இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Monday, 28 January 2019

அம்சன்குமார் - சினிமா பாடம்

இயக்குநர் அம்ஷன்குமார் அவர்களின் பதிவைத் தொடர்ந்து நடந்த உரையாடல். தோழர்கள் தொடரலாம்.

Amshan kumar : மாற்று சினிமாவை தமிழ் ரசிகர்கள் ஒருபோதும் அரவணைத்தது இல்லை என்பது சரித்திரம் . முழுக்க முழுக்க அது தனிமனிதர்களின் முன்னெடுப்புகளாக மட்டுமே இருந்துள்ளன. நிமாய்கோஷ் காலத்திலிருந்து இதுதான் இங்கு நடைமுறை.

Md : நம்மை நோக்கி அவர்களை வரவைப்பதும் நம் கடமையே

Amshan : Md Pasupathi கலைஞர்கள் தங்கள் கரங்களை பலகாலமாக ரசிகர்கள் முன் நீட்டியபடி உள்ளனர். ரசிகர்களும் பொறுப்பினை உணரவேண்டும். திரும்பத்திரும்ப கலைஞர்களின் கடமையை மட்டும் வலியுறுத்துவது தவறு.

Md : ஆசான் பாலு மகேந்திரா வழியுறுத்தியதைப் போல சினிமாவை பாடத்திட்டத்தில் சேர்த்து நம் பிள்ளைகளுக்கு சினிமா அவதானிப்பு பற்றிய பயிற்சி அளிப்பதே நாளைய மாற்றத்திற்கான தீர்வு. சமீபத்தில் நாங்கள் எடுத்த குறும்படத்தை ஒரு மலைகிராம பள்ளி மாணவர்களுக்கு திரையிட்டோம். அவர்களுள் மாற்று சினிமா பற்றிய சிந்தனையை விதைத்தாயிற்று. இது போல் பலரும் செய்வது அவசியம். இதை விருட்சமாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

Amshan : தமிழ்நாட்டில் ஏராளமான கல்வி நிறுவனங்களில் விஸ்காம் பிரிவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமா போதிக்கப்பட்டு வருகிறது. உலக சினிமாபற்றி அறிமுகம் உள்ளது. ஆனாலும் தமிழ் சினிமா என்று வந்துவிட்டால் இங்கே அது தன் ஒற்றைப்பரிமாணத்துடன்தான் சுழல்கிறது. அங்கும் இங்குமாக பரவியுள்ள சில ஆயிரம் கலை சினிமா ஆர்வலர்களால் ஒரு படத்தை வசூல் ரீதியாக தூக்கி நிறுத்த முடியாது. மேற்கு வங்காளம் கேரளா மாநிலங்களில் நிலைமை வேறு.

Md : சிக்கலே அங்கிருந்து தான் தொடங்குகிறது. பதினேழு வருடங்களாக நமது பள்ளிகளிலும் வீட்டிலும் அடிப்படைகளை (இச்சமூகம் போற்றும் சந்தர்ப்பவாத போட்டி மனோபாவ வாழ்க்கை நெறிகள், போலி நாயக பிம்ப சினிமா உட்பட) போதித்து குழந்தைகளை கறைபடுத்தி விட்டு வாலிப வயதில் திடீரென புது உலகை அறிமுகப்படுத்தும் போது தடுமாறி விடுகிறார்கள். B'coz their mind were already rooted in a distorted soil.

Amshan : Md Pasupathi தோழர் பசுபதி,அதுவல்ல பிரச்சனை.பதின்ம பருவம் தாண்டிய பின்னரே நிறைய துறைகளை இளைஞர்கள் அறிமுகம் கொள்கிறார்கள் . நம்மில் எத்தனை பேர்கள் பள்ளியில் இலக்கிய ஈடுபாடு கொண்டிருந்தோம் ? நமது பள்ளிப்படிப்பே பலவகைகளிலும் பயனற்றதாகவுள்ளபோது அதில் கற்பிக்கப்படும் சினிமா மட்டும் எவ்வாறு நாம் விரும்பும் மாற்றத்தை கொண்டுவர இயலும்? நான் சொல்வது சமூக பண்பாட்டுத் தளங்களில் நமது சினிமா அக்கறை தொடரவேண்டும் என்பதைத்தான்.

