இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 3 August 2018

வண்ணத்துப்பூச்சியும் கடலும் - பிரமிள் (Thelma & Louise படத்தை முன்வைத்து)

சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சி.

வேலை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

- பிரமிள்.

பிரமிளின் இக்கவிதை வாசகனுடன் கைகோர்த்து நடந்தவாறு அவனை வாஞ்சையுடன் தழுவ தென்றலின் ஸ்பரிசத்தில் மயக்கமுற்றவனாய் மெல்ல அவனையுமறியாமல் மேலே பறக்க அப்பரவசத்தின் உச்சமாய் அனைத்தும் விட்டு விலகி விடுதலையாக அவனை எல்லையற்ற பிரபஞ்சச் சாரத்தில் சங்கமிக்கச் செய்கிறது.

மண்ணில் தோன்றும் எல்லாப் பட்டாம்பூச்சிகளும் தேன் பருக ஆசைப்படுபவை தான். ஆனால் நிதர்சனப் புயல் அவற்றின் சிறகுகளை கருணையின்றி உடைத்தெறிய பற்றுதலுக்கான கரம் தேடித் தவித்து பாதையில்லா பயணியாய் காற்று கூட்டிப் போன திசையில் பறக்க திடீர் பரிசாக கடலுக்கு நடுவே கலங்கரை விளக்காய் ஒரு காட்சி.

அது இரு வகையிலும் அர்த்தப்படுகிறது.
1. தேனுக்கு ஆசைப்பட்டு மலர் தேடியலைந்த அப்பட்டாம்பூச்சிக்கு ஏற்படும் அச்சிலிர்ப்பானது பொய்த்தோற்றத்தாலானாலும் அக்கணத்தை முழுமையடையச் செய்கிறது ஓயாது மலரும் எல்லையற்ற பூவான கடலலை.

2. நிம்மதியை தேடியலைந்த அப்பட்டாம்பூச்சி இதுவரையிலான தன் பயணத்தில் ஒரு துளி தேனையும் காணாது தவித்து தளர்ந்து செயலற்று கிடக்கையில் வாழ்வின் பரிசாக மரணம் வாய்க்கிறது. அது தேனாய் இனிக்கிறது.
வாழ்வின் அபத்தங்களிலிருந்து விடுபட இருத்தலியல் காட்டும் தீர்வு மரணம்(தற்கொலை).

Thelma & Louise படத்தில் அன்றாட அபத்தங்களிலிருந்து விடுபட எத்தனித்து பயணிக்கும் அந்த இரு பெண்களும் மரணம் துரத்த வாழ்வதன் பொருட்டு தங்கலால் முடிந்தவரை ஓடியவர்கள் உச்சக் காட்சியில் மலை உச்சியில் செய்வதறியாது திகைத்து நிற்க மரணத்தேன் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது.

அக்கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது.

**

வெயிலும் மழையும்  (Break Down Stories - 4)

Second schedule. மார்கழி பனியில் மூன்று நாட்கள் படம்பிடித்த பின் அடுத்த இரண்டு நாட்களுக்காக இரண்டு மாதம் போராட வேண்டியிருந்தது. இதற்கிடையே இறுதிக்காட்சிக்காக ஒரு நீரோடை தேடி அலைந்தோம். டிசம்பரில் எடுத்த இறுதிக்காட்சியில் camera movement திட்டமிட்டதை விட சற்றே வேகமாக நகர்ந்திருந்தது. தற்போது பிப்ரவரி. இரண்டு மாதத்தில் நாங்கள் பார்த்து வைத்திருந்த ஓடை வற்றிவிட ஏற்காடைச் சேர்ந்த அத்தனை மலைகளில் தேடியும் பயனில்லை. நொந்து போய் மனோவிடம் புலம்பிவிட்டு சென்னை செல்ல மனோ அழைத்தார். இருவரும் ஏற்காடிலிருந்து பைக்கில் இருபத்தைந்து கி. மீ. காட்டுக்குள் சென்று அரைமணி நேரம் பாறைகளைக்கடந்து பார்த்தால் அருவி. பூத்தது மனது. மனோவை கட்டியணைத்து படப்பிடிப்புக்கு தயாராணோம்.

