இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 27 May 2018

ஸ்டெர்லைட்டுக்காக Coral Mill Strategy - திருமுருகன் காந்தி

தூத்துக்குடிக்கு வ.உ.சி விட்டுச்சென்ற கோரல் ஆலை போராட்ட வடிவத்தை முன்னெடுப்போம்..

இனி இந்த போராட்டத்தை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது. இனி அரசுக்கு எதிரான
போராட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை சார்ந்ததாகவோ, குறிப்பிட்ட இடம் சார்ந்ததாகவோ,
குறிப்பிட்ட மக்கள் சார்ந்ததாகவோ இருக்க முடியாது..

அதேசமயம், தூத்துக்குடியில் துவங்கியிருக்கிற இந்த ‘அரச வன்முறை’ என்பதற்கு எதிரான போராட்ட
வழிமுறை என்பதும் இதே தூத்துக்குடியிலேயே 110 வருடங்களுக்கு முன்பு வ.உ.சி அவர்களால்
கண்டெடுக்கப்பட்ட ஒத்துழையாமை என்னும் வழிமுறையாக இருக்கிறது.

‘கோரல்மில்’ போராட்டம் வழிமுறை என்பது இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஏகாதிபத்திய எதிர்ப்பு வழிமுறை போராட்டம் ஆகும். கோரல் மில் போராட்ட வடிவத்தின் மூலமாக ஒட்டுமொத்த மக்களும் ஆங்கிலேயே அரசையும் அதன் கைக்கூலிகளையும் சமூக புறக்கணிப்பு செய்வது என்பதை எளிய மக்களுக்கு உகந்த வெற்றிகரமான போராட்ட வடிவமாக
வரலாற்றில் நிரூபித்தவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள்.

‘கோரல்மில்’ என்பது ஆங்கிலேயர்களால் தூத்துக்குடியில் துவங்கப்பட்டு அந்த பகுதி மக்களின்
உழைப்பை கடுமையாக சுரண்டி வளர்ந்தது. காலநேரம் இல்லாமலும், வார விடுமுறை இல்லாமலும்,
கடுமையான தண்டனைகளாலும் பல்வேறு இன்னல்களோடு உழன்ற தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப்போரின் முதல் தொழிலாளர் போராட்டமாக
முன்னெடுத்தவர் வ.உ.சி.

கோரல்மில் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கும், அவர்களின்
ஆதரவாளர்களுக்கும் தூத்துக்குடி வணிகர்கள் #மளிகைப் பொருள்களை விநியோகம் செய்ய மறுத்தனர்!!
#துப்புரவு தொழிலாளர்கள் அவர்கள் வீடுகளில் துப்புரவு பணிகளை செய்ய மறுத்தனர்!!

வெள்ளையர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்களுக்கும் சவரத் தொழிலாளர்கள்
#சவரம் செய்ய மறுத்தனர்!!
சலவைத் தொழிலாளர்கள் அவர்களுக்கு #துணிகளை சலவை செய்ய மறுத்தனர்!!
கடுமையான உறுதியான சமூக புறக்கணிப்புக்கு உள்ளான வெள்ளையர்கள் ஊருக்குள் தங்க பயந்து
அலுவலகங்களிலேயே தங்க ஆரம்பித்தனர்.

இப்படித்தான் ஆங்கிலேயர்களை பணியவைத்தது வ.உ.சியின் Coral Mill strategy.
முடிவில் ‘கோரல்மில்’ போராட்டம் வெற்றி பெற்றது!!

லண்டனின் கிழக்கிந்திய கம்பெனிக்காக நடத்தப்பட்ட காலனிய ஆட்சிக்கும், லண்டனில் வாழும்
வேதாந்தாவிற்காக நடத்தப்படும் இன்றைய அரசிற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது இப்போது
நிரூபணமாகி இருக்கிறது.

