இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Tuesday, 4 February 2020

காலமற்றவெளி - பாரதிராஜா, வெற்றிமாறன், சொர்ணவேல்



'காலமற்ற வெளி' உள்ளிட்ட பதினைந்து புத்தகங்கள் சென்னை புத்தகக் காட்சியில் வெளியீடு . நன்றி இயக்குநர் அம்ஷன்குமார், பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன்,  எழுத்தாளர்கள் சா. கந்தசாமி, இந்திரன், சித்துராஜ் பொன்ராஜ், கரன் கார்க்கி மற்றும் பாஸ்கர் சக்தி, லஷ்மி சரவணக்குமார், அகர முதல்வன், ஒளிப்பதிவாளர் ரூபன், இயக்குநர் அகத்தியன், வெற்றிமாறன்.


அருமையான தலைப்பு. உலக சினிமாவைப் பற்றி பேசுவதோடு என் சக நண்பர்கள் பாலு மற்றும் மகேந்திரன் பற்றிய நினைவுகளைத் தூண்டுகிறது. சினிமா சார்ந்த முக்கியமான ஆவணம் இப்புத்தகம்.

- பாரதிராஜா

***



ஒரு சமூகத்தில் கலைகளுக்கு இணையான தேவை கலை விமர்சனங்களுக்கும் திறனாய்வுகளுக்கும் இருக்கின்றது. சினிமா என்னும் இக்கலை வடிவமும் அதன் ஆரம்ப காலத்திலிருந்து அத்தகைய ஆளுமைகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டும் ஆழமாக திறனாய்ந்தும் வளர்ந்தது தான். ப்ரான்ஸில் புதிய அலை (New Wave), இத்தாலியில் நியோ ரியலிஸம் (Neo - Realism ), ப்ரெஸிலில் சினிமா நோவோ (Cinema Novo), கனடாவில் சினிமா வெரைட் (Cinema Verite), என்று ஒவ்வொரு பிராந்தியத்திலும் அம்மக்களுக்கும் நிலத்திற்கும் சூழலுக்கும் தக்கவாறு கோட்பாடுகள் உருவாயின. அக்கோட்பாடுகளை கட்டமைத்த திறனாய்வாளர்களே (Critics) பிறகு சிறந்த திரைப்பட மேதைகளாகவும் விளங்கினர். ஐசன்ஸ்டீன், Dziga vertov, ஆந்த்ரே பேசின், த்ரூபா போன்ற கலைஞர்கள் அப்படி உருவானவர்களே.

தமிழ்த்திரைப்படச் சூழலில் திரைப்பட அவதானிப்பை கல்விக்கூடங்களில் பாடமாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த எங்கள் குருநாதர் பாலு மகேந்திராவின் மாணவர்களில் ஒருவரும் என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசுபதி எழுதியிருக்கும் 'காலமற்ற வெளி' என்னும் இத்தொகுப்பு முக்கியமானது.

- வெற்றிமாறன்.

***

பாலு மகேந்திரக்காலம் என்று சொல்லப்படக்கூடிய தற்காலத்தில் அவரது பட்டறையில் பயின்ற இயக்குனர்களான பாலா, வெற்றிமாறன், ராம், மற்றும் சீனு ராமசாமி போன்றோர்களின் இந்த யுகத்தில் Marudhan Pasupathi மருதன் பசுபதியவர்களின் இந்த அருமையான சினிமாவைப் பற்றிய ஆழந்த சிந்தனைகள் நிறைந்த இக்கட்டுரைகளின் தொகுப்பு ‘காலமற்ற வெளி’ மனதிற்கினிய வரவு. ஏனென்றால் இப்புத்தகம் பாலு அவர்களின் ஒளிப்பதிவு/ இயக்கத்தின் உந்துசக்தியாக இருந்த அவரது கலையாளுமையின் ஊற்றுவாயாக இருந்த சீரிய சினிமாவை பற்றிய ஈர்ப்புக்கும் அலசலுக்கும் இட்டுச்செல்கிறது. அந்த வகையில் அவருக்கு தனது மாணாக்கர்கள் அளிக்கும் அஞ்சலியில் இதுவே அணுக்கமானதாக இருக்கலாம்.

- சொர்ணவேல் ஈஸ்வரன்
இணைப் பேராசிரியர்
ஆங்கில மற்றும் ஊடகத்துறை
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம்
USA.


No comments:

Post a Comment