அங்கிருந்து கிளம்பிச் சென்று அசம்பூரில் கிழவரை பார்த்தால் தாடியை சுத்தமாக சவரம் செய்திருந்தார். துக்கம் தொண்டையை அடைக்க
"ஏங்க. சொன்னோமில்ல. சவரம் செய்ய வேண்டாம்ணு.."
"இல்லீங்கய்யா திரும்ப நீங்க வர மாட்டீங்களோண்ணு தான்.. அதுமில்லாம ஒரே நமச்சலு "

வேறு வழி தெரியாது அவரை தாடி வளர்க்கச் சொல்லி சிங்கப்பூரிலுள்ள நடிகரை குறுந்தாடி வைக்கச்சொன்னோம். பதற்றத்துடனேயே காத்திருந்தேன் இரண்டு வாரம்."மனோ..ஆத்துல தண்ணி போகுமா.."
"சொல்லமுடியாது.. கோடை வரப்போகுது. சீக்கரம் பயன் படுத்திக்கறது நல்லது"

"ஒரு குறும்படத்துக்கே இவ்ளவு கஷ்டப்பட வேண்டியிருக்கே. நீ இனிமே பெரியபடம் எடுக்க போராடி..ம்..ஒடம்ப பத்ரமா பாத்துக்கோடா.."என்றார் என் 93 வயது தாத்தா.

"இதெல்லாம் தேவயா இவனுக்கு. காட்லயும் மலைலயும் சரியா சாப்பாடில்லாம தூக்கம் இல்லாம பனில எந்திரிச்சு.. ஒழுங்கா படிச்ச படிப்ப வச்சி சம்பாதிச்சிருந்தா இந்நேரம் ஊடு வாசலு காரு பங்களானு கௌரவமா வாழ்ந்திருக்கலாம்.."

"ந்தா..அதெல்லாம் பேசாத. அவன் அப்படி தான். மனசுக்கு புடிச்ச தொழில பண்றான். என்ன பெருசா கௌரவம் அந்தஸ்து மசுரு.. அதெல்லாம் இருக்கற எல்லாருமே நல்லாவா இருக்கறான். கம்முனு கெடமா. அவன் போக்குல உடு. நல்லா வருவான் எம்பேரன்.."

"ஆமா நீங்க தான் மாமா அவன தலமேல தூக்கி வச்சிகினு ஆடறது.."

பெருமிதத்தை பொய்க்கோபத்தால் மறைத்தவாறு சென்றார் அம்மா.

படப்பிடிப்புக்கு மூன்று நாட்கள் முன்பாகவே ஏற்காடு சென்றேன். இம்முறை வேறு பாதை. சில புது இடங்கள் கானக்கிடைத்தது. மனதுள் பதற்றம். அருவியில் தண்ணீர் வருமா. தாடி. மறுபுறம் சேர்வராயன் மலை சென்று பார்த்தால் கானகமே வரண்டு சில இடங்களில் காட்டுத்தீயால் கருகிக் கிடக்கிறது. கண்கள் கலங்க செய்வதறியாது அப்படியே அமர்ந்து விட்டேன்.

"உன்ன நம்பி தான வந்தேன்.. ம். ஏன் இப்படி பண்ற" காடு காது கொடுத்ததாகவே தெரியவில்லை. கோவமாக கிளம்பினேன். பள்ளத்தில் பைக் off செய்து உருட்டியபடியே செல்ல வருடும் காற்றின் காந்தல் வன்மமாகவே பட்டது.

அசம்பூர் சென்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெரியவரின் கன்னத்தை தடவினால் பழைய தாடியில் பாதி வளர்ந்த நிலையில் சிரிக்கிறார். sgs சாரை அப்படியே கிளம்பி வரச்சொல்லிவிட்டேன். குறுந்தாடியை இங்கேயே மலித்துக் கொள்ளலாம்.

