இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 3 August 2018

வண்ணத்துப்பூச்சியும் கடலும் - பிரமிள் (Thelma & Louise படத்தை முன்வைத்து)

சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சி.

வேலை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

- பிரமிள்.

பிரமிளின் இக்கவிதை வாசகனுடன் கைகோர்த்து நடந்தவாறு அவனை வாஞ்சையுடன் தழுவ தென்றலின் ஸ்பரிசத்தில் மயக்கமுற்றவனாய் மெல்ல அவனையுமறியாமல் மேலே பறக்க அப்பரவசத்தின் உச்சமாய் அனைத்தும் விட்டு விலகி விடுதலையாக அவனை எல்லையற்ற பிரபஞ்சச் சாரத்தில் சங்கமிக்கச் செய்கிறது.

மண்ணில் தோன்றும் எல்லாப் பட்டாம்பூச்சிகளும் தேன் பருக ஆசைப்படுபவை தான். ஆனால் நிதர்சனப் புயல் அவற்றின் சிறகுகளை கருணையின்றி உடைத்தெறிய பற்றுதலுக்கான கரம் தேடித் தவித்து பாதையில்லா பயணியாய் காற்று கூட்டிப் போன திசையில் பறக்க திடீர் பரிசாக கடலுக்கு நடுவே கலங்கரை விளக்காய் ஒரு காட்சி.

அது இரு வகையிலும் அர்த்தப்படுகிறது.
1. தேனுக்கு ஆசைப்பட்டு மலர் தேடியலைந்த அப்பட்டாம்பூச்சிக்கு ஏற்படும் அச்சிலிர்ப்பானது பொய்த்தோற்றத்தாலானாலும் அக்கணத்தை முழுமையடையச் செய்கிறது ஓயாது மலரும் எல்லையற்ற பூவான கடலலை.

2. நிம்மதியை தேடியலைந்த அப்பட்டாம்பூச்சி இதுவரையிலான தன் பயணத்தில் ஒரு துளி தேனையும் காணாது தவித்து தளர்ந்து செயலற்று கிடக்கையில் வாழ்வின் பரிசாக மரணம் வாய்க்கிறது. அது தேனாய் இனிக்கிறது.
வாழ்வின் அபத்தங்களிலிருந்து விடுபட இருத்தலியல் காட்டும் தீர்வு மரணம்(தற்கொலை).

Thelma & Louise படத்தில் அன்றாட அபத்தங்களிலிருந்து விடுபட எத்தனித்து பயணிக்கும் அந்த இரு பெண்களும் மரணம் துரத்த வாழ்வதன் பொருட்டு தங்கலால் முடிந்தவரை ஓடியவர்கள் உச்சக் காட்சியில் மலை உச்சியில் செய்வதறியாது திகைத்து நிற்க மரணத்தேன் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது.

அக்கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது.

**

No comments:

Post a Comment