இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Monday, 19 November 2018

டமால் டுமீல்

அதே ஊசி பட்டாசு அதே லஷ்மி வெடி சங்கு சக்கரம் மத்தாப்பு எவ்வளவோ குக்கி ஒக்காந்து உத்து உத்து பாத்தாலும் வாசம் மொகுந்தாலும் அந்த உணர்வு மட்டும் வரவே மாட்டுது.

ரெண்டு வாரத்துக்கு முன்னருந்தே பரிதவிப்பு ஆரம்பிச்சிடும். புதுத்துணி எப்ப எடுப்பாங்க. அத எப்ப குடுப்பாறு டைலர் அண்ணா. சண்ட போட்டு பட்டினி கெடந்து பட்டாச வாங்கி பக்கத்துல வச்சிக்கிட்டு படுத்து தூங்கி காலைல எண்ண தேய்ச்சி எப்படா வுடுவாங்கண்ணு தவிச்சி மொத வெடிய துவங்கனா பக்கத்து வீட்டு குமாரு இந்தப்பக்கம் சுதாகரு வீட்டு முன்ன அதிக குப்ப. அவனுங்க உள்ள போற நேரம் பாத்து சட்டுனு ஓடிப்போய் அவங்க வீட்டு முன்ன இருக்கற பட்டாசு காகிதங்கள அள்ளிட்டு வந்து எங்க வீட்டு முன்ன பரப்பி போட்டுட்டு கெத்தா நின்னா வாயில அதிரசத்தோட வந்தவனுங்க வாய் பொலந்தபடி நிப்பானுங்க. ' டேய் போதும் வாடா. எவ்ளோ நேரம் வெடிப்ப " அப்பா குரல் கொடுக்க " முடியாது போ நான் வரமாட்டேன்".அந்தத்துணியையும் பட்டாசையும் வாங்க அவர் பட்ட பாடு தெரியாது. டமால் டுமீல். கூப்பிட்டு பாத்தபின் வீட்டுக்குள் போய் விடுவார் அப்பா.

ச்சே. எவ்ளோ முயற்சி பண்ணாலும் அந்த உணர்வ திரும்ப மீட்டெடுக்கவே முடியல. சில வருஷங்களுக்கு முன்ன வரையில கூட தீபாவளிக்கு மூனு நாலைக்கி முன்னாலயே துப்பாக்கி வாங்கிட்டு மெட்ராஸுலேந்து ஊருக்கு போயி நண்பர்கள் வீட்டு கதவ தட்டிட்டு ஒளிஞ்சிருந்து தெரந்ததும் தாக்க பதறி அடிச்சி வுழுந்தவனுங்க மொறச்சதும் அப்டியே வண்டிய கெளப்புனா ரோட்டெல்லாம் டமால் டுமீல் தான்.

" டாடி.. என்ன பட்டாச சும்மா பாத்துட்டு.. நவுருங்க நான் வெடிக்கணும்". விலகி வழிவிட ஒவ்வொண்றையும் சிலிர்த்தபடி ரசித்து பூரித்து வெடித்துக் கொண்டிருந்தான் தருண்.

நெடுநேரம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்து தாங்கமாட்டாமல் " டேய்.. எவ்ள நேரம் வெடிப்ப. போதும் உள்ள வாடா" என்றேன். " மாட்டேன். நான் வெடிப்பேன்". "என்னமோ பண்ணு" வெடுக்குன எழுந்து வீட்டுக்குள் சென்று விட்டேன்.

No comments:

Post a Comment