ஒளிப்பதிவாளர் ஜிக்கு காமிரா லென்ஸ் tripod எல்லாவற்றையும் தானே சரிபார்த்து அழைத்து வருவதாக சொல்லியிருந்தார். பத்திரப்படுத்தி வைத்த கிழவரின் சால்வை உட்பட எல்லாப் பொருட்களையும் தயார் செய்தார் கலை.

பெரியவரின் தாடி sgs ன் குறுந்தாடி இரண்டுமே continuity க்கு பொருந்தவில்லை. அதுகூட இரண்டு மாதத்தில் காட்டின் வளர்சிதை மாற்றம் எல்லாம் சேர்ந்து சோர்வடையச்செய்தது. நண்பர்கள் தேற்ற "ok பாத்துக்கலாம். ரெடி" என்று அவற்றிற்குத் தகுந்தாற் போல் இரவு முழுக்க திரைக்கதையையும் காட்சி கோனங்களையும் மாற்றி எழுதிக் கொண்டிருந்தேன். படக்குழுவினர் அனைவரும் சரியான உணவு உண்டார்களா என்று பார்த்து அனைவரும் நன்றாக தூங்க ஏற்பாடு செய்தாயிற்று. அது முக்கியம். எல்லா விளக்குகளும் அனைத்த பின் காற்றுக்கு ஒரு ஜன்னல் திறந்து வைத்து hall ல் எழுதிக்கொண்டும் பழைய footages ஐ பார்த்துக் கொண்டுமிறுக்க மணி நான்கு. லைட் போட்டு ஒவ்வொருவரையும் எழுப்ப தயாரானார்கள். திட்டப்படி அதிகாலை பனி வேண்டும். Continuity. ஆனால் விடிய காலையிலேயே வெயில். துயரப்பட நேரமில்லை. அச்சூழலை எவ்விதம் பயன்படுத்த முடியுமோ அதற்கு தயாரானோம்.

திரைக்கதைப்படி கானகத்தினுள் காலம் உறையும் கணத்தை பதிவு செய்ய வேண்டியே macro lens கேட்டிருந்தேன். ஜிக்குவிடம் சொல்ல அவர் camera assistant ராஜேஷை பார்க்க அவர் விழிக்கிறார். "சார் சொல்லலயே சார்" மண்டைக்குள் இரத்தக் குலாய்கள் புடைக்க தலையை பிடித்துக் கொண்டு மரத்தில் சாய்ந்தேன். பல இடங்களில் முயன்றும் பலனில்லை.
" ok ready. Wide போயிடலாம்.double up"

திரைக்கதைகள் திரைப்பட உருவாக்கத்தின் எல்லாத் தளங்களிலும் எழுதப்படுகிறது என்பதே யதார்த்த உண்மை.

sgs காரிலிருந்து இறங்கி வருகிறார். கதைப்படி காலை மணி ஏழு. Tarkoevsky - யின் Solaris மற்றும் Nostalghia தான் inspiration. எல்லோரும் தயாராக சற்றே விலகி பல்லத்தில் இறங்கிப்போய் காட்டை மௌனமாக வெறித்தேன். " ஏன்.. நான் என்ன பண்ணேன். உன்ன நம்பி தான வந்தேன். உன்ன பத்தி தான படம் எடுக்கறேன். அப்பறம் ஏன் இப்படி சோதிக்கற". பதிலேதுமில்லை.

"சார் ரெடி.."
"ஆங்..வந்துட்டேன்"

மனதை தேற்றிக் கொண்டு மேலேறி வந்து " ok..camera.. action." sgs காரிலிருந்து வெளியே வருகிறார். கண் கூசும் வெயில். என்னுள் ஒருவித வெறுமை.

திடீரென அவ்விடம் சூழும் அடர்த்தியான வெண்பனி(Fog).
அக்கணம் என்னுள் மையங்கொண்ட அதிர்வலை உடலெங்கிலும் பரவ

"ஜிக்கு..அங்க பாருங்க FOG.."

