இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 25 November 2018

ஜாரவாஸ் - Gods must be crazy

அந்தமானில் வாழ்ந்து வரும் மொ




த்தம் இருநூரே பேர் கொண்ட ஜாரவாஸ் பழங்குடியினர் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்சிப்பொருள். பேருந்தில் செல்கையில் சன்னல் வழியாக பார்க்கப்படும் வினோதக் காட்சி தான் அவர்கள். இடுப்பில் சிகப்பு நிறத்தில் சிறு ஆடையுடனும் கையில் அம்புடனும் கானகத்தினுள் கருப்பாக நிற்பவரைக் காண காட்டுப்பாதையில் செல்லும் வாகனங்கள் சில நிமிடங்கள் நிற்கும். அப்பொழுது கைகளில் இருக்கும் கோக் டின்களையும் சிப்ஸ் பாக்கெட்டுகளையும் அவர்கள் மேல் வீசி எரிவர் நாகரீக மனிதர்கள்.

Gods must be crazy - Jamie uys -ன் மூன்று பாகங்களான இப்படத்தின் முதற்காட்சியில் ஹெலிகாப்டரில் பறந்து செல்பவர் கோக் குடித்து முடித்து காலி பாட்டிலை வீசி எறிகிறார். ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் அதுவரையில் அவர்களுக்குள் ஒருவித ஒழுங்குடனும் பகிர்தலுடனும் வாழ்ந்து வந்த பழங்குடியினரில் ஒருவர் முன் அது விழ அதை வினொதமாக பார்க்கிறார். அது தங்களுக்கு வானிலிருந்து தெய்வம் அருளிய வரம் என்றென்னி அதை பத்திரப்படுத்துகிறார். அதை ஆச்சர்யத்துடன் அடுத்தவர் பார்க்கிறார். அதன் மேல் ஆவல் கூட ஒவ்வொருவரும் தங்களிடமே அது இருக்க வேண்டுமென ஆவல் கொண்டு ரகசியமாக அதனை தனதாக்கிக் கொள்ள எத்தனிக்க அது வரையில் அவர்களுள் நிலவிவந்த அமைதி அன்பு அரவணைப்பு என அனைத்து நெறிகளும் சீர் குலைந்து பொறாமை அபகரிப்பு என வன்மமாக மாறுகிறது.

அந்தமானின் ஜாரவாஸ் பழங்குடியினரை நாகரீகமாக்கும் பொருட்டு அவர்களுள் ஒருவரை வலையிட்டு தூக்கி வந்து போர்ட் ப்ளையரில் ஒரு மாதம் அடைத்து வைத்து சோரு முதலிய உணவை கொடுக்க மீனையும் வனத்தில் விளையும் காய் கனிகளையும் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தவர் அதை சாப்பிட்டதும் உடலெங்கிலும் கொப்புளங்கள் காய்ச்சல் என உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட செற்வதறியாது மீண்டும் அவரை கானகத்தினுள்ளேயே விட்டு விட்டார்கள் சில ஆயிரம் வருடங்கள் முன்னேறியதாய் நம்பும் அறிஞர்கள்.

தங்களுக்குள் பிரிவினையை உண்டுபண்ணிய ஒழுங்கை சீர் குலைத்த அந்த கோக் பாட்டிலை வானத்தை நோக்கி வீசி எறிகின்றனர் அந்த பழங்குடியினர். அது திரும்ப அவர்களிடமே வந்து விழுகிறது.

***

Monday, 19 November 2018

கஜா புயல்

அது எப்படின்னு தெர்ல. தலைநகரான சென்னைக்கு வந்தா மட்டுந்தான் வாந்தியும் பேதியும் பீதியக் கெளப்புது இந்த மீடியாக்களையும் சமூக ஊடகங்களையும். அதுலயும் மீம்ஸ் போடறத ஒரு தொழிலாவே பாக்கற இந்த தலமுறைய சத்தியமா புரிஞ்சிக்கவே முடியல. கடலூரக் கடந்தா சின்னாபின்னமாகிக் கெடக்குதாம் மக்களோட வாழ்வும் வயலும். நமக்கு சர்கார் போதும்.

