இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Tuesday, 11 March 2014

My You tube Channel

All my Visuals (films, documentary, travelogue, short films) are uploaded in this   you tube channel
Click here :  https://youtu.be/Y4SZo3w-I8Y
                                               

Wednesday, 5 March 2014

கூற்றம் வருங்கால்..

               " பிறர்வாடப்  பலச்  செயல்கள்  செய்து
                 நரைகூடிக்  கிளப்  பருவ மெய்தி
                 கொடுங்  கூற்றுக்  கிரையென " -  வாழும்,

 ..மனிதர்பால் சூழும் அச்சம், மரண பயம். வயோகத்தில்  சாக்காடு  தன் கூப்பாடு  கேட்டு  அஞ்சுவர் அவர். அவ்விடத்தும் தானறியார் தன்னிலைக்குத்  தானே  காரணமென்று. வாழுங்கால் சகமனிதனை நேசித்து  அனுசரித்து  அரவணைத்து போக  இவர்களால்  முடிவதேயில்லை.

எவ்வுயிரும்  தம்முயிராய் தாம்நாட வயோதிகமும் வரம் தானே ?

நண்பரிடம், எங்கள் இருவருடைய  பள்ளி தமிழ் ஆசிரியர் ஒருவரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.

       "அவர்  முன்னப்போல இல்லடா.. ரொம்பவே  மாறிட்டாரு. பாவம், எப்படியோ  என்  நம்பர தேடிப்புடிச்சி  நேத்து  என்ன கூப்பிட்டாரு, போயிருந்தேன். அவரப்  பாக்கவே  ரொம்ப அதிர்ச்சியா  இருந்ததுடா  "   என்றேன்.

முதியவர்களிடம் முதிர்ச்சி கைகூடுமல்லவா ?

       "போடா  மசுரு. அந்தாளப் பத்தி எங்கிட்டப்  பேசாதடா .. அவனாவது மாற்றதாவது..சாகும் போதும்  யார் குடியையாவது  கெடுத்துட்டுத்தாண்டா  சாவான் அந்தாளு. இப்ப நெனைச்சாக்கூட  பத்திகிட்டு வருது. அவன் செத்தாக்கூட ஆறாதுடா  என் வலி"

என்று வன்மையாக  தூற்றிக்கொண்டிருந்தார், நண்பர்.

( ஆசிரியரின்  கடுமையான நடவடிக்கையால் பாதிக்கப் பட்டவர்களில் நண்பரும் ஒருவர்.)

நான் எவ்வளவு  எடுத்துச் சொல்லியும் அவர் கோவம் அடங்கவேயில்லை.
ஏனோ, முதியவரை அவர் அப்படி தூற்றியதை  என்னால் தாங்க முடியவில்லை.

தமிழையாவை சந்திக்க நேற்று அவர் இல்லத்திற்குச்  சென்றிருந்தேன்.

எந்நேரமும்  மிடுக்காக திறிந்த மனிதர்  ஆடி அடங்கி அமர்ந்திருந்தார்.  அவரைப்  பார்த்ததும்  பகீரென்று ஆனது. உடல் தளர்ந்து,தோல் சுருங்கி  நரைகூடி   கிழப்பருவமெய்தி துவண்டு போய் அமர்ந்திருந்தார்.

நான் ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து பயந்து நடுங்கிய மனிதரா இவர். வாசலிலே உறைந்து நின்றேன்.

        " டேய் ! வா ..வா .. வா.. உள்ளவா. எத்தன வருசமாச்சி  பாத்து..உள்ள வாடா.."

 பரவசத்தோடு வரவேற்றபடி எழ முற்பட்டார்.உறைந்திருந்த என்னை எதார்த்தம்  அழைக்க  திடுக்கிடவனாக ஓடிச்சென்று  எழ முற்பட்டவரின்  தோள்தொட்டு  அமரச்செய்தேன். துவண்டுபோன அவர் தோள் தொடுகையில் ஏற்பட்ட உணர்ச்சி என்னை ஏதோ செய்தது.

தன் திறனால் அனைவரையும் சுண்டி இழுத்தவர். அபரிமிதமான ஆற்றல் வாய்ந்த கவிஞன். தான் கற்ற தமிழின்  நுட்பங்களை கற்றுத்தருவதில் வல்லவர்.