அனைவரும் சிலிர்க்க இயற்க்கையின் இக்கொடையை எதிர்கொள்ள முடியாது தத்தளித்தேன். பின் துள்ளி குதித்தேன். லென்ஸ் மாற்றப்பட்டது. கேமரா இடம்மாற கடும் பனிசூழ் கானகத்துள் கால் பதிக்கும் sgs அப்பரவசத்தை அப்படியே வெளிப்படுத்தினார். என்னையும் அறியாது என் கரங்கள் கானகத்தின் முன் கூம்பின.

"Thanks. ரொம்ப thanks. காலம் முழுக்க ஒங்கிட்ட நான் சரண்."

Sg சார் சொன்னார் "காலைல பிரார்த்தனையப்ப வள்ளலார் கிட்ட கேட்டேன் பசு. இந்த படம்புடிக்கறவன் ரொம்ப feel பண்றான். கொஞ்சம் பனிய கொடுத்திடுங்கன்னு. அவர் கருண தான் இது "

ஆசான் பாலு மகேந்திரா 'மூன்றாம் பிறை' உச்சகாட்சி எடுக்க மழை தேவைப்பட்டதாம். கேட்டாராம். வந்ததாம். கடைசிப்படமான 'தலைமுறைகளு'க்கு புயல் தேவைப்பட்டது. வந்தது.

If a person really desires to acheive something, all the universe conspires to help that person to acheive his dream.- Paulo Cohelo

நன்றி.

***

Wednesday, 11 July 2018

Break Down Stories - 3




இரண்டாம் நாள் படப்பிடிப்பு. கடுங்குளிரில் கிளம்பி நடுங்கியபடி கடுங்காபி குடித்த பின் துணை இயக்குனர் ஓபிலி வெங்கட்டிடம் பர்ஸ் கேட்டால் உறைந்து நிற்கிறார். குளிரால் அல்ல. நிச்சயமாக தெரியும் நேற்றிரவு ப்ரியதர்ஷினி ஓட்டலில் சாப்பிட்டு பணம் கொடுத்த பின் அவரிடம் கொடுக்க அவர் பைக்குள் வைத்தார்.
"சார். நீங்க ஒங்க ஜீன்ஸ் பாக்கட்ல தான் வெச்சீங்க சார். நல்லா ஞாபகம் இருக்குங் சார். " மிலிட்டரி அடி அடித்தார் ஓபிலி. மறுக்க முடியாத பார்வை. "ச்சே. ஆமால்ல. நமக்கு எதும் தெரியலைங்க ஜிக்கு. பைக்ல போம்போது எங்க உளுந்துச்சோ.."

நேற்றிரவு தான் நடிகர் sgs என் நைந்த பர்சை பிடுங்கி உள்ளே நிறைந்திருந்த cards எல்லாவற்றையும் (visiting cards, food mall cards) எடுக்க முற்பட அவர் விரல்கள் இடியாப்ப நூல்களுள் மாட்டிக்கொள்ள அவரை விடுவித்தபின் ஆசுவாசப்பட்டவர் " Amazing pasu. what a set up u have. எவனாவது pick pocket க்கு try பண்ணான் செத்தான் இல்ல.." என்றவாரு சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்த புது பர்ஸை எடுத்து அதற்குள் 2000 தாள்களை வைத்து " இது கட்டுக்கட்டா பெருகணும்" என்று வள்ளலாரை வழிபட்டு என் கைக்குள் திணித்தார். இன்று, காலி டீ கப்புடன் ஒரு பார்வை பார்க்க நான் திரும்பிக்கொள்ள, காருக்குள் பல்டியடித்த உதவியாளர் கலையரசன் தனக்கு பழக்கமில்லாத எல்லா யோகாசன வித்தைகள் மூலமும் வளைந்து நெளிந்து தேடிப்பார்த்த பின் வெறுமையாக நிற்க சாலையோர பதாகையில் தாமரை மேல் சலனமில்லாமல் புன்னகைத்தபடி மேதகு பாரதப் பிரதமர். இதில் நண்பர்கள் எந்த குறியீட்டையும் தேட வேண்டாம். ச்சும்மா கண்ணில் பட்டதை கக்கிட்டன்.

