இரண்டாம் நாள் படப்பிடிப்பு. கடுங்குளிரில் கிளம்பி நடுங்கியபடி கடுங்காபி குடித்த பின் துணை இயக்குனர் ஓபிலி வெங்கட்டிடம் பர்ஸ் கேட்டால் உறைந்து நிற்கிறார். குளிரால் அல்ல. நிச்சயமாக தெரியும் நேற்றிரவு ப்ரியதர்ஷினி ஓட்டலில் சாப்பிட்டு பணம் கொடுத்த பின் அவரிடம் கொடுக்க அவர் பைக்குள் வைத்தார்.
"சார். நீங்க ஒங்க ஜீன்ஸ் பாக்கட்ல தான் வெச்சீங்க சார். நல்லா ஞாபகம் இருக்குங் சார். " மிலிட்டரி அடி அடித்தார் ஓபிலி. மறுக்க முடியாத பார்வை. "ச்சே. ஆமால்ல. நமக்கு எதும் தெரியலைங்க ஜிக்கு. பைக்ல போம்போது எங்க உளுந்துச்சோ.."
நேற்றிரவு தான் நடிகர் sgs என் நைந்த பர்சை பிடுங்கி உள்ளே நிறைந்திருந்த cards எல்லாவற்றையும் (visiting cards, food mall cards) எடுக்க முற்பட அவர் விரல்கள் இடியாப்ப நூல்களுள் மாட்டிக்கொள்ள அவரை விடுவித்தபின் ஆசுவாசப்பட்டவர் " Amazing pasu. what a set up u have. எவனாவது pick pocket க்கு try பண்ணான் செத்தான் இல்ல.." என்றவாரு சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்த புது பர்ஸை எடுத்து அதற்குள் 2000 தாள்களை வைத்து " இது கட்டுக்கட்டா பெருகணும்" என்று வள்ளலாரை வழிபட்டு என் கைக்குள் திணித்தார். இன்று, காலி டீ கப்புடன் ஒரு பார்வை பார்க்க நான் திரும்பிக்கொள்ள, காருக்குள் பல்டியடித்த உதவியாளர் கலையரசன் தனக்கு பழக்கமில்லாத எல்லா யோகாசன வித்தைகள் மூலமும் வளைந்து நெளிந்து தேடிப்பார்த்த பின் வெறுமையாக நிற்க சாலையோர பதாகையில் தாமரை மேல் சலனமில்லாமல் புன்னகைத்தபடி மேதகு பாரதப் பிரதமர். இதில் நண்பர்கள் எந்த குறியீட்டையும் தேட வேண்டாம். ச்சும்மா கண்ணில் பட்டதை கக்கிட்டன்.
தோழர் மனோ மற்றும் கார்த்திகேயனுக்கு தகவல் பரவ அவர்கள் ஏற்காடை சல்லடை போட்டு தேட எமக்கோ ஒரே எண்ணம் படப்பிடிப்பு.
"fog போயிடும் . நாம கெளம்பலாமா.."
யாரும் எதிர்பார்க்கவில்லை."சரி. Police ல ஒரு complaint மட்டும் கொடுத்துட்டு கெளம்பிடலாம் " மனோ சொல்ல விரைந்தோம். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவை தொடர்பு கொண்டே card ஐ செயலிழக்க வைக்க வேண்டியிருந்தது. சினிமா காரங்க என்றதும் ஒரு தினுசாக பெரும் திட்டத்தினுடனே பார்த்தார்கள் போலிசார். மனோ பேசிய பின்னே தோழமையானார்கள்." ஓ..சின்னபடம்..சரி சரி. ஆமா இந்த நயன்தாரா இப்ப எப்புடி.." "எப்புடின்னா சார்.." " அதாங் சார். ஏதோ ஒரு டைரட்டரோட அப்புடி இப்புடின்னு.. என்ன ஓகே தான.." இந்த கேள்விகளை எந்த ஊரிலும் எல்லா தரப்பு மக்களிடமும் சினிமாக்காரன் எதிர் கொண்டே ஆகவேண்டும்.
அரும்பாடு பட்டு ஒரு குறும்படம் எடுக்க முனைந்தால் அதில் இத்தனை குளறுபடி. புகார் தெரிவித்த பின் படப்பிடிப்புக்கு செல்லும் போது மணி 12. பனி விலகியபின் மழை. மனதுக்குள் திடீரென ஏதோவொன்று திரண்டெழ அவ்வுணர்வை அப்படியே விழுங்கிவிட்டு shot க்கு தயாரானேன். SG சார் கொடுத்த பணம். அதோடு ATM card, அதில் சில ஆயிரங்கள். இப்படத்திற்கான மிச்சப்பணம் அத்தனையும் இப்போது இல்லை. என்ன செய்யப்போகிறேன். தெரியாது. தெரிந்ததெல்லாம் அன்றைய படப்பிடிப்பை நல்லபடியாக நடத்தவேண்டும். அந்த நாள் மறுபடி வாய்ப்பது அரிது.
"பசு.dont worry.நடந்தது நடந்து போச்சி. I think we ll get the purse for sure. " sg சார் உறுதியாகச் சொன்னார். ஜிக்கு "ஓபிலி Bag அ நல்லா check பண்ணீங்களா..ஒரு டைப்பாவே இருக்கீங்களே " என கலாய்க்க" ஐயோ சார்.. நான் என்ன.." பைக்குள் கைவிட்டு குடைந்தார். "இதுக்கு ஏன் இவ்ளோ emotion..ம்.." சிராத்தபடி ஜிக்கு.
