கூறவில்லை. மக்களுக்கான அவருடைய பணி வெகுவாக யாரையும் சென்று சேரவில்லையே..என்ற வருத்தத்தையே வெளிப்படுத்தினார்.)
" நீட்சே -பத்தி நீங்க எழுதின புத்தகத்தைப் படிச்சேங்கையா.. அதுல, அவரப் பத்தி பெருசா எதையும் சொல்லல நீங்க. ஒங்க நோக்கமெல்லாம் படிக்கற வாசகனோட மேன்மையைப் பத்திதான் இருந்தது. ஒரு அடையாளத்துக்குத்தான் தலைப்ப
'நீட்சே'- ன்னு வச்சிருக்கீங்கனு நெனைச்சேன். " என்றேன்.
" ஆமாங்கையா. 'நீட்சே' பத்தி தெரிஞ்சிக்கத் தான் ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கே. நாமளும் அதையே ஏன் பண்ணனும். ஆனா நம்ம மூதாதயரப் பத்தி பேச யாரிருக்கா..?
இருவரும் ஆமோதிக்க..
...ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் சொல்லிட்டுப் போயிட்டானேயா நம்மாளு. இப்ப வர்றவங்க யாரும் நம்மோட வரலாற அறிஞ்சிக்கறது இல்ல..
எல்லாம் அவசர எழுத்துக்களா இருக்கு.
அவங்களோட மன வியாதியப் பத்திதான் எழுதுறாங்க..
மேற்குல உருவான தத்துவ மரபு - எதுவும் தொடாத நுட்பத்த தொட்டு தெளிவா விளக்கிட்டு போயிட்டானேயா திருக்குறள்ள.
நீட்சேக்களும் , ரூசோக்களும் அதப் புறிஞ்சுக்கலையே கடைசி வரையிலும். "
" திருக்குறள முழுசாப் புறிஞ்சவன் அதுக்கு மேல வாழ்க்கையைப் பத்தி தெரிஞ்சுக்க பெருசா எதுவும் இருக்க முடியாதுன்னு தான் தோணுதுங்க சார். " என்றான் நண்பன்.
" பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை'-
-ன்னு சொல்லிட்டு போயிட்டானேங்கயா.." என்றார்.
நாங்கள் இருவரும் அதிர்ந்தடங்கினோம்.
'அருளீனும் அன்பின் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.'
( இக்குறளின் பொருளை ஒரு அதிகாலை பொழுது விளக்கி இருந்தான் நண்பன்.சமூகப் பொருளாதார வெற்றியின் முக்கியத்துவத்தை அன்றே வள்ளுவர் சொல்லியிருந்தது இன்றும் பொருந்துவதை எண்ணி வியந்தோம்.)
உணர்ச்சிப் பெருக்கில் எழுந்து நின்றார்.
" வள்ளுவரையும், வள்ளலாரையும் அறியாம அறிவுத் தளத்தளையும் சரி, ஆன்மீகத் தளத்தளையும் சரி மனிதன் முன்னோக்கிப் போயிட முடியாதுங்கையா.." என்று காற்றில் இரு கைகளையும் வீசினார்.
சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டு..
...அது.. நம்மோட பொருளைப் பத்தி எப்பவுமே நமக்கொரு எலக்காறம்கையா..அதான் கையிலேயே அற்புதத்த வச்சிக்கிட்டு வெளியல போய் தேடறோம். "
" நவீன இலக்கியம் தேவை இல்லன்னு சொல்றீங்களா..? "
" இல்ல. ரெண்டுமே முக்கியந்தான். ஒரு சங்கப் பாடல் படிங்க..ஒரு புதுக்கவிதை படிங்க..நம்ம தொன்மங்களை அறியற அதே சமயம் தற்காலத்தையும் தெரிஞ்சுக்கணும் இல்லீங்களா..? "
" நவீன இலக்கியம் படிக்க வசதியா இருக்குங்களே.."
" குறியீடு, படிமம் -ன்னு இரு தளங்கள்ள மட்டுமே புதுக்கவிதை இயங்குதுங்கையா. மெய்த்தேடல் இல்ல.. அதான் பெருங்குறையே. அகத்த ஆராஞ்சி பதிஞ்சி வச்சிட்டுப் போயிட்டானே நம்மாளு. அதத் தெரிஞ்சிக்குவோம் மொதல்ல. அப்புறம், அதுக்கு மேல போக முயற்சி செய்வோம்.."