          " ன்னா    ஆ வன்னான்னு  உன் கையப்  புடிச்சி   கத்துத்தரமுடியுன்டா.. அவ்வளத்தான். மத்தபடி அதவச்சி , 
"  நிற்பதுவே ..நடப்பதுவே ..பறப்பதுவே ..நீங்களெலாம் சொற்பணந்தான் .."  ன்னு  
கவிதைய  நீ  தான் எழுதணும் "

என்று,  அவர் கற்றுத்தந்த கலை நுட்பங்கள் ஒவ்வொன்றும்  என் மனதில் இன்றும் பசுமரத்தாணியாக பதிந்திருக்கிறது.

கலையின் நுட்பம் கற்றுத்தேர்ந்த அவர் கலையின் ஆதார சுருதியான அன்பை கற்கவில்லை.
கற்றுத்தர  வருவதள்ளவே  அன்பு.
எந்நேரமும் தன்னலம் பற்றியே வாழ்ந்தவர் எங்கள் ஆசான். இயற்கையை நேசிப்பவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் இயல்பாக யாருடனும் இசைய மாட்டார். சந்தேகம்..அனைவரின் மீதும்
சந்தேகம்..கர்வம்..குரூரம்..உதாசீனம் என தன் வாழ்க்கையை மிகவும் சிக்கலாகிக் கொண்டவர்.

" என்னிட்டருந்து கவிதயை  வெலக்கி வெச்சிப் பாத்தா நான் ஒண்ணுமே இல்லடா.."

என்று அகம் உணர்ந்தவராக அவரே பல முறை கூறி இருக்கிறார் .தன்னிலை அறிந்திருந்தும் தன் நடத்தையில் எவ்வித மாற்றத்தையும் காட்டாத அவருடைய வாழ்க்கை இன்றும் எனக்கொரு புதிராகவே உள்ளது.

இருவரும்  பேசிக்கொண்டிருக்கையில்  அவருடைய மனைவி கையில் ஏதோ ஈரத்துணிகளை எடுத்தவாறு காயப்போட நடந்து வந்தார். அவரை கண்டு நான்  எழ  முயற்சிக்க  என்னை கடந்து சென்றுவிட்டார் .

       " அவளுக்கு உன்ன அடையாளம் தெரியாதுடா. அவளுக்கு அவ  உண்டு ,அவ  ராஜா  உண்டு." 

  ( ராஜா. அவர் மனைவி  செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டி.  ஆசானின் மனைவி ஒரு இயற்கை பிரியை . பெரும்பாலும் அணில்கள், பூனைக்குட்டி, தன் வீட்டில் தான் ஆசையாய் வளர்க்கும் பூச்செடிகள் என அவர் உலகமே அவைகள்தாம்.)

       "என்ன சொல்லி என்ன செய்ய ? காலம் போன பிறகு கவல பட்டு என்ன  பண்ண முடியும். விதிடா .. யேன்  விதி ..

        வாழ்ற காலத்துல அவல வெச்சி ஒழுங்கா வாழாம உப்ப அதப்பத்தி பேச எனக்கு என்ன அருகத இருக்குது ? ..

       போச்சிடா எல்லாம் போச்சி .ஒரே வீட்லத்தான் இருக்கறோம் . ஆனா நிம்மதி ? "

 அவரே போட்ட காப்பியை ஆவிபறக்க இருவரும் பருகியவாறு அமைதியாக அமர்ந்திருந்தோம். ராஜா என் காலை தன் நாக்கால் வருட எங்கள்  மௌனம் கலைந்தது.

        "டேய்..! ராஜா..."    

 என தமிழய்யா அவனை தொட முற்பட,

அவர் மனைவி,

       " ராஜா  இது என்னடா  இது.., வாசல்ல  கோலத்துமேலயே  இப்படி பண்ணி வச்சி இருக்கற ..? "

  என்றவாறு, அவனருகில் வர.. ஆசான் ராஜா மீதிருந்த தன் கையை  விலக்கிக்கொண்டார்.

      " இது யார்  தெரியுதா ? " 

என அவரிடம் கேட்க.. என்னை உற்றுப் பார்த்தவர்..
தெரியவில்லை என்பது போல் தலையசைத்தார்.

     " இவந்தான்  நம்ம.." 

என்று ஆசான் வாயெடுக்க.. சமயலறைக்கு சென்று விட்டார் அவர். ராஜாவும்  அவர் பின்னாலேயே  சென்று விட்டான்.