தோழர் மனோ மற்றும் கார்த்திகேயனுக்கு தகவல் பரவ அவர்கள் ஏற்காடை சல்லடை போட்டு தேட எமக்கோ ஒரே எண்ணம் படப்பிடிப்பு.

"fog போயிடும் . நாம கெளம்பலாமா.."

யாரும் எதிர்பார்க்கவில்லை."சரி. Police ல ஒரு complaint மட்டும் கொடுத்துட்டு கெளம்பிடலாம் " மனோ சொல்ல விரைந்தோம். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவை தொடர்பு கொண்டே card ஐ செயலிழக்க வைக்க வேண்டியிருந்தது. சினிமா காரங்க என்றதும் ஒரு தினுசாக பெரும் திட்டத்தினுடனே பார்த்தார்கள் போலிசார். மனோ பேசிய பின்னே தோழமையானார்கள்." ஓ..சின்னபடம்..சரி சரி. ஆமா இந்த நயன்தாரா இப்ப எப்புடி.." "எப்புடின்னா சார்.." " அதாங் சார். ஏதோ ஒரு டைரட்டரோட அப்புடி இப்புடின்னு.. என்ன ஓகே தான.." இந்த கேள்விகளை எந்த ஊரிலும் எல்லா தரப்பு மக்களிடமும் சினிமாக்காரன் எதிர் கொண்டே ஆகவேண்டும்.

அரும்பாடு பட்டு ஒரு குறும்படம் எடுக்க முனைந்தால் அதில் இத்தனை குளறுபடி. புகார் தெரிவித்த பின் படப்பிடிப்புக்கு செல்லும் போது மணி 12. பனி விலகியபின் மழை. மனதுக்குள் திடீரென ஏதோவொன்று திரண்டெழ அவ்வுணர்வை அப்படியே விழுங்கிவிட்டு shot க்கு தயாரானேன். SG சார் கொடுத்த பணம். அதோடு ATM card, அதில் சில ஆயிரங்கள். இப்படத்திற்கான மிச்சப்பணம் அத்தனையும் இப்போது இல்லை. என்ன செய்யப்போகிறேன். தெரியாது. தெரிந்ததெல்லாம் அன்றைய படப்பிடிப்பை நல்லபடியாக நடத்தவேண்டும். அந்த நாள் மறுபடி வாய்ப்பது அரிது.

"பசு.dont worry.நடந்தது நடந்து போச்சி. I think we ll get the purse for sure. " sg சார் உறுதியாகச் சொன்னார். ஜிக்கு "ஓபிலி Bag அ நல்லா check பண்ணீங்களா..ஒரு டைப்பாவே இருக்கீங்களே " என கலாய்க்க" ஐயோ சார்.. நான் என்ன.." பைக்குள் கைவிட்டு குடைந்தார். "இதுக்கு ஏன் இவ்ளோ emotion..ம்.." சிராத்தபடி ஜிக்கு.

அடுத்த location, estate ன் அருவிக்கு செல்லும் வழியில் இஞ்சி டீ அருந்தும் போது திரும்பவும் மனது பிசைந்தது. டீக்கு sg sir பணம் கொடுத்துவிட்டு என்னை பார்க்க பார்வையை திருப்பிக் கொண்டேன். அனைவரிடமும் ஒருவித தளர்ச்சி. டீ கப்புடன் நிற்க.. "ம் வண்டியெடு. கெளம்பு". நல்லூர் செல்லும் வழியில் ஒரு புல் மேடு. அவ்விடம் ஆடு மேய்ப்போரிடம் பேசி படப்படிப்பை தொடங்கினோம். கதைப்படி SG சார் பட்டினியுடன் இருக்க வேண்டும். மணி பிற்பகல் ஒன்று. உதடுகள் ஒட்டக்காடாது. எச்சில் விழுங்கக் கூடாதென சொல்லியிருந்தேன். One more.. again..one more..சார். என்ன பண்றீங்க. அப்டியில்ல.. திரும்பவும் கீழருந்து மேல ஏறி வாங்க.." என்னை பார்வையால் பொசுக்கப் பார்த்தார். திரும்பிக் கொண்டேன். " Take.."

அவரை பட்டினி போட்டு நாங்கள் அனைவரும் சாப்பிட
"எனக்கென்னுமோ அப்டி தான் தோணுது. நிச்சயமா.. "அவராக பேசிக்கொண்டார். கஞ்சி குடிப்பது போல் shot. நிஜப்பசி. வெறியுடன் சாப்பிட்டார். அக்கணம் அவர் வாழ்வில் வாய்க்காதது. பசித்து புசிப்பதன் அவசியத்தை உணர்ந்தார். பனியைத் தவறவிட்டாலும் வெயிலை பயன்படுத்திக் கொண்ட திருப்தியில் அடுத்த இடம் செல்ல பரவசமாக தயாராக மலை மேட்டிலுருந்து தாவி குதித்தோடி வருகிறார் sgs. " நீங்க எதிர் பாக்காத ஒன்னு எதிர்பாக்காத நேரத்துல கெடக்குது. Come on act." Actor direct செய்ய விழிக்கிறேன் நான். "சார் எனக்கு நடிப்பெல்லாம் வராது. Only direction " " இப்ப பாருங்க நடிப்பீங்க. ஒங்க. Purse கெடச்சிடுச்சி " நாத்துடிதுடிக்க கண்கள் மெல்ல கலங்க.." சார்.." என்றேன்.பரவசத்துடன் சிரித்தபடி " yes pasu. We got it.."

மலை உச்சியிலிருந்து ஓபிலி " சார் பர்ஸ் பைலயே இருக்குதுங் சார் "

உள்ளிருந்து ஓர் உணர்வு திரண்டெழ அதை அடக்கியபடி sg சாரை பார்க்க கண்களுள் ஊடுறுவியவர் "leave it pasu. நான் சொல்லல. அது கெடைச்சிடும். I know. Because you deserve it " என்னை ஆரத்தழுவ பதிலுக்கு அவரை அணைக்கத் திராணியில்லாதவனாய் தளர்ந்து நின்றிருந்தேன். மூச்சிறைத்தபடி ஓபிலி கீழே வந்து " தோள் பையிலிருந்து பர்ஸ் எடுத்து பவ்யமாக நீட்டி, "எல்லாம் கரைக்டா இருக்கான்னு பாத்துக்கோங்க சார். " ஒளிப்பதிவாளர் ஜிக்கு அவரை மெல்ல ஏறெடுத்து பார்க்க " சார் நான் பதறிப் போயிட்டேன். என்ன எங்க எல்லாரும் தப்பா நெனச்சிடுவிங்களோன்னு. நல்ல வேல.." முஷ்டி மடக்கியவாறு ஜிக்கு "இப்ப உன்ன யாரு இங்க உத்தமன்னு சொன்னாங்கன்னு சிலுத்துக்கற.." என்று தோளில் குத்த "கேமரா மேன் சார் கிண்டல் பண்ணாதீங்க சார்." ஓபிலி வெட்கப்பட அனைவரும் ஒரு கொலைக்கு தயாரானார்கள்.

அன்றிரவு காட்டிலிருந்து ஏற்காடு வந்ததும் பிரபாகரன் ஓட்டலில் அமர தோழர் கார்த்திகேயன் வந்து மௌனமாக என்னை கட்டியணைத்து "காலைலேந்து மனசே சரியில்லங்க டாக்டர். இந்த பணம் எவ்ளோ முக்கியம். என்ன பண்ணுவீங்கன்னு..ச்சே..மகிழ்ச்சி" கனத்த முகத்துடன் நின்றார். படப்பிடிப்பு நல்லபடி முடிந்த திருப்தியில் இருந்த நான் அப்பொழுது தான் முழுவதுமாக அச்சம்பவத்தின் ஆலத்தை உணர்ந்தேன். "கார்த்திக் சார் ஒங்களுக்கு பொரோட்டா சொல்லிடவா.. என்றார் ஓபிலி.