Md :தோழர். பயனற்ற படிப்பை கற்று வளர்ந்த கூட்டம் சமூக பண்பாட்டு தளத்தில் மட்டும் எப்படி அக்கறை கொள்ளும். ஆசிரியரகள் அதிகாரிகள் ஆட்சியாளர்கள் என சங்கிலித்தொடராக நீளும் இப்பிரச்சனைக்கான தீர்வு என்னவாக இருக்க முடியும். நம் ஆதங்கமும் புலம்பலும் மட்டுமே நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தாது அல்லவா. எனவேதான் இரண்டு தலைமுறைகளாவது தாண்டி ஏற்பட வேண்டிய மாற்றத்திற்கான நமது இன்றைய செயல்பாடுகள் குழந்தைகளை மையம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது.

Amshan : Md Pasupathi உங்கள் எண்ணத்தை வரவேற்கிறேன் . நான் கல்வி நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல. பல கல்லூரிகளில் நான் சினிமா வகுப்புகள் எடுத்துள்ளேன். அவ்வகுப்புகளை அந்நிறுவனங்கள் பெரும் பாலான தருணங்களில் சடங்குகள்போல் பாவிப்பதை நான் அறிவேன் . தவிரவும் நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதிலேயே ஆசிரியர்கள் தடைகற்களாக இருக்கும்பொழுது நமக்கு ஒப்பீட்டளவில் புதிதான சினிமாவை அவர்கள் எவ்வாறு புரிந்து போதிப்பார்கள் என்பதில் நமது யூகங்கள் அதிகம் செயல்படுகின்றன. தன்னெழுச்சியுடன் குடிமக்களாகிய நாம் செயல்பட வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு பூர்த்தியானால் உடனடியான விளைவுகள் ஏற்படும். கல்வி நிறுவனங்கள் தங்கள் பணிகளை சீரிய முறையில் தொடர்ந்தால் நல்லதுதான். வரவேற்போம்

Md : உண்மை தான் தோழர். கல்விக்கூடங்களில் நாமே நேரடியாக சினிமா வகுப்பெடுக்க வழிசெய்ய வேண்டும். சிறார்களுடன் அவ்வப்பொழுது இது போன்ற படங்களுடன் நாம் நேரடியாக உரையாடுவோம். அது அவர்களின் சிந்தனைப் போக்கில் நிச்சயம் ஒரு சலனத்தை ஏற்படுத்தும். மற்றபடி காத்திருப்போம்.

**

Saturday, 26 January 2019

சினிமா பாடம்

ஆசான் பாலு மகேந்திரா வழியுறுத்தியதைப் போல சினிமாவை பாடத்திட்டத்தில் சேர்த்து நம் பிள்ளைகளுக்கு சினிமா அவதானிப்பு பற்றிய பயிற்சி அளிப்பதே நாளைய மாற்றத்திற்கான தீர்வு. சமீபத்தில் நாங்கள் எடுத்த குறும்படத்தை ஒரு மலைகிராம பள்ளி மாணவர்களுக்கு திரையிட்டோம். அவர்களுள் மாற்று சினிமா பற்றிய சிந்தனையை விதைத்தாயிற்று. இது போல் பலரும் செய்வது அவசியம். இதை விருட்சமாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. படத்தைப் பற்றி துள்ளியமாக பேசிய ஐந்தாம் வகுப்பு மகேஸ்வரி மற்றும் ஏழாம் வகுப்பு திருவாசகன் இருவரும் புத்தகங்களை பரிசாக பெற்றுக் கொண்டார்கள்.


https://m.facebook.com/story.php?story_fbid=511764032665837&id=100014967340238 **
மிருனாள் சென் பற்றிய எமது கட்டுரை, 'இடம் காலம் கலகம் கனவு : மிருனாள்', பிப்ரவரி மாத படச்சுருளில். - மருதன் பசுபதி
ரே அளவிற்கு கொண்டாடப்படவில்லை கட்டக். அவருக்கு அடுத்து சென். ஜப்பானில் அகிராவுக்கும் ஓசுவுக்கும் மிஜொகோசிக்குமான இடத்தைப் போலவே. இருப்பினும் காலம் தக்க சமயத்தில் இம்மகோன்னதக் கலைஞர்களை போற்றும். அவர்களின் படைப்புகளால் பயனடையும். தங்கள் கலையையும் வாழ்க்கையையும் பிரித்தறியாத இவர்கள் தங்களின் படைப்பின் வழியே அம்மாற்றங்களை தரிசித்தபடியே இருப்பர்.

