இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Monday, 30 April 2018

கிழக்கும் மேற்கும் - ஜெயபாலன்

பேட்டைக்காரனாக எங்களுடன் ஆடுகளத்தில் சேட்டை செய்த ஈழத்துக் கவிஞர் வெகுநாட்களுக்குப் பிறகு முகநூல் வழி அழைத்தார். 'Break Down' பார்க்க கூத்துப்பட்டறைக்கு அழைத்திருந்தேன். குறுகியகால ஏற்பாடாதலால் வரமுடியவில்லை. நோர்வே'யில் வசிப்பவர் அடுத்த ஒரு வருடம் சென்னையில் தான் இருக்கப் போவதாகவும் என்னுடைய முதல் படத்தில் தான் அவசியம் நடிக்க வேண்டுமெனவும் விருப்பம் தெரிவித்தார். மதிய உணவுக்கு அழைத்திருந்தார். சந்திக்க சென்றபோது பக்கத்துல ATM போயிட்டு வந்திடலாமென Yamaha FZ16 ல் தடுமாறி ஏறினார். " பெட்ட பிள்ளைகள் பின்னால இடிக்கணுங்கறதுக்காகவே இந்த மாதிரி பைக் வச்சிருக்கீங்களா" என்றார். "நம்ம Culture அ இந்த மாதிரி Byke Company காரனெல்லாம் தான் தீர்மானிக்கரான் சார்." எப்படி சொல்லறீகள்.." "இதுல Single side ஒக்கார முடியாது. Double side தான். அப்ப பொடவ கட்ட முடியாது. சுடிதாரோ ஜீன்ஸோ தான் அணிந்தாகணும். So.." Accelerator முறுக்கியதும் குழுங்கியவர் " இப்போ நான் ஒங்களை கட்டிக் கொள்ள வேணுமோ.." பதறியவன்
"ஐயோ சார் ஒங்க தொப்ப already அதத்தான் பண்ணிட்டிருக்கு. " காதல் கதை எழுத வேணுமன்னா ஒரு மாத காலம் ஒங்களோட பைக்ல சுத்துனா எழுதிடலாமென்னு நெனைக்கறன்."

Shorts T.shirt சகிதம் மேற்கத்திய அடையாளங்களுள் கச்சிதமாக பொறுந்துபவர். ஆடுகளத்தில் பேட்டைக்காரன் பட்டாபட்டி டிராயர் போடச்சொன்னால் அதை மறுத்து Jocky shorts போட்டு வேட்டி கட்டியே நடித்தார். நல்லவேலையாக யாரும் அதை பொருட்படுத்தவில்லை. உணவுக்கு Bread Ketch up என்று மதுரையில் வேட்டி கட்டிய வெள்ளக்காரனாகத்தான் உலவினார்.

த்ரிஷாவை வைத்து எடுத்த காட்சியில் தனுஷ் வருவதற்குள் Close up எடுக்க என்னை நடிக்கச் சொன்னார் வெற்றி சார். த்ரிஷா அதிகாலை பால் பாக்கெட் எடுக்க வரும் போது மறைந்திருந்து அவர் கையை பற்ற வேண்டும். அடுத்தடுத்த Take போகும்போது எனக்கென்னவோ கிளுகிளுப்பாகவும் தான் இருந்தது. ஆனால் நண்பர்கள் சூழ நின்ற ஜெயபாலன் காதில் தான் சிக்கு புக்கு ரயிலே.. புகை. Take Ok ஆனதும் தனுஷை வைத்து Master Shot எடுக்க வேல்ராஜ் சார் தயாராக நண்பர்கள் என்னை மெல்ல அழைத்து அடி பின்னி விட்டார்கள். மூக்கு புடைக்க அவர்களை விலக்கி பெரிய மனுஷனாக என்னை பார்த்தார் பேட்டைக்காரன். பிறகு மெல்ல என் வலது கரத்தை பற்றி "இந்த கையால தானே த்ரிஷாவ பிடிச்சீங்கள்" என வருடினார். நண்பர்கள் வெடித்து சிரிக்க.. Cut.