அடுத்த location, estate ன் அருவிக்கு செல்லும் வழியில் இஞ்சி டீ அருந்தும் போது திரும்பவும் மனது பிசைந்தது. டீக்கு sg sir பணம் கொடுத்துவிட்டு என்னை பார்க்க பார்வையை திருப்பிக் கொண்டேன். அனைவரிடமும் ஒருவித தளர்ச்சி. டீ கப்புடன் நிற்க.. "ம் வண்டியெடு. கெளம்பு". நல்லூர் செல்லும் வழியில் ஒரு புல் மேடு. அவ்விடம் ஆடு மேய்ப்போரிடம் பேசி படப்படிப்பை தொடங்கினோம். கதைப்படி SG சார் பட்டினியுடன் இருக்க வேண்டும். மணி பிற்பகல் ஒன்று. உதடுகள் ஒட்டக்காடாது. எச்சில் விழுங்கக் கூடாதென சொல்லியிருந்தேன். One more.. again..one more..சார். என்ன பண்றீங்க. அப்டியில்ல.. திரும்பவும் கீழருந்து மேல ஏறி வாங்க.." என்னை பார்வையால் பொசுக்கப் பார்த்தார். திரும்பிக் கொண்டேன். " Take.."
அவரை பட்டினி போட்டு நாங்கள் அனைவரும் சாப்பிட
"எனக்கென்னுமோ அப்டி தான் தோணுது. நிச்சயமா.. "அவராக பேசிக்கொண்டார். கஞ்சி குடிப்பது போல் shot. நிஜப்பசி. வெறியுடன் சாப்பிட்டார். அக்கணம் அவர் வாழ்வில் வாய்க்காதது. பசித்து புசிப்பதன் அவசியத்தை உணர்ந்தார். பனியைத் தவறவிட்டாலும் வெயிலை பயன்படுத்திக் கொண்ட திருப்தியில் அடுத்த இடம் செல்ல பரவசமாக தயாராக மலை மேட்டிலுருந்து தாவி குதித்தோடி வருகிறார் sgs. " நீங்க எதிர் பாக்காத ஒன்னு எதிர்பாக்காத நேரத்துல கெடக்குது. Come on act." Actor direct செய்ய விழிக்கிறேன் நான். "சார் எனக்கு நடிப்பெல்லாம் வராது. Only direction " " இப்ப பாருங்க நடிப்பீங்க. ஒங்க. Purse கெடச்சிடுச்சி " நாத்துடிதுடிக்க கண்கள் மெல்ல கலங்க.." சார்.." என்றேன்.பரவசத்துடன் சிரித்தபடி " yes pasu. We got it.."
மலை உச்சியிலிருந்து ஓபிலி " சார் பர்ஸ் பைலயே இருக்குதுங் சார் "
உள்ளிருந்து ஓர் உணர்வு திரண்டெழ அதை அடக்கியபடி sg சாரை பார்க்க கண்களுள் ஊடுறுவியவர் "leave it pasu. நான் சொல்லல. அது கெடைச்சிடும். I know. Because you deserve it " என்னை ஆரத்தழுவ பதிலுக்கு அவரை அணைக்கத் திராணியில்லாதவனாய் தளர்ந்து நின்றிருந்தேன். மூச்சிறைத்தபடி ஓபிலி கீழே வந்து " தோள் பையிலிருந்து பர்ஸ் எடுத்து பவ்யமாக நீட்டி, "எல்லாம் கரைக்டா இருக்கான்னு பாத்துக்கோங்க சார். " ஒளிப்பதிவாளர் ஜிக்கு அவரை மெல்ல ஏறெடுத்து பார்க்க " சார் நான் பதறிப் போயிட்டேன். என்ன எங்க எல்லாரும் தப்பா நெனச்சிடுவிங்களோன்னு. நல்ல வேல.." முஷ்டி மடக்கியவாறு ஜிக்கு "இப்ப உன்ன யாரு இங்க உத்தமன்னு சொன்னாங்கன்னு சிலுத்துக்கற.." என்று தோளில் குத்த "கேமரா மேன் சார் கிண்டல் பண்ணாதீங்க சார்." ஓபிலி வெட்கப்பட அனைவரும் ஒரு கொலைக்கு தயாரானார்கள்.
அன்றிரவு காட்டிலிருந்து ஏற்காடு வந்ததும் பிரபாகரன் ஓட்டலில் அமர தோழர் கார்த்திகேயன் வந்து மௌனமாக என்னை கட்டியணைத்து "காலைலேந்து மனசே சரியில்லங்க டாக்டர். இந்த பணம் எவ்ளோ முக்கியம். என்ன பண்ணுவீங்கன்னு..ச்சே..மகிழ்ச்சி" கனத்த முகத்துடன் நின்றார். படப்பிடிப்பு நல்லபடி முடிந்த திருப்தியில் இருந்த நான் அப்பொழுது தான் முழுவதுமாக அச்சம்பவத்தின் ஆலத்தை உணர்ந்தேன். "கார்த்திக் சார் ஒங்களுக்கு பொரோட்டா சொல்லிடவா.. என்றார் ஓபிலி.
***
No comments:
Post a Comment