வங்க சினிமாவின் அடையாளமான மும்மூர்த்திகள் ரே கட்டக் மற்றும் சென். இவர்களுள் ரே மேட்டிமைக் கலைஞர். கட்டக் இடப்பெயர்வால் அல்லளுற்ற துயரை கலையாக்கியவர். சிதைவுகளையும் புத்துயிர்ப்பையும் செய்து காட்டி எப்பொழுதுமே தன்னையும் தன் கலையையும் மாற்றத்திற்கு தயாராக வைத்திருந்தவர் சென். அதனால் தான் அவரால் இப்படி சொல்ல முடிந்திருக்கிறது. 'சிதையக்கூடிய நம்பிக்கைகளை திடமாக மறுக்கிறேன். நான் வாழ்வை எதிர்கொள்கிறேன். போராடுகிறேன். பதற்றத்திலேயே வாழ்கிறேன். நான் வாழ்வதாலேயே யாவற்றையும் கடந்து பார்க்கிறேன். கனவு காண்கிறேன்'.

Friday, 11 January 2019

ஆவணப்பட இயக்கம்

விருட்சகம் பதிப்பகத்தில் அம்சன்குமாரின் 'ஆவணப்பட இயக்கம்' புத்தகத்தை அழகிய சிங்கர் தோழர் அஜயன் பாலாவுடன் பெற்றுக் கொண்டு உரையாடிய போது தெருக்கூத்தைப் பற்றிய எனது ஆவணப்படமான 'An inquiry into the personality of an artist' பற்றியும் ஏற்காட்டில் மலைக்கிராம மாணவர்களுக்கு குறும்படம் திரையிட்டதையும் கேட்ட அம்சன்குமார், " Feature film அ எப்ப வேணும்னா எடுக்கலாம். ஆனா இப்ப செய்யறீங்களே இந்த work தான் முக்கியம். காலாகாலத்துக்கும் நெலைக்கும். படம் எடுக்கறது மட்டுமில்ல அத மக்கள்கிட்ட கொண்டு போறதும் நம்ம கடம தான்" என்றார். ஜான் அப்ரகாம் நினைவுக்கு வந்து போனார். True sir. Moved with your words. Shall continue my work.



Thursday, 10 January 2019

தத்துவக் கல்லூரியில் BD திரையிடல்





 ஏற்காடு தத்துவக் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் பாதரியார்கள் மற்றும் தாவரவியலாளர் பங்கு பெற்ற Break Down குறும்படத் திரையிடலில் மாணவர்கள் துள்ளியமாக படத்தின் உட்கருவை விவரித்து படத்தின் ஒவ்வொரு படிமங்களையும் குறியீடுகளையும் விலாவாரியாக பேசியது சிறப்பு. பாதரியார் திரு. ராஜ் மரிய சூசை அவர்கள் இப்படத்தை 'மேற்கு தொடர்ச்சி மலை' யுடன் ஒப்பிட்டு இதை வெள்ளித்திரை படமாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தயாரிப்பாளர் முன்வந்தால் நாங்கள் தயார் என்றோம். இறுதியாக தத்துவ பேராசிரியர் திரு. அர்னால்டு மகேஷ் கேட்டார், கே : நாம் இயற்கைக்கும் தொழில்நுட்பத்துக்கும் நடுவே ஒரு இடத்தை அமைத்துக் கொள்வது எப்படி ? ப : ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது. **
 One more screening in yercaud retreat in which students professors priests n a botanist was participated followed by detailed discussion. Felt excited with the overwhelming response from those philosophy students. Some of them mentioned the precise meaning of some shots n symbols in the film.The principal Mr. Raj mariya soosai stated that this film resembles the tamil feature 'merkku thodarchi malai' in some aspect n asked us to make it as a feature. "We r always ready for that if any producers r willing to invest" we said. And finally Mr. Antony mahesh, philosophy professor asked, Q : How should we make a balance between nature and technology ? A : Everyone has to ask this question to themselves. ...

Monday, 7 January 2019

ஐ.ஏ.எஸ். படித்த அத்தனை பேரும் சமூக பொறுப்புள்ள இலக்கியவாதிகளாக திகழ்வதில்லை. சென்னை புத்தகக் காட்சியில் 'யாவரும்' பதிப்பகத்தில் வீரபாண்டியனின் 'சலூன்' நாவல். வாழ்த்துகள்.