நவீன இலக்கியவாதிகள் சிலர் இவரை தங்களின் குரு இடத்தில் வைத்து மதிக்கிறார்கள்.எளிமையே வாழ்வாக கொண்டுள்ளவர். தமிழ் பழகியே தன்னை நெய்தவர். வெள்ளிநகை வியாபாரி.
' வியாபாரிகள் பேராசிரியர்களாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்க உண்மையான பேராசிரியர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்'. - என்று திரு. ஜெயமோகன், அவர்கள் இவரைப் பற்றி எழுதியுள்ளார்.
அச்சந்திப்பில் அதை உணர்ந்தேன்.
சொடுக்குக : தமிழ்ச்சித்தர் மரபு
(நன்றி. திரு. ஜெயமோகன். அவர்கள் )
வள்ளலாரைப் பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
சொடுக்குக : http://www.youtube.com/watch?v=Cs1zwzKQTj8
பேசி முடிக்குமிடத்து என் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கேட்டு பெற்றுக் கொண்டார். அச்செயல், எனக்கு எண் கடமையை உணர்த்தியது.
தொல்காப்பியத்திற்க்கென்று தொகைநூல் இல்லாததை சுட்டிக் காட்டி, அதனை யாராவது எடுத்துச் செய்ய வேண்டும், ஆனால் அதற்கு ஒரு வாழ்நாள்
செலவழியும் என்றார். என் இயலாமையை விளக்கி
நண்பகளிடத்து சொல்வதாகச் சொன்னேன். எங்கள் இருவரிடத்தும், 'பாலம்' ஊழியரிடத்தும், விடை பெற்றார்.
இருவரும் பயணிக்கையில்..
நண்பன் மௌனமாகவே வந்தான்.
" என்னடா பேசாம வர்ற .."
"ல்ல..கெளம்பும் போது அவர் அந்த ஊழியர்ட்டையும் சொல்லிட்டுப் போனார் பாத்தியா. அதான்....!" என்றான்.
அவருடைய அச்செயல் என்னையும் ஆச்சர்யப் படவே செய்தது.
( தமிழைக் கற்றவரிடத்து இது இயல்பெனும் போதிலும்..)
"அவர்ட்ட குறைன்னு சிலது இருக்கு. ஒரு ஆராச்சியாலனா அத என்னால சுட்டிக் காட்ட முடியும். இருந்தாலும் அவர் வயசுக்கும், அவர் இது வரையில தமிழுக்காக தன்ன அற்பணிச்சிக்கிட்ட காரணத்துக்காகவும், அத என்னால செய்ய முடியல.." என்றான்.
இதுதான். இதுதான்.. தமிழ் மரபின் 'தனித்துவம்' எனப்படுவது.
' நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது'.
குறள் - 124.
" யே.. நான் இப்படி சொல்றதால அவர நீ சாதாரணமா நெனச்சிடாத. நீ அவரோட தொடர்பு ஏற்படுத்திக்க. அறிவியல் சார்ந்து சில நுட்பமான விசயங்கள என்னால அவரோட பகிர்ந்துக்க முடியாதேத் தவிர அவரோட பணிங்கறது அசாதாரணமானது. ரொம்பவே பெரிய ஆள் அவரு...மதிக்க வேண்டிய மனிதர்..." என்றான்.
'அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்'.
குறள் - 443.
நீண்ட நேரப் பயணத்தில் எங்களின் மெளனம் அவ்வொற்றைக் குறளையே சூழ்ந்திருந்தது.
'அருளீனும் அன்பின் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.'
தமிழை போற்றி வளர்த்த மனிதர் தன் கடைசி காலத்திலும் தன் பணிக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தள்ளாடி தளர்ந்து சென்ற காட்சியே கண்களுள் நிரம்பி இருந்தது. ஆயினும், தளராத அவர் பேச்சும் முனைப்போடு அவர் தமிழ் பற்றி முன்வைத்த கருத்துகளும் எங்கள் பயணத்தை உத்வேகித்தது.
'தமிழ் வாழும்'. தமிழ் என்று அழியுமோ அன்று 'மானுடம்' அதன் அர்த்தம் இழக்கும்.
*****
No comments:
Post a Comment