சமீபத்தில் முகநூலில் நான் எழுதிய ஆசான் பாலுமகேந்திராவுடனான அனுபவத் தொடரை முன்வைத்து பேசிக்கொண்டிருந்தோம்.
'பாலுவை அவர் அவராக வாழ யாருமே அனுமதிக்கக்கவில்லை' என ஆதங்கப்பட்டார். பாலு சாரும் ஜெயபாலனும் ஒரே மனோபாவம் கொண்டவர்கள். பரவளாக ஈழத்து ஆண்களின் மனங்களை புரிந்து கொள்வது சற்றே சிரமம் வாய்ந்ததே. பொது விழுமியங்களைக் கொண்டு அவர்களை அறிய முற்படும் தமிழ்நாட்டு மனம் ஓரிடத்தில் முட்டி தினரும் என்பது என் அனுபவ அறிவு.

Break Down ஐ பார்த்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். பயிற்சிக்காக வயதான கதாபாத்திரம் கொண்ட படங்களை பரிந்துறைக்கக் கேட்டார். Faun's very late afternoon, Ikiru, Wild strawberries..குறிப்பெடுத்துக் கொண்டார். வீட்டில் பணிப்பெண் மீன் சமைத்துக் கொண்டிந்தார். தற்போது எடுக்கவிருக்கும் படக்கதையை சொன்னேன். சொல்லும் போதே உள்ளுக்குள் ஒரு தயக்கம். இது கிராமியம் சார்ந்த கதை. ஒரு விவசாயி கதாபாத்திரம். Western mode -லேயே இருக்கும் இவருக்கு பொருந்துமா என்று.

என் காதல் பற்றி பேசுகையில் ஐஞ்சு வருஷம் ஒன்னா படிச்சோம் ஆனா அவ பேர் எனக்கு தெரியாது என்றேன். சட்டென இதுக்கு தேவாரத்தில ஒரு பாட்டிருக்கு என பாடியபடி Google ல் மேய ஆரம்பித்து விட்டார். அந்நேரம் எனக்கு வீட்டிலிருந்து அழைப்பு. வீட்டை உடைத்து திருட்டாம். ஆர்வமாக பூத்த முகத்துடன் பாடலை தேடிக் கொண்டிருந்தவரிடம் தயங்கியபடியே சொல்ல.. சட்டென இறுகி " ஐயோ.. சாப்பிட்டுட்டு கெளம்புங்கள் " என வேகமாக எழுந்தார். "இல்ல சார் பரவால்ல.. நான்.."
"இல்ல please. மறுக்காதீங்கள். இப்ப இல்லையென்னா நீங்கள் ஊர் போகும் வரை பட்டினியாத்தான் போவீங்கள்" என அப்பெண்ணிடம் சாப்பாட்டை பரிமாறச் சொன்னார்.

சாப்பிடுகையில் " ஒங்களுக்காக மீன் சமைக்கத் சொன்னன். சாப்பிடுங்கள்.." நான் புன்னகைத்தவாறு சாப்பிட, "இது சொதி. ஈழத்து.." "ஆ.. பாலு சார் தெனமும் கருவாட்டு சொதி சமைச்சு தருவார்." "நல்லா சமைப்பாரா.." " அற்புதமா.. சமைக்கத் தெரியாதவன் கலைஞனே இல்லைன்னுவார்" "நீங்கள் நல்லா சமைப்பீங்களா.."
"நான் நல்லா சாப்பிடுவேன்." . அவர் முகத்தில் சிரிப்பில்லை.

"இப்போ ஒங்களிடம் மெதுவா சாப்பிடச் சொல்றது சரியாகாது. அப்படிச் சொன்னாலும் ஒங்களால் மெதுவாக சாப்பிட முடியாது. ஆனாலும் மெதுவாச் சாப்பிடுங்கள்.."

நான் அவ்வாறே பாவிக்க வெள்ளந்தியாய் பார்த்தவர்
"ச்சே..என்னை சந்திக்க வந்த நேரம் இப்படி ஆயிட்டதே. மனசு கஷ்டமாயிருக்கு.." என்றார்.