மலைகிராம மாணவர்களுக்கு சினிமா




 திரைப்படத்தை நமது பாடத்திட்டத்தில் சேர்த்து மாணவர்களுக்கு நல்ல சினிமாக்களை அவதானிக்க கற்றுத்தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் ஆசான் பாலுமகேந்திரா. இன்னும் ஏற்காட்டையே பார்த்திறாத மலைக்கிராமமான செங்காடு பள்ளி மாணவர்களுக்கு சமீபத்தில் எடுத்த குறும்படமான Break Down ஐ காண்பிக்கலாமென சொன்னார்கள் தோழர் கார்த்திக் மனோ மற்றும் தேவ பிரகாஷ். இப்படம் சிங்கப்பூரில் திரையிட்ட போது அங்குள்ள சீன மலாய் மற்றும் இந்திய மக்கள் அவர்கள் வாழ்வுடன் தொடர்புப்படுத்தி சிந்திக்கலானார்கள். ஆனால் இயற்கை சூழ்ந்த மலையில் வாழும் குழந்தைகள் இப்படத்தை எதற்கு பார்க்க வேண்டுமென யோசித்தோம். இருப்பினும் எங்களின் நோக்கம் நாயக பிம்ப திரைப்படங்களையே பார்த்து வளர்ந்த பிள்ளைகளுக்கு இது போன்ற படங்களை அறிமுகப்படுத்தி இப்படியும் சிந்திக்கலாம் என்று ஒரு பாதை அமைப்பதே. திரையிட்டோம். ஆச்சரியம் என்னவென்றால் படத்தை அவர்கள் கவனம் சிதறாமல் பார்த்ததுடன் படத்தின் அழகியலை ஒவ்வொரு காட்சியாக விவரித்ததுதான். அதில் ஏழாம் வகுப்பு மாணவன் திருவாசகன் திரைக்கதையை விலாவரிவாக கூறினான். "கடைசியில அவருக்கு என்ன ஆவுது ?" என கேட்டதிற்கு ஐந்தாம் வகுப்பு மாணவி மகேஸ்வரி சட்டென ".. அவருக்கு மனசே வரல" என மிகத்துள்ளியமாக சொன்னது பேரானந்தத்தைத் தந்தது. கேள்வி கேட்கச் சொன்னதும் " இந்த படத்த எத்தன நாள் எடுத்தீங்க ?" " எந்த கேமராவுல எடுத்தீங்க ?" "கார்ல போறத எப்படி எடுத்தீங்க ?" " நெறய எடுத்துட்டு அதுல சரியானத மட்டும் வச்சிக்கிட்டீங்களா? படத்தொகுப்பு என்னும் வார்த்தை மட்டுமே நாங்கள் அறிமுகப்படுத்தியது. மற்ற அனைத்தும் அவர்களுக்கு தெரிகிறது. அதற்கு அவர்களின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி முக்கிய காரணம். காமிரா கொடுத்து படம்பிடிக்கச் சொல்வாராம். இதைத்தான் எதிர்பார்த்தோம். இச்சிறுவர்களின் அவதானிப்பும் அவர்களின் சிந்திக்கும் திறனும் தான் நம் தேவை. மாற்றம் அவ்விடத்திலிருந்து தான் தொடங்க வேண்டும். இப்படம் முழுமையானதல்ல. குறைகள் இருக்கின்றன. திரைப்பட விழாக்களில் விருது வாங்கலாம் கண்டுகொள்ளாமலும் போகலாம். அறிவுஜீவிகள் எப்படியும் விமர்சிக்கலாம். அது இரண்டாம் பட்சம் தான். இருப்பினும் இது செய்ய வேண்டியவற்றை செய்கிறது. நன்றி.

Thursday, 3 January 2019

சரேலென பறந்து சரிந்து இறங்கி நிலைத்த நீரின்மேல் நின்றது ஒரு நிறமற்ற பறவை. அலகில் அலகு பொருத்தி அலைகளிலாடும் தன்னை அது அருந்திவிட்டுச் சென்றது. நுண்ணுணர்வு மிக்க மனிதர் கவிஞர் வேணு வேட்ராயன். இன்று துவங்கும் சென்னை புத்தகக்காட்சியில் விருட்சம் பதிப்பகத்தில் அவரின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீடு. வாழ்த்துகள். **

Wednesday, 2 January 2019

மாயக்கலைஞன் மண்ட்டோ

  இந்திய பாகிஸ்தானிய எழுத்தாளரான மண்ட்டோ' வைப்பற்றி நந்திதா தாஸ் எடுத்த திரைப்படத்தை முன்வைத்து மண்ட்டோ எனும் ஆளுமை பற்றிய எமது கட்டுரை, அயல் சினிமாவில்.     











   
I say a clear 'no' to fragile optimism.
I confront,
I fight
I survive on tension. And as
I survive
I look beyond. And
I dream.

- Mrinal dha