சேலம் புத்தகக் காட்சி

பெருங்குறையாகவே இருந்தது இந்த வருடம் தான் தீர்ந்தது. 10 கி.மீ ல் ஏற்காடு மலையடிவாரம் அமையப்பெற்ற மாநகரமான சேலத்தில் இதுநாள்வரை புத்தகக் காட்சி நடந்ததே இல்லை. பேரூராட்சியான ஈரோடு புத்தகத்திற்கு பேர்போனது. சேலத்தில் பழைய பேருந்து நிலையத்தில் பாவமாக இருக்கும் New century ம் பாலமும் மட்டுமே இதுநாள்வரை. போஸ் மைதானத்தில் இத்தனை வருடங்களாக சர்க்கஸ் நடக்கும். மக்கள் குவிவர். பொருட்காட்சி நடக்கும். ஏலம் விடுவர். குவிவர். இப்போது புத்தகக்காட்சியிலும் குவிந்துள்ளனர். சமூகப்போக்கை கூட்டு மனோபாவத்தை மக்கள் செயல்பாட்டை தீர்மானிப்பது எது ?.

வாய்ப்ப அரசு ஏற்படுத்திக் குடுத்தா வாழவா மாட்டேன்றான் மனிதன்.

டமால் டுமீல்

அதே ஊசி பட்டாசு அதே லஷ்மி வெடி சங்கு சக்கரம் மத்தாப்பு எவ்வளவோ குக்கி ஒக்காந்து உத்து உத்து பாத்தாலும் வாசம் மொகுந்தாலும் அந்த உணர்வு மட்டும் வரவே மாட்டுது.

ரெண்டு வாரத்துக்கு முன்னருந்தே பரிதவிப்பு ஆரம்பிச்சிடும். புதுத்துணி எப்ப எடுப்பாங்க. அத எப்ப குடுப்பாறு டைலர் அண்ணா. சண்ட போட்டு பட்டினி கெடந்து பட்டாச வாங்கி பக்கத்துல வச்சிக்கிட்டு படுத்து தூங்கி காலைல எண்ண தேய்ச்சி எப்படா வுடுவாங்கண்ணு தவிச்சி மொத வெடிய துவங்கனா பக்கத்து வீட்டு குமாரு இந்தப்பக்கம் சுதாகரு வீட்டு முன்ன அதிக குப்ப. அவனுங்க உள்ள போற நேரம் பாத்து சட்டுனு ஓடிப்போய் அவங்க வீட்டு முன்ன இருக்கற பட்டாசு காகிதங்கள அள்ளிட்டு வந்து எங்க வீட்டு முன்ன பரப்பி போட்டுட்டு கெத்தா நின்னா வாயில அதிரசத்தோட வந்தவனுங்க வாய் பொலந்தபடி நிப்பானுங்க. ' டேய் போதும் வாடா. எவ்ளோ நேரம் வெடிப்ப " அப்பா குரல் கொடுக்க " முடியாது போ நான் வரமாட்டேன்".அந்தத்துணியையும் பட்டாசையும் வாங்க அவர் பட்ட பாடு தெரியாது. டமால் டுமீல். கூப்பிட்டு பாத்தபின் வீட்டுக்குள் போய் விடுவார் அப்பா.

ச்சே. எவ்ளோ முயற்சி பண்ணாலும் அந்த உணர்வ திரும்ப மீட்டெடுக்கவே முடியல. சில வருஷங்களுக்கு முன்ன வரையில கூட தீபாவளிக்கு மூனு நாலைக்கி முன்னாலயே துப்பாக்கி வாங்கிட்டு மெட்ராஸுலேந்து ஊருக்கு போயி நண்பர்கள் வீட்டு கதவ தட்டிட்டு ஒளிஞ்சிருந்து தெரந்ததும் தாக்க பதறி அடிச்சி வுழுந்தவனுங்க மொறச்சதும் அப்டியே வண்டிய கெளப்புனா ரோட்டெல்லாம் டமால் டுமீல் தான்.

" டாடி.. என்ன பட்டாச சும்மா பாத்துட்டு.. நவுருங்க நான் வெடிக்கணும்". விலகி வழிவிட ஒவ்வொண்றையும் சிலிர்த்தபடி ரசித்து பூரித்து வெடித்துக் கொண்டிருந்தான் தருண்.

நெடுநேரம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்து தாங்கமாட்டாமல் " டேய்.. எவ்ள நேரம் வெடிப்ப. போதும் உள்ள வாடா" என்றேன். " மாட்டேன். நான் வெடிப்பேன்". "என்னமோ பண்ணு" வெடுக்குன எழுந்து வீட்டுக்குள் சென்று விட்டேன்.