       " இப்படித்தான்.. எதையும் கண்டுக்கறதில்ல..எதுவும் தெரியாது  அவளுக்கு.. ப்ச் ..கல்யாணமான  புதுசுல மொத மொத  கடலப் பாத்து  இதுதான் கடலா ..?

..ப்பா ..எவ்வளோ  பெருசா  இருக்குது . உலகத்தோட பெருசா இருக்குமோ - ன்னு  ஆச்சர்யப்பட்டவ , 

...இன்னமும் அப்படியே  இருக்கறா ..ப்ச்.. எல்லாம் போச்சி ..! "

பெருமூச்சுடன் கன்னத்தில் கை ஊன்றியவாறு  ஒருமித்து ஆழ்ந்த மௌனத்தில் ஆள்கிறார.

நான் அறையைச் சுற்றிலும் பார்க்கிறேன். அவரும் மனைவியும் உள்ள இளவயது புகைப்படம் , தமிழய்யா  தன் பேரனுடன் ஆசையாக விளையாடிடும்  புகைப்படம் சுவற்றில் ஆணி அடித்து மாட்டப்பட்டிருந்தது. அவர் வாங்கிக் குவித்த விருதுகள் அழுக்கேறி மாடத்தில் கேட்பாரற்று  கிடந்தது .

மௌனம்  களைந்தவர் ,  

    "  தெனம்  காலைல  எழுந்து  வாக்கிங்  போறேன் . 

நானே டீ போட்டுக்கறேன். அப்பறம் அப்படியே  ஏதாவது படிச்சிகிட்டு பொழுத  போக்கறது....ரொம்ப சிரமமா இருக்குடா..

 எப்பவும் பசங்கலோடவும்  கூட்டத்தோடவுமே இருந்து பழகிட்டதால 
இப்போ  தனியா இருக்கவே  முடியல.. 

 ஒவ்வொரு நொடியக்  கழிக்கறதும்  ரணமா  இருக்குது. யாராவது என்னத் தேடி வரமாட்டாங்களான்னு  ஏக்கமா இருக்கும்.

 சமயத்துல ரோட்ல போகும்போது  யாராவது என்னப் பாத்து  சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டா  போதும்..அவ்வளோத்தான் மனசு அப்படியே  பூத்துக்கும். அன்னைக்கு முழுக்க அத நெனச்சிகிட்டே  ஓட்டிடுவேன் . " 

நாற்காலியின்  கைப்பிடியை தடவியவாறு  நீண்ட பெருமூச்செறிகிறார் .
.
      " எத்தன நாளைக்கு ? இந்த பாழாப்போன  பக்கவாதம்  வந்ததுல இருந்து ...பயமா இருக்குடா ! எப்ப  சாவனோன்னு  திக்கு திக்குங்குது.. 

அட அப்படித்தான் போனாலும்  தூக்கவாவது  நாலு  பேரு  வேணுமல்ல  ? எங்க  ரோட்லயெது  போகும்போது  பொட்டுனு  போய்டுவனோன்னு  பயமா  இருக்குது ."

உதடு துடிக்க.. நாத்தழு தழுக்க.. கண்கள் கசிய..உடைந்து போனார். அவர் முகம் நோக்க இயலாதவனாக தலை தாழ்த்திக்  கொண்டேன்.

அரை முழுவதும் எதிர்கொள்ளவியலா  மயான அமைதி சூழ்ந்திருந்தது.

அறைக்குள்  உறைந்திருந்த  மௌனம் கலைத்தது  சன்னல்  வழி தாவி குதித்த  அணில்.

வழிந்தோடிய கன்னம் துடைத்தவர்..

" இப்படி தாண்டா.. அடிக்கடி ஒடைஞ்சி போய்டுவேன்.   
எதுக்கெடுத்தாலும் ச்சும்மா  ச்சும்மா  அழுதடறேன்  பொம்பள மாதிரி..
சரி விடு கழுத .. ,என்ன உட்டா நாள்  பூரா இப்படியே  பெனாத்திட்டு இருப்பேன் ..
ஆமா நீ என்ன பண்ற ? ஏதோ ... "

என்று, தன் சுயம் மீட்டு மீண்டும் மிடுக்காக நாற்காலியில்  நிமிர்ந்தமர்ந்தார்.
அதற்குப் பிறகு பழைய கதைகள்..நண்பர்கள்.. அவர் சந்தித்த பெண்கள்.. என அரட்டை நீடித்தது. அவரையும் மறந்து வாய்விட்டு சிரித்தவர் அவர் மனைவி ஒரு பாத்திரத்துடன் எங்களை கடந்து செல்ல தலை திருப்பியவாறு,

   " ரொம்ப  நாளாச்சிடா.."  என்று மௌனமானார்.