வெள்ளையர்களை விரட்டி சுதந்திரம் அடைந்ததாக நம்பிக்கொண்டிருந்த நாம் 110 ஆண்டுகளுக்கு முன்
வெள்ளையர்களுக்கு எதிராக நடத்திய ‘கோரல்மில்’ மாதிரியான போராட்டத்தையே திரும்பவும் நடத்த
வேண்டியிருக்கிறது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக
ஸ்டெர்லைட் ஆலையை, அதன் அதிகாரிகளை, அதற்கு ஆதரவான அரசு அதிகாரிகளை, காவல்துறையினரை,
சமூக புறக்கணிப்பு செய்வது அவசியமாக இருக்கிறது.

இந்த சமூக புறக்கணிப்பு என்பது ஸ்டெர்லைட் ஆலையில் திமுக ,அதிமுக போன்ற பெரிய கட்சிகளின்
பிரமுகர்கள் எடுத்து வைத்திருக்கும் லாரி கான்ட்ராக்ட்டுகளில் இருந்து துவங்க வேண்டும், இவற்றை இந்த
அரசியல் கட்சிகள் கைவிடாத பட்சத்தில் திமுக ,அதிமுக, காங்கிரஸ், பிஜேபி போன்ற ஆளும் வர்க்க
கட்சிகளை ஒட்டுமொத்தமாக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்..

கொலைகார ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நிற்கும் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஆலை
அதிகாரிகளுக்கு உணவு, பலசரக்கு போன்ற பொருள்கள் வழங்குவதில்லை என்று வணிகர்கள், சிறுகடை
சங்கங்கள் மூலமாக முடிவெடுக்க வேண்டும்..

காவல்துறை அதிகாரிகள் உடனான திருமண உறவுகளை தவிர்க்க அனைத்து மக்களும் முடிவெடுக்க
வேண்டும்..

ஹோட்டல் சங்கங்கள் ஸ்டெர்லைட் அதிகாரிகளுக்கு உணவு வழங்குவதில்லை என்று முடிவெடுக்க
வேண்டும்..

கொத்தனார்கள், சித்தாள்கள், போன்ற கட்டட தொழிலாளர்கள் அரசு மற்றும் ஆலை அதிகாரிகளுக்கு
வேலை செய்வதில்லை என்ற புறக்கணிப்பை அறிவிக்க வேண்டும்..

வயர் மேன்கள், பிளம்பர்கள், சிறிய காய்கறி, பழ வண்டிகள் போன்ற அத்தியாவசிய சேவை
தொழிலாளர்கள் முற்று முழுதாக காவல்துறையினரையும், ஸ்டெர்லைட் அதிகாரிகளையும் புறக்கணிக்க வேண்டும்..

துப்புரவு சங்கங்கள், நாவிதர்கள், சலவை தொழிலாளர்கள் சங்கங்கள், பிற அத்யாவசிய சேவை
மற்றும் தொழிலாளர்கள் தத்தமது சங்கங்கள் மூலமாக அரசின் ஏவல் அதிகாரிகளையும், ஆலை
அதிகாரிகளையும் சமூக புறக்கணிப்பு செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும்..

இதன் மூலம் ஏற்படும் பொருளாதார வேலை இழப்புகளை விட தினம், தினம் தூத்துக்குடியில்
நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மோசமானது..

ஸ்டெர்லைட்டின் சூழலியல் நெருக்கடிகளால் உண்டாகும் கேன்சர் போன்ற கொடிய நோய்த்தொற்று
என்பது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள்
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்..

ஆலை எதிர்ப்பு போராட்டம் என்பது வெறுமனே தொழிலாளர் போராட்டமாக இல்லாமல் அனைத்து
தரப்பு மக்களின் ஒத்துழைப்போடு சமூக புறக்கணிப்பு போராட்டமாக வளரும்போது அது
ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராக வளர்ந்தது என்பது வரலாறு.

சுதந்திர போரின் ஈடுஇணையற்ற தலைவர் வ.உ. சிதம்பரனாரின் போராட்ட வழிமுறையை அவரின்
மண்ணில் இருந்தே தமிழர்களே தொடங்குவோம்..​​

- திருமுருகன் காந்தி

No comments:

Post a Comment