இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 5 December 2018

விருதுகள்

ஆசான் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேரச் சென்றபோது எமக்கு கொடுத்த முதல் பணி அவ்வருடம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற திலகவதி அவர்களின் 'கல்மரம்' நாவலை திரைக்கதையாக எழுத வேண்டும் என்பதே.

இது..
கல்மரம் சார்.
இது..
இந்த வருஷம் சாகித்ய அகாதெமி விருது வாங்கிருக்கு.
இது..
கட்டடத் தொழிலாளர்களோட வாழ்க்கையப் பத்தினது.
ஏறெடுத்துப் பார்த்தவர்,
"திரைக்கதையா எழுதிட்டு வரயா.."

மூன்று நாட்களுக்குப் பிறகு சென்றேன். இப்போது இயக்குநர்களாக இருக்கும் பாலு சாரின் உதவி இயக்குநர்கள் சூழ அக்கதையை சொல்லச் சொன்னார். அரைமணி நேரம் கழிந்த பின் கன்னத்தில் கையூன்றியபடி இருந்தவர் மெல்ல நிமிர்ந்து

" உஸ்... டீ சாப்டலாம்டா. "

அனைவரும் களைய "நல்லா சொல்றடா. I like ur narration "
" Thank u sir "
"But.. நீ எப்டி சொன்னாலும் இந்த கதைல ஒன்னுமே இல்லயேப்பா "

அப்பொழுது தான் நான் சற்றே ஆசுவாசப்பட்டேன்.

"yes sir. நானும் அதான் feel பண்ணேன். But நீங்க சொன்னதால இதுக்குள்ள தேடித்தேடி நல்லா சொல்லிடனும்னு.."

" இந்த திலகவதி ரொம்ப அன்பான பொண்ணுப்பா. 'அண்ணா.. சாகித்ய அகாதெமி விருது வாங்கியிருக்கற என் நாவல படிச்சு பாருங்க. நீங்க படமா எடுத்தா பெருமையா இருக்கும்ணா' ங்கறா. அதான்.. "

மௌனமாக யோசித்தபடி இருந்தவர் தேநீர் வந்ததும் ஒருக்க சிப்பி நிமிர்ந்து உட்கார்ந்தபடி திடமாகச் சொன்னார்,

"..But ஒருத்தர் அன்பா இருக்காங்க ங்கறதுக்காக படம் எல்லாம் எடுக்க முடியாதில்ல " என்றபடி சட்டென எழுந்து நடக்கலானார்.

**

இலக்கியம் சினிமா அறிவியல் விஞ்ஞானம் லொட்டு லொசுக்கு எல்லாம் மானுட வாழ்க்கைக்கே. விருது வாங்கட்டும் வாங்காமப் பொகட்டும். எம் கடன் பணி செய்து கிடப்பதே.

எஸ்.ரா. அவர்கள் நல்ல எழுத்தாளர்.

***

ரித்விக் கட்டக் - யமுனா ராஜேந்திரன்






கட்டக்கின் அனைத்து படங்களையும் அவர் வாழ்வையும் முன்வைத்து அக்கால கலை அரசியல் மற்றும் சமூகப் போக்கை நுட்பமாக பதிவு செய்துள்ளார் யமுனா ராஜேந்திரன். கட்டக்கை பற்றி முழு புத்தகம் பதிப்பித்த அருண் மோ' வின் பணி போற்றத்தக்கது. இக்காலத்து அரசியல் சூழலிலும் மானுட விடுதலையை நோக்கிய கட்டக்கின் பார்வை கச்சிதமாகப் பொருந்துவதை விலாவரியாக விவரித்துள்ளார் யமுனா. காலஞ்சென்றாலும் தன் படைப்புகளின் மூலம் நீடித்து நிற்கும் அம்மகத்தான கலைஞனுக்கும் அதை தற்காலத்தில் அறிமுகம் செய்து கொண்டாடும் கலை ஆர்வளர்களுக்கும் நன்றி.

( கவணிக்க : படச்சுருளில் வந்துள்ள இக்கட்டுரை, கடைசி பக்கங்கள் இல்லாததால் முழுமையடையவில்லை.)

Bernaldo Bertolucci

நம்முள் நம் கலையுள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய சில கலை ஆளுமைகள் இருப்பதையே மறந்திறுக்கும் சமயம் ஒருவர் இருந்து இன்று தான் இறந்தார் என அறியும் போது மனம் கனக்கிறது. இனம்புரியா வெறுமை ஆட்கொள்கிறது.