சிறிது நேரங்கழித்து இருவரும் மொட்டை மாடி சென்று சற்றே இளைப்பாறினோம்.   சாயுங்கால சூரியன் இளஞ்சிவப்பில் ஒளிர தென்றலின் மெல்லிய வருடலில் நனைந்து கொண்டு நின்றோம். சுற்றிலும் மெளனமாக பார்த்தபடி நின்டிருந்தார் எங்கள் தமிழய்யா.

தளர்ந்த மனிதரைக் காண இயலாதவனாக ஆசான் பெருமைகளை பறைசாற்றி அவரைத் தேற்றிக் கொண்டிருந்தேன். (சற்று மிகையாகவே.)

என்ன செய்ய? அற்ப்பனானாலும் அவனும் அடிப்படையில் மனிதன் தானே ?
மனிதர் நோக மனிதர் பார்த்துக் கொண்டிருத்தல் மனிதம் அல்லவே ..!

      " நேரங் கெடைக்கும் போது  அப்படி வந்து போப்பா..ஆதரவா இருக்கும்  "

என்றவரின் கண்களில் ஏக்கமும் பறிதவிப்பும் சூழ,

      "  கண்டிப்பா  வறேன்  சார்..." 

 என்றபடி விடைபெற்றேன்.

    "  முதும ஒரு முதிர்ச்சிய  கொடுக்கத்தான் செய்யுதில்ல.. ? "

 என்றேன்   நண்பனிடம்.

   "  போடா மசுரு. வயசானவனெல்லாம்  திருந்திட்டான்னா  நாட்ல  பாதி பிரச்சனைங்க  தீந்து போகும்டா..   
அந்தாளுக்கு நேத்து நீ சிக்குன.  நொங்க சீவுற  மாதிரி சீவிப்புட்டான்  உன் மனச.. அவ்வளோத்தான் . 
அந்தாளாவது  திருந்தரதாவது..! "படுவான்டா.. உன்னம் நல்லா படுவான் ..! 

நாலடியாரின்  பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது .
                                                                                                                                     
           "கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக்  கொண்டார்
            துரும்பெழுந்து  வேங்கார்  றுயரான் டுழவார்
            வருந்தி உடம்பின் பயன்கொண்டார்  கூற்றம்
            வருங்கார்  பரிவ திலர் ".

அதாவது,
                     கரும்பின் சாற்றினால் ஆகவேண்டிய பயனைப் பெற்றபின் அதன் துரும்பு வேகக்கண்டு துன்பம் அடையாதது போல், தேகத்தின் பயனாகிய தருமத்தை சம்பாதித்த  பின் மரணத்துக்கு  பயப்பட மாட்டார்கள்  விவேகிகள்.

          தனிமையில்  வெறுமை  சூழ  மரண பீதியில் செயலற்று அமர்ந்திருந்த எங்கள்  தமிழய்யாவின்  பிம்பம் என் சிந்தையுள் தோன்றி மறைந்தது.

                                                       *****
குறிப்பு :

             ( நாலடியார், விளக்கம்  : புலியூர்  கேசிகன் )

            { கூற்றம் வருங்கால் - எமன் வரும்போது  }

                                             ..........***..........

Tuesday, 4 March 2014

வம்ச விருத்தி

வம்ச விருத்தி 

" ஊர்ல தல காட்ட முடியல.பாக்கறவனெல்லாம் இதே கேள்வி தான். தூக்கு மாட்டிகினு செத்துட்லாம்னு தோணுது "

" நீ பரவால்ல ஆம்பள. அப்டி போயிட்டு சேர்ல டிப் டாப்பா ஒக்காந்துண்ட்டு  வந்தா போச்சி. பொம்மனாட்டி என் நெலமைய யாரு கிட்ட சொல்லி அழுவறது. த்த.. இண்ணிக்கி பொழுதும் எங்க சித்தப்பன் பொண்ணு குன்னத்தூர்ல குடுத்துனு க்குதே. என்னவோட சின்னவ. அவ புள்ளைக்கு வளகாப்பு. என்னத்த சொல்ல.. பந்தல்ல ஜாதி ஜனமெல்லாம் என்ன அவ்வளோ எளக்காரமா பாக்கறாங்க. என் பெரியம்மா என் தவடையிலையே தட்டிட்டா. சீ ..நீயும் ஒரு பொம்பளன்னு இப்பிடி மிணிக்கினு வந்துட்ற - ன்னு . ..ன்னா சொல்லுவ.."