Shorts க்குள் ஒழிந்திருந்த பட்டாபட்டி வெளிப்பட்ட அத்தருணம் உணர்த்தியது அ.முத்துலிங்கம் எஸ்.பொ போல் எத்தனை நாடுகளில் சுற்றித்திறிந்தாலும் பிறந்த மண்ணின் வாசம் ஒருவனை விட்டு அகலாதென்று.

"சார்.. திருடு போனது நேத்திரவு. நான் ஒங்கள பாக்க வந்தது இன்னைக்கி காலைல. சும்மாருங்க சார்.. "

சமாதானப்படுத்தி விட்டதாக எண்ணிக் கொண்டு விடைபெறுகையில்
"பத்திரமாப் போயிட்டு வாங்கள். வந்ததும் சந்திப்போம்.."

சிரிப்பதாய் எண்ணிகொண்டு வெளிறிய முகத்துடன் மேற்கத்திய உடையில் கையசைத்தது ஒரு கிழக்கத்திய மனம்.

***




Tuesday, 10 April 2018

தீனி ( Breakdown Stories - 2 )


இரண்டாம் நாள் படப்பிடிப்பு. பெரியவரை காரில் அழைத்துச் செல்லும் பொழுது புலம்பியபடியே வந்தார். "ஐயா 12 மணிக்கு கூட்டினு வந்துடுவீங்கல்ல.." உடல் நிலை சரியில்லை அவருக்கு. முதல் நாளே காய்ச்சல் மலைப்பாதை வளைவுகளில் தலைசுற்றல் வாந்தி. பயத்துடனேயே அழைத்துச் சென்றோம். பயம் எமக்கு இருவகையில். ஒன்று, 95 வயது கிழவர் நம் பொறுப்பில் வருகிறார். ஏதாவது ஆனால் என்னாவது. மற்றொன்று, படப்பிடிப்பு பாதியில் நின்று போனால் என்ன செய்வது. அதுவரை அவரை பத்திரமாக பார்த்துக் கொள்வது நமது தலையாய கடமை. குழுவினர் காரில் வர மழையில் நனைந்தபடி பைக்கில் முன் சென்றேன். சற்றே சென்றதும் ஏதோ மனதுள் பிசைந்தது.

Achieving an appropriate balance between creating an authentic, compelling film and protecting actors rights is essential.

"ஐயா, வூட்டுக்கு போணும். கூட்டினு போறீங்களா.."
"ஆத்தா வையும். வூட்டுக்கு போகனும் வழி வுடு "
சப்பானியாக நச்சரித்தபடியே இருந்தார் தாத்தா.

இயக்குனர் தீவிரமாக கலைப்பணியில் மூழ்கி இருந்தபடியால் குழுவிள்ள அனைவரிடமும் புலம்பிய படியே இருந்திருக்கிறார். இயக்குனரின் பார்வைக்கு வர, " என்னங்க வேணும் ஒங்களுக்கு.. அதான் போயிடலாம்னு சொல்றோமில்ல. எதாவது சாப்பிடறீங்களா. கலை இவருக்கு.."
"ஐயா..எனக்கு எதும் வேணாங்கய்யா. ஆட்டுக்கு தான்.. "
"ஆட்டுக்கு என்ன ?"
"நேத்தே ஆடு மேய போவல. இன்னைக்கும் போவாட்டி பாவங்கய்யா பசி தாங்காதுங்க.."

அன்று அவர் வீடு செல்ல இரவு ஏழு மணியானது. அவர் நடிக்கும் கதாபாத்திரம் ஆடுகளுடன் கூடி வாழ்ந்து அதில் நிறையை உணரும் தன்மையைக் கொண்டது. சாலையில் எதேச்சையாக தென்பட்ட அப்பெரியவரின் நிஜ வாழ்க்கை இப்புனைவில் உள்ளவரை ஒத்திருந்தது கொடுப்பனை. ஆனால் அப்பெரியவர் இப்புனைவுப் பாத்திரத்தில் ஆடுகளுடன் நெறுங்கி பழகுவது போல் நடிக்க நிஜ வாழ்க்கையில் தன் ஆடுகளை பட்டினி போட வேண்டிவந்ததை நகைமுரணென்று நகைத்துக் கொள்ள முடியவில்லை.

அடுத்த நாள் கராராகவே இருந்தார். அன்று ஒரு ஆட்டுக்குட்டி தேவைப்பட்டது எங்களுக்கு. அவர் மகனின் கெடுபிடியைத் தாண்டி பணம் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றோம். அன்று ஏற்காட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு நீரோடையில் இறுதிக்காட்சி எடுக்கச் சென்றோம். போகும் வழியெல்லாம் பெரியவரின் நச்சரிப்பு. "ஆட்டுக்கு தீனி.."

"ஹலோ.. ஆங்..எல பறிச்சி வச்சிருக்கீங்கல்ல..வந்ததும் குடுக்கணும்.." நாங்கள் ஒத்திகை பார்க்காமலேயே ஒரு நாடகம் நடத்தினோம். வழியில் பிஸ்கட் போண்டா பிரியாணி என்று எதை கொடுத்தாலும் சிடுசிடுத்தபடியே இருந்தார்.
"ஆட்டுக்கு எல.."

"ஹலோ..எல ரெடி தானே..இந்த டீயாவது.. சரி வேணாம்னா வுடுங்க "

"ஐயா..டீ மட்டும் குடுங்க " வழிந்தார்.
குடித்து முடித்தபின் திரும்பவும் முகம் இறுக " ஆட்டுக்கு எல.." என்றார்.

உதவியாளன் கலை கடுப்பாகி
"ஹலோ..எல ரெடியா இல்லயா..வந்தனா வவுந்துபுடுவேன் பாத்துக்க.. ஆடு பசியா கெடக்குதுன்றேன். என்னா வெளயாடறியா நீ " கார் ஓட்டியபடியே கைபேசியில் கதைத்தார்.

"என்னா சொல்றான் அந்தாளு. எல ரெடியா இல்லயா கலை. " இல்லாத ஆளைப்பற்றி கேட்டார் இயக்குனர்.
"ரெடியா இருக்குதுங் சார். அருவிகிட்ட போனதும் நிப்பாங்க. மாப்ள.. இன்னும் பத்து நிமஷத்துல போயிடலாம் கவல படாத.." கலை பெரியவரை அப்படியே அழைப்பார்.

"நீ இப்டி தாண்டி மாப்ள சொல்லினு கெடக்கற ஒரு மணி நேரமா.."

"என்னா மாப்ள நீயி. ஒனக்காக வளச்சி வளச்சி எவ்ளோ வேகமா ஓட்டறேன். "

"நீ எனக்காக ஒன்னும் புளுத்த வேணாம் மாப்ள. ஆட்டுக்கு தீனி குடுத்தா போதும் "

ஒளிஓவியர் நடிகர் திலகம் இயக்குனர் இமயம் அனைவரும் காருக்குள் சுருங்கி அடங்கிப் போனார்கள்.

மலைப்பாதையில் ஓர் வளைவில் ஒரு மாடு மகிழுந்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. ஆட்கள் கூட்டமாக பஞ்சாயத்தில் ஈடுபட அவ்விடத்தை கடக்கையில் கிழவர் அவர் மடியிலிருந்த ஆட்டை இறுக அணைத்துக் கொண்டார்.

அதற்குப் பின் மௌனம் நிலவ அருவி வந்ததும் கலை காரை நிறுத்தியதும் இலை தழைகளை பறித்தபடி " மாப்ள ஆட்ட கொண்டா.." என்றதும் தாவிக்குதித்து ஆட்டை அவ்விடம் கூட்டிச்சென்றார் பெரியவர். ஆடு ஆனந்தமாய் மேய சால்வையை சுழற்றி தோள் மேல் போட்டபடி
"மாப்ள நான் ரெடி.."
பெரம்பாறை மேல் ஏறி நடிக்கத் தயாரானார் எங்கள் கதாநாயகன்.

***