“Break down” என்றொரு குறும்படம். பார்த்துக்கொண்டு இருந்த என் கண்களில் நீர்கோர்த்திருக்க படம் முடிந்திருந்தது.
நகரைவிட்டு வெளியேறுகிற ஒருவர், கார் பழுதுபட, இடைவழி மலைப்பகுதியில், ஆட்டிடையர் ஒரு கிழவரோடு ஒரு நாள் உடனிருக்க நேர்கிறது. அவ்வளவுதான் கதை.
கதை அவ்வளவுதான், ஆனால் ஒரு திரைப்படத்தைக் கதையாகவும் காட்சிகளாகவும் பார்க்கிறோம். காட்சியளவில் இது, மூன்றில், முதல் ஒருபகுதி இடர்ப்பாடும்; பின்னிரண்டு பகுதிகள் ஈடுபாடு + வேறுபாடு பார்க்காத ஈரமுமாக வெளிப்படுகிறது.
நகரவாழ்க்கையில் வந்து சிக்கிக்கொண்ட எவர்க்கும், இதுபோல் ஒரு நாட்டுப்புற வாழ்வின்பால் ஏக்கம் இருக்கும். இதிற்போலவே அது வாய்க்குமாயின் நகரத்தை விட்டும் போகலாம்தான். ஆனால், ‘வால்டன்’ அனுபவத்தை எழுதிய ஹென்றி டேவிட் தோரோ, “இரண்டாம் ஆண்டும் முதல் ஆண்டைப் போலவே routine-ஆக இருந்ததால், அந்த நாட்டுப்புறத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பினேன்,” என்று முடிக்கிறான்.
இந்தியாவில் இது இன்னும் சிக்கல். ஜாதி பார்ப்போம்.
ஒளிந்து வாழ்கிற நகரத்து வாழ்க்கையில் ஒருவகை நிம்மதி இருக்கலாம், ஆனால் ஒரு கலைஞனுக்கு தன் அடையாளம் வெளிப்பட வேண்டுமே? அதுமுயற்சியில் வந்துறும் பாடுகளை என்ன செய்ய?
“Daisy” என்றொரு கொரியப்படம் பார்த்தேன். நகர்ப்புறத்தில் தன் முன் அமர்கிற நபர்களின் முக ஓவியங்களை வரைந்துதந்து பிழைப்பு நடத்துகிற நாயகி, நாட்டுப்புறத்திற்குப் போய் அங்குள்ள இயற்கை அழகையும் ஓவியமாக்கி வருகிறாள். ஒருவன் பணத்துக்குக் கொலைபண்ணுகிறவன், இன்னொருவன் அவனைப் பிடிக்கவந்த பொலீஸ்காரன் என இருவர் அவளைக் காதலிக்கிறார்கள். முட்கம்பி ஆடையில் பட்டாலும் ஆடை முட்கம்பியில் பட்டாலும் முடிவு என்னாகும்?
குறும்படத்தின் தலைப்பு, “Breakdown” இல்லை, “Break down”. அதாவது வினைச்சொல். இங்கே, நகரவாழ்க்கையின் வசதியது கோளாறு படுதல்.
இதைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பசுபதி. இவர் பாலு மகேந்திராவின் உதவியாளராம்.
ஒருவேளை, நகர்ப்புற நாட்டுப்புற சாதகபாதக நிலவரங்களையும் கணக்கிலெடுத்து இது முழுப்படம் ஆக்கப்பட்டால் எப்படியிருக்கும்?
காய்தல் உவத்தலின்றி அணுகினால் சரியாக வரும். அது வரட்டும். இப்போதைக்கு இந்தக் குறும்படம் பார்த்து நாம் கண் நிறையலாம்.
No comments:
Post a Comment