ஆளுக்கொரு சுப நிகழ்ச்சிக்கு சென்று எப்பொழுதும் போல் கூனி குருகிப்போய் வீடு திரும்பி புலம்புகிறார்கள். உற்றார் உறவினர் என்று  எந்த நிகழ்வானாலும் தவறாமல் கலந்து கொள்ளும் பழக்கமுடையவர்கள் இருவரும். அதுவும் சமீப காலமாக சுக துக்க கூடலில் அழையாவிடினும் சென்று வருகிறார்கள்.

" கல்யாணம் கருமாதின்னு ஒன்னுதுக்காவது போனா வந்தாத்தானே. இன்னார் புள்ளைங்கன்னு தெரியும். நாலு வரன் அமையும். இந்த வயசிலையும் நடக்க முடியாம இந்த கால வெச்சிகினு அத்தனைக்கும் நானே போய்கினு க்கறேன்.அப்புடியாவது யாராவது பாக்க மாட்டாங்களா ஏதாவது அமையாதாணு ஒரு நப்பாச.." சுவரில் சாய்ந்து கைகள்  ஊனி  உட்காருகிறாள் அம்மா.

"..நாளைக்கே செத்து பூட்டம்னா எப்படி வாழுங்க இந்த புள்ளைங்க. போய்ப்பாரு. IAS கலேட்டறு கூட குடும்பம்,அத்த, மாமான்னு எப்படி 'களோ முலோ'ன்னு பந்தில சிரிச்சி பேசிட்டு போறான்னு. அவனவுடவா. ரெண்டும் ரெண்டு விதம். அந்த புள்ளைக்கி ஏதும் சரியா அமையல. நானும் போகாத கோயிலில்ல, செய்யாத பரிகாரமில்ல. சரி அவளுக்கு தான் அப்படி தாமதமாகுதுண்ணா இவனுக்காவது முடிச்சிரலாம்னு பாத்தா ஒத்து வந்தா தான.பெருசா ஏதோ கிளிக்கிறானாம் .ஊரு ஒலகத்துல எவனுமே புடுங்காதத. மத்தவனெல்லாம் கல்யாணாம் பண்ணிகினு வாழல. இப்ப தான் அப்படியே பதனாறு வயசா. தளமுடில்லாம் இப்பவே வெழுத்துகிச்சி. இதுல தாடி வேற. ரோட்ல தல காட்ட முடியல. போறவ வரவெல்லாம் கேக்கறா.என்னாடி ஆச்சி உன் பையனுக்கு. இப்பிடி சுத்தறானேன்னு. என்னா சொல்லுவ.இந்த லட்சனத்துல எந்த பொண்ணுன்னு பாக்கறது  இந்த அழகனுக்கு. எப்ப இந்த வூட்ல நான் பேரன் பேத்தி எடுக்கறது. அது.. வளத்தது சரியில்ல. போதா கொறைக்கு சேர்க்க வேற. எவனோ தமிழ்நாடனாம் . கல்யாணம் பண்ணாம ஒன்னும் பண்ணாம அத்தையும் இத்தையும் பேசிகினே காலத்த ஒட்றானாம். அவனாண்ட சேந்துகினு விடிய விடிய பேசறது. என்னுமோ சுத்துற ஒலகத்தையே நிறுத்திட்றவணுங்கலாட்டும் . அவனுக்கு பரவால்ல. இனிமே ஒன்னும் இல்ல. ராவிக்கும் பேசிபுட்டு விடிஞ்சதும் தூங்கிடுவான். நாம அப்படியா. எல்லார் மாறியும் குடும்பம் கொழந்த ஒரு வேலன்னு சமுதாயத்துல கவுரமா வாழ்ந்து காட்டனா தான ஆம்பள. "

" ..த்தா..எக்கா.. செத்த சும்மா கெடக்கறையா. பேசி எதனா ஆவப்போதா. அதது நடக்கற காலத்துல நடக்கும். அவன் தான் இன்னும் ஆறு மாசத்துல நான் நல்ல நெலமைக்கி வந்துடுவேன் சித்தி. அது வரைக்கும் என்ன டிஸ்ரப் பண்ணாதீங்கன்னு சொல்றானல்ல. ஆக்கப் பொருத்தவளுக்கு ஆற பொறுக்கலையா. த்தா.. ஓடிடப்போது ஆறு மாசம்."