The great artist 'the dreamer' bernaldo bertolucci fell into permanant sleep to dream forever. 

Sunday, 25 November 2018

ஜாரவாஸ் - Gods must be crazy

அந்தமானில் வாழ்ந்து வரும் மொ




த்தம் இருநூரே பேர் கொண்ட ஜாரவாஸ் பழங்குடியினர் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்சிப்பொருள். பேருந்தில் செல்கையில் சன்னல் வழியாக பார்க்கப்படும் வினோதக் காட்சி தான் அவர்கள். இடுப்பில் சிகப்பு நிறத்தில் சிறு ஆடையுடனும் கையில் அம்புடனும் கானகத்தினுள் கருப்பாக நிற்பவரைக் காண காட்டுப்பாதையில் செல்லும் வாகனங்கள் சில நிமிடங்கள் நிற்கும். அப்பொழுது கைகளில் இருக்கும் கோக் டின்களையும் சிப்ஸ் பாக்கெட்டுகளையும் அவர்கள் மேல் வீசி எரிவர் நாகரீக மனிதர்கள்.

Gods must be crazy - Jamie uys -ன் மூன்று பாகங்களான இப்படத்தின் முதற்காட்சியில் ஹெலிகாப்டரில் பறந்து செல்பவர் கோக் குடித்து முடித்து காலி பாட்டிலை வீசி எறிகிறார். ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் அதுவரையில் அவர்களுக்குள் ஒருவித ஒழுங்குடனும் பகிர்தலுடனும் வாழ்ந்து வந்த பழங்குடியினரில் ஒருவர் முன் அது விழ அதை வினொதமாக பார்க்கிறார். அது தங்களுக்கு வானிலிருந்து தெய்வம் அருளிய வரம் என்றென்னி அதை பத்திரப்படுத்துகிறார். அதை ஆச்சர்யத்துடன் அடுத்தவர் பார்க்கிறார். அதன் மேல் ஆவல் கூட ஒவ்வொருவரும் தங்களிடமே அது இருக்க வேண்டுமென ஆவல் கொண்டு ரகசியமாக அதனை தனதாக்கிக் கொள்ள எத்தனிக்க அது வரையில் அவர்களுள் நிலவிவந்த அமைதி அன்பு அரவணைப்பு என அனைத்து நெறிகளும் சீர் குலைந்து பொறாமை அபகரிப்பு என வன்மமாக மாறுகிறது.

அந்தமானின் ஜாரவாஸ் பழங்குடியினரை நாகரீகமாக்கும் பொருட்டு அவர்களுள் ஒருவரை வலையிட்டு தூக்கி வந்து போர்ட் ப்ளையரில் ஒரு மாதம் அடைத்து வைத்து சோரு முதலிய உணவை கொடுக்க மீனையும் வனத்தில் விளையும் காய் கனிகளையும் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தவர் அதை சாப்பிட்டதும் உடலெங்கிலும் கொப்புளங்கள் காய்ச்சல் என உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட செற்வதறியாது மீண்டும் அவரை கானகத்தினுள்ளேயே விட்டு விட்டார்கள் சில ஆயிரம் வருடங்கள் முன்னேறியதாய் நம்பும் அறிஞர்கள்.

தங்களுக்குள் பிரிவினையை உண்டுபண்ணிய ஒழுங்கை சீர் குலைத்த அந்த கோக் பாட்டிலை வானத்தை நோக்கி வீசி எறிகின்றனர் அந்த பழங்குடியினர். அது திரும்ப அவர்களிடமே வந்து விழுகிறது.

***

Monday, 19 November 2018

கஜா புயல்

அது எப்படின்னு தெர்ல. தலைநகரான சென்னைக்கு வந்தா மட்டுந்தான் வாந்தியும் பேதியும் பீதியக் கெளப்புது இந்த மீடியாக்களையும் சமூக ஊடகங்களையும். அதுலயும் மீம்ஸ் போடறத ஒரு தொழிலாவே பாக்கற இந்த தலமுறைய சத்தியமா புரிஞ்சிக்கவே முடியல. கடலூரக் கடந்தா சின்னாபின்னமாகிக் கெடக்குதாம் மக்களோட வாழ்வும் வயலும். நமக்கு சர்கார் போதும்.

