'சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.'
- கணியன் பூங்குன்றன்.( புறநானூறு )
ஒன்னரை வருடங்களுக்கு முன்பு என் வலைதளத்தின் முகப்பு வரிகளாக கணியனின் இவ்வரிகளை இடுகையிட்டும் இதுநாள் வரையிலும் அவ்வரிகளின் முழுமையை உள்வாங்கவோ அதனை நடைமுறைப்படுத்தவோ செய்ததில்லை. கடந்த ஆறுமாத கால வாழ்க்கை கற்பித்த பாடங்களை கொண்டு நோககுகையில்..
முக்கியமாக, பற்றறுத்தல் பழகவே பிரியப்பட்டவனாயினும் இரத்த பந்தம் ஏற்படுத்தும் நெருக்கம், நடுக்கம்.. ' தானாடாவிடினும் தன் சதை ஆடும்' எனும் கூற்றை எனக்குணர்த்தி வருகிறது. பயணத்தில் என் நீட்சியான பைக்கில் பயணிக்கையில் பற்றருதொருபந்தத்தை அதனிடத்தில் விட்டு விட்டு செல்கையில் பலகாலம் கழித்து என் கன்னங்களில் வழிந்தோடிய உறவெச்சமும், 'Helmet'- யினுள் வியாபித்த அழுகையொலியும் ' பற்று ' என்ற பதத்தை அலசுவதை விட்டு, அன்பின் அவசியத்தை ஆராய எனை வினவியது.
கடைசியாக கடவுள் கை விரித்த பிறகு தோள்சாய தாங்கி நிற்கும் மனமே மானுடப் பிறப்பில் மனிதன் பயில வேண்டிய பன்படவேண்டிய இடமாகப் படுகிறது. அவ்வகையில் தனி மனித லட்சியம், கொள்கை, தேடல் கடந்து ஒருவன் தன வாழ்க்கையை கடவுளால் கைவிடப்பட்ட சகமனிதனுக்கு
அர்ப்பணிப்பதில் முழுமையடைகிறது என உணர நேரிட்டது.
என் மற்றொரு பற்றருபொருள் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளானதாக மனோதத்துவ மருத்துவர்கள் அறிவித்த சமயமும் இதே உணர்வே மேலிட்டது.
( மனிதன், மனித வாழ்வின் சூட்சுமத்தை பிரபஞ்ச ரகசியத்தை முழுமையாக அறியாவிடினும் அறிந்தாற்போல் அனைத்தயும் அனைவரையும் கணித்து முத்திரை குத்திவிடுவதில் வல்லவன் , [..the so called DOCTORS, WRITERS, etc.,] அவர்களால் அவ்வண்ணம் கணிக்கப்பட்டதோர் உன்னதாத்மா பலபேரின் வாழ்க்கையுள் ஒளியாக ஊர்ந்து தன்போல் யாவும் யாதும் பெறவேண்டி செயல்படுவதை மௌன சாட்சியாக பார்த்து கொண்டுதானிருக்கிறது இயற்கை. நிற்க.)
இருப்பினும் காலம் செல்ல செல்ல என் சிற்றின்ப தூண்டல்கள் தீண்டவே மீண்டும் உயிர்த்த பழகிய போக்குகள், அதன் தொடர்ச்சியாக அதனுடனான முரண், என கழிந்து வந்த நாட்களின் இறுதியாக கடந்த சில நாட்களாக கடைபிடித்து வந்த என் குருநாதன் பயில்வித்த நேர்மை,ஒழுக்கம்,திட்டம்,நிதானம் ஆகிய குணங்களை கடைபிடித்து வருகையில் ஏற்பட்ட உணர்வெழுச்சியின் உச்சமாக மார்கழி மாதக் காலைப்பொழுதில்,கடுங்குளிரில் வெந்நீர் கொண்டு குளிக்கையில், இதுபோல் தான் நினைத்தாலும் எதை கடைபிடித்தாலும் மாற்றிக்கொள்ள முடியாததோர் ( the so called..) வாழ்க்கை வாய்க்கப்பெற்ற என் பற்றுக்கானதோர் ஜீவியின் வாழ்வை எண்ணுகையில் சற்றுமுன் மேலெழுந்த உணர்வேழுச்சியாகப்பட்டது அதே வேகத்தில் அதர பாதாளத்தில் பணிந்தது.
அத்தருணம் என் அகத்துள் எழுந்த எண்ணம் இதுவே .
" கிட்ட இருக்கறதால தான நீ மத்த உயிர் பத்தி இவ்ளோ கவல பட்ற. ஒன் கிட்டக்க மட்டுமில்ல, ஒலகம் முழுக்க ஒன் கண்ணுல படாத எத்தனையோ சக ஜீவிங்க ஒன்னால நெனச்சி கூட பாக்க முடியாத அளவு ரணமான வாழ்க்கைய வாழ்ந்துட்டு தான இருக்காங்க. இது ஒனக்கு தெரியாதா என்ன. ஆனாலும் எந்த நம்பிக்கையில அவங்கெல்லாம் வாழறாங்க. அந்தந்த உயிருக்கான வாழ்வாதாரம்னு, வசந்தம்னு கடவுள் ஏதோ ஒன்ன காட்டாமலா அவங்கெல்லாம் வாழ்ந்திட்டிருக்காங்க. அலறப்ப தோள் கொடுப்பியாம்.அது வரையில ஒனக்குன்னு விதிச்ச வாழ்க்கையில ஒன் வேலைய மட்டும் நீ பாப்பியாம். என்ன சரியா.."
' சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.'
குளித்து முடித்து பாதியில் விட்ட, 'Ernest Hemingway' - ன் ' கடலும் கிழவனும் ' நாவலை தொடர்ந்தேன்.
என் அகமாற்றத்தை சிறிதும் பொருட்படுத்தாது என்னை சுற்றி சக வாழ்வுகள் பயனித்தபடியே தானிருந்தது.
அப்பிரக்ஞையுடன் என் பார்வை அந்நேரம் அந்நாவலில் மட்டுமே குவிந்திருந்தது.
நாவலில் :
கிழவா ! நீ தூங்கவே இல்லையே. பாதி நாள் - முழு இரவு - மற்றொரு நாளும் வந்துவிட்டது. இன்னும் நீ சரியாகத் தூங்கவில்லையே. மீன் நிதானமாக ஓடும்போது நீ கொஞ்சம் உறங்கத்தான் வேண்டும். தூக்கமில்லாமல் மூளை தெளிவாயிராது.
" என் மூளை தெளிவாகத்தானிருக்கிறது. அதிகத் தெளிவாயிருக்கிறது. என் சகோதரர்களான வான் மீன்களைப்போல் என் மனம் தெளிந்தேயிருக்கிறது.
எனினும், நான் தூங்கத்தான் வேண்டும். எல்லாம் தூங்குகின்றன. சந்திரனும் சூரியனும் கூடத் தூங்குகின்றனர். காற்றில்லாத போது கடல் கூடத் தூங்குகிறது. "
***
பாடும் பறவை ஒன்று சோர்ந்து கிழவனின் படகின் மேல் அமர்ந்துள்ளது. பருந்துகள் அதனை சுற்றி வளம் வருகின்றன.
கிழவன் கூறுகிறான் :
" சின்னஞ்சிறு பறவைச் சிறுமியே ! நன்கு இளைப்பாறு ! பின் வாழ்க்கை உனக்களிக்கும் சந்தர்ப்பத்தை மனிதனைப்போலும், பறவைகளைப்போலும், மீன்களைப்போலும் தைரியமாக ஏற்றுக்கொள். "
***
' சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே '.
*****