 " நீ கொஞ்சம் மூட்றி. வண்ட்டா நீட்டிகினு. அவன் சொல்றானாம் இவ கேட்டுகினாலாம். ஒனக்கென்ன தெரியப்போது எங்கஷ்டம். நீ ஓங்கோயிலே கதின்னு கெடப்ப. இந்த மாதிரி எத்தன ஆறு மாசத்த பாத்துனு க்கறம் நாங்க தெரியுமாடி ஒனக்கு?

" சரியா எக்கா. அதுக்கு என்னா பண்றது சொல்லு.எல்லாருக்கும் ஒரே மாறி அமையுமா.அஞ்சி வெரலும் ஒரே மாதிரியா க்குது. எதுக்குமே கடவுள் மனசு வெக்கணும்."

" ஆங்..வெக்கிது ஓங்கடவளு. சரி, நான் கும்பட்ற கடவளு தான் கைய விரிச்சிறிச்சி. தெனம் ஓயாம ஆறு வேல கும்பட்றயே முக்காடு போட்டுகினு. அத்த  செய்ய சொல்லு பாக்கலாம்."

" கர்த்தர் நாம கேட்ட வுடனேல்லாம் கொடுத்துட மாட்டார். நம்ம வேல ஜபிக்கறது மட்டுந்தான். நேரம் வரும் போது அவன் கொடுக்கறத யாராலும் தடுக்க முடியாது."

"..ங்கும். இதுல தடுக்க வேற யாரு இக்க போறாங்க. இன்னைக்கோ நாளைக்கோண்ணு  இழுத்துகினு கெடக்கறோம். புடுக்கு செத்தப்பறம் குடுத்து என்னாடிம்மா  புருவோசனம். இந்த வம்சம் விருத்தி அடையப் போறதுமில்ல. எங்கட்ட வேகப் போறதுமில்ல."

" இந்த முண்டய செத்த நேரம்  பேசாம இக்க சொல்றியா இவளே.." பொறுமுகிறார் அப்பா.

" நீங்க படுங்க மாமா. யக்கா.. செத்த  ஓய்யா ஏய். மாமா பாரு ஒடம்பு சரியில்லாத மனுசன கத்த வெச்சிகினு. பையன் வந்துடுவான். அரிசி எங்கக்குது சொல்லு. நானாவது ஒல வெக்கறேன்.பாவம் புள்ள பசியோட வருவான்."

" ஆமா கலேட்டறு உத்தியோகம் பாத்துட்டு வர்றான், தொறைக்கி நல்லா ஆக்கி கொட்டு. அவ்ள தான் நாலு வார்த்த கொட்டி தீத்தாச்சி. எல்லாரும் எதையாவது கொட்டிகினு மொடங்கலாம்  மிருகம் மாதிரி. குடும்பமா இது.."

" ஆயிரந்தான் இருந்தாலும் அவன் உன் புள்ள எக்கா. அவனும் போராடிகினுதான  க்கறான். "