சேலம் புத்தகக் காட்சி

பெருங்குறையாகவே இருந்தது இந்த வருடம் தான் தீர்ந்தது. 10 கி.மீ ல் ஏற்காடு மலையடிவாரம் அமையப்பெற்ற மாநகரமான சேலத்தில் இதுநாள்வரை புத்தகக் காட்சி நடந்ததே இல்லை. பேரூராட்சியான ஈரோடு புத்தகத்திற்கு பேர்போனது. சேலத்தில் பழைய பேருந்து நிலையத்தில் பாவமாக இருக்கும் New century ம் பாலமும் மட்டுமே இதுநாள்வரை. போஸ் மைதானத்தில் இத்தனை வருடங்களாக சர்க்கஸ் நடக்கும். மக்கள் குவிவர். பொருட்காட்சி நடக்கும். ஏலம் விடுவர். குவிவர். இப்போது புத்தகக்காட்சியிலும் குவிந்துள்ளனர். சமூகப்போக்கை கூட்டு மனோபாவத்தை மக்கள் செயல்பாட்டை தீர்மானிப்பது எது ?.

வாய்ப்ப அரசு ஏற்படுத்திக் குடுத்தா வாழவா மாட்டேன்றான் மனிதன்.

டமால் டுமீல்

அதே ஊசி பட்டாசு அதே லஷ்மி வெடி சங்கு சக்கரம் மத்தாப்பு எவ்வளவோ குக்கி ஒக்காந்து உத்து உத்து பாத்தாலும் வாசம் மொகுந்தாலும் அந்த உணர்வு மட்டும் வரவே மாட்டுது.

ரெண்டு வாரத்துக்கு முன்னருந்தே பரிதவிப்பு ஆரம்பிச்சிடும். புதுத்துணி எப்ப எடுப்பாங்க. அத எப்ப குடுப்பாறு டைலர் அண்ணா. சண்ட போட்டு பட்டினி கெடந்து பட்டாச வாங்கி பக்கத்துல வச்சிக்கிட்டு படுத்து தூங்கி காலைல எண்ண தேய்ச்சி எப்படா வுடுவாங்கண்ணு தவிச்சி மொத வெடிய துவங்கனா பக்கத்து வீட்டு குமாரு இந்தப்பக்கம் சுதாகரு வீட்டு முன்ன அதிக குப்ப. அவனுங்க உள்ள போற நேரம் பாத்து சட்டுனு ஓடிப்போய் அவங்க வீட்டு முன்ன இருக்கற பட்டாசு காகிதங்கள அள்ளிட்டு வந்து எங்க வீட்டு முன்ன பரப்பி போட்டுட்டு கெத்தா நின்னா வாயில அதிரசத்தோட வந்தவனுங்க வாய் பொலந்தபடி நிப்பானுங்க. ' டேய் போதும் வாடா. எவ்ளோ நேரம் வெடிப்ப " அப்பா குரல் கொடுக்க " முடியாது போ நான் வரமாட்டேன்".அந்தத்துணியையும் பட்டாசையும் வாங்க அவர் பட்ட பாடு தெரியாது. டமால் டுமீல். கூப்பிட்டு பாத்தபின் வீட்டுக்குள் போய் விடுவார் அப்பா.

ச்சே. எவ்ளோ முயற்சி பண்ணாலும் அந்த உணர்வ திரும்ப மீட்டெடுக்கவே முடியல. சில வருஷங்களுக்கு முன்ன வரையில கூட தீபாவளிக்கு மூனு நாலைக்கி முன்னாலயே துப்பாக்கி வாங்கிட்டு மெட்ராஸுலேந்து ஊருக்கு போயி நண்பர்கள் வீட்டு கதவ தட்டிட்டு ஒளிஞ்சிருந்து தெரந்ததும் தாக்க பதறி அடிச்சி வுழுந்தவனுங்க மொறச்சதும் அப்டியே வண்டிய கெளப்புனா ரோட்டெல்லாம் டமால் டுமீல் தான்.

" டாடி.. என்ன பட்டாச சும்மா பாத்துட்டு.. நவுருங்க நான் வெடிக்கணும்". விலகி வழிவிட ஒவ்வொண்றையும் சிலிர்த்தபடி ரசித்து பூரித்து வெடித்துக் கொண்டிருந்தான் தருண்.

நெடுநேரம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்து தாங்கமாட்டாமல் " டேய்.. எவ்ள நேரம் வெடிப்ப. போதும் உள்ள வாடா" என்றேன். " மாட்டேன். நான் வெடிப்பேன்". "என்னமோ பண்ணு" வெடுக்குன எழுந்து வீட்டுக்குள் சென்று விட்டேன்.