***



'Kanavuthirai'(Dream Screen) a film forum in singspore conducting by santhosh nambirajan and other friends there has invited us to screenour short 'Break Down' followed by discussion. We are glad to meet our friends there. Come let's discuss film and other stuff.


சிங்கப்பூரில் - Break Down திரையிடல்

சிங்கப்பூரில் நண்பர் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் தோழர்கள் இணைந்து நடத்திவரும் 'கனவுத்திரை' என்னும் திரைப்பட அமைப்பில் எங்களுடைய 'Break down' குறும்படத்தை திரையிட்டு விவாதிக்க அழைத்திருக்கிறார்கள் . சிங்கப்பூரிலுள்ள தோழர்களை சந்திக்க வருகிறோம். வாருங்கள் சினிமா மற்றும் இன்ன பிற கலந்துரையாடுவோம்.

Thursday, 5 July 2018

ஆசான் பாலுமகேந்திராவுக்கு பிறகு என்னுள் உண்டான வெற்றிடத்தை நிரப்பிய கலைஞன் பாரதிராஜா. குரு வெற்றிமாறன் தயாரிப்பில் என் இயக்கத்தில் பாரதிராஜா அவர்கள் நடிப்பதற்கான கலந்துரையாடல் தேனியில் பாரதிராஜா பண்ணையில் நடந்த பொழுது 'ஓம்' படத்திற்கான கதையை விவாதித்தோம். சிலிர்ப்புடன் கதைத்தார் அக்கதையை. இன்னமும் அடங்கா கலைவேட்கையோடு இயங்கும் அம்மனிதரை பார்க்க பிரமிப்பாகவே இருந்தது. 88 வயதில் உயிர்ப்புடன் இயங்கும் Clint Eastwood போன்று நம்மிடம் யாரும் இல்லையே என்னும் ஆதங்கம் இருந்து வந்தது. இப்போது இல்லை.


Europian union film festival


சென்னையிலுள்ள பிரான்ஸ் தூதரகமான Alliance franchaise யில் திரையிடப்பட்ட ' The magic of children' என்ற படம் பெரியவர்களின் சிந்தனைப்போக்கை சிறார் மீது நாம் செலுத்தும் ஆதிக்கத்தை கேள்விக்குட்படுத்துகிறது.

Fantasy வகையிலான இக்கதையில் சிறார்களுக்கு சதா கட்டளைகளிட்டு துன்புறுத்தும் பெரியோர்கள் அனைவரும் photo frame யினுள் உறைந்து போகிறார்கள். பெரியோர்களற்ற கட்டளைகளும் கட்டுப்பாடுமற்ற கானகத்தில் சுதந்திரமாக சுற்றித்திறிகிறார்கள் குழந்தைகள். அருவி உயிர் பெற்று மனித உருவில் அவர்களிடம் வர ஸ்பரிசிக்கையில் ஆயிரங்காலத்து மரமாக (fossil) உறைந்து போகிறது.

இப்படி போகும் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் நீண்ட நேரம் நெழிந்த பின் மெல்ல ஒவ்வொருவராக canteen செல்ல ஆரம்பித்தார்கள். நம்மால் சிறார்களின் வாழ்வை இனி வாழ முடியாது. ஏங்குவோம். அமைந்தால் தவிர்த்து விடுவோம்.

ஏன்னா நமக்கு நெறய வேல கெடக்கு. எலக்கியம் படைக்கோணும். சினிமா எடுக்கோணும். தத்துவம் பேசனும். அரசியல் பண்ணனும். எல்லைக்கோடு வரையணும். சாதி மத கெத்து எட்டுவழிச்சால சாகர் மாலா மீத்தேனு நியூட்ரினோன்னு ஒலக மொதலாளிங்களுக்கு உழைப்ப கொட்டறது இப்படி எக்கச்சக்க வேல கெடக்கு.

கானகமாம் சொதந்தரமாம் கொழந்தைங்களாம். சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு.

***