" போராடி என்னாத்த பண்ணப் போறான். அதது அந்தந்த பருவத்துல நடந்தா தான். தெனம் பேப்பர்ல டீவீல சொல்றானே தெர்லையா. முப்பத்தஞ்சி வயச தாண்டிட்டா ரொம்ப கஷ்டமாம். அதும் இவன் குடிக்கற சிகரட்டு சாராயத்துக்கு வெளங்கிடும். இவனோட படிச்ச புள்ளைங்கல்லாம் கல்யாணம் கட்டி புள்ள பெத்து சமுதாயத்துல நாலு பேரு மெச்சற  மாறி எப்புடி டிப் டாப்பா வாழ்றாங்க . நான் என்னா  சொகத்த கண்டேன். இதுங்கள படிக்க வெக்கலயா, என் வவுத்த கட்டி கூட ஊட்டி வளத்தேன். யாருமே படிக்காத காலேஜுல படிக்க வச்சேன். வேற என்னா கொற  வெச்சேன். படிச்ச படிப்ப பயன்படுத்தி ஒரு வேலைக்கி போய் நல்லா வாழக்கூடாதா. இதுல வேற ஆவூண்ணா திர்ணாமல வேற போயிடறான் கூட்டம் சேந்துகினு. காவித்துணி மாட்டிகினு சாமியாராத்தான் போகப்போறான். இவன் வாழ மாட்டான்...வாழவே மாட்டான். எல்லாரும் குடும்பத்தோட பால்டாயலு குடிச்சிட்டு சாக வேண்டியத்தான். இந்த குடும்பம் நாசனமாத்தான் போகப் போது ." தேம்பி அழுகிறாள் அம்மா.வெடுக்கென கட்டிலிலிருந்து எழுந்து வந்த அப்பா,

" கண்டாரோலி முண்ட. " உதைத்ததில் சற்றே தள்ளாடி சுதாரித்துக் கொள்கிறாள் அம்மா.

"அடி... அடிச்சே கொன்னுடு என்ன. இப்படி எகிரிகினு ந்ததாலதான் அந்த காலு வெளங்காமப் போச்சி.."

" மாமா. நீங்க எதுக்கு இப்ப டென்சன் ஆவறீங்க. BP எரிடப்போது. ஏற்கனவே கைகாலு வராம இருக்கறீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சினா அப்பறம் இந்த புள்ளைங்கள யாரு பாக்கறது."

"அட நீ வேற சும்மா இரும்மா. செத்தா சாவறேன். இந்த முண்டையோட ஓரியாடறத்துக்கு அப்படியாவது போய் சேரலாம். பேசி பேசிதான் என்ன ஒலிச்சா. ஏதோ இந்த புள்ளைங்களுக்கு நல்லது நடந்துடாதான்னு உயிரை கைல புடிச்சிகினு காலத்த தள்றேன். இதுல தெனைக்கும் இவ பொலம்பளு  தாங்கள."

" நீ என்கிட்ட தான் வருவ. ஏன் ஒன்  பையனாண்ட காற்றது ஒன்  வீறாப்ப.இப்படி ஊற சுத்திகினு க்கறையே, உருப்படியா ஒரு வேலைக்கி போயி காலா காலத்துல கல்யாணம் பண்ணுன்னு சொல்றது, வரவன் போரவனாண்ட எல்லாம் என் மவன் அத்த சாதிப்பான் இத்த சாதிப்பான்னு ஜம்பம் அடிக்கறியே."

" எம் முன்னால கைய நீட்டி பேசணா எனக்கு பித்தம் தலைக்கி ஏரும்னு தெரியுமில்ல.."

எட்டி உதைக்க போனவரை தடுக்கிறாள் சித்தி.

"மாமா இப்ப சும்மா ஒக்காற்றீங்களா இல்லையா."

" ஏ.. அமாண்டீ. நான் அப்படி தான் ஜம்பம் அடிப்பேன்.என் மவன் பெரியாளா வரத்தான் போறான். " மூச்சிரைத்தபடி கட்டிலில் அமர்கிறார்.

"அதானே ஓங்க பையன உட்டு குடுப்பீங்களா." புன்னகைக்கிறாள் சித்தி.

" ஆமாண்டி எம்மா, நீ தான் மெச்சிகினும் ஒம்மாமன '

" ஏன்  எனக்கென்னடி கொற . சிங்கம்டீ நான். அந்த காலத்துல... சரசு நீ வேண்ணா பாருமா என் மகன் கல்யாணம் கட்டி அஞ்சி புள்ளைய வரிசையா பெத்து போடப்போறான். நான் அதுங்களாண்ட  வெளயாடியே சாகப்போறேன்."

" சந்தோஷம். அப்படி நல்லதாவே நெனைங்க. நல்லதாவே நடக்கும். கேட்டயாயா எக்கா மாமன் சொல்றத. எழு. போய் மூஞ்சி கழுவி தலவாரி பொட்டு வையி. வெள்ளிக்கெழமையும் அதுமா வூட்ல வெளக்கு  ஏத்தி ஒரு ஜபம் பண்ணுவோம். நான் காப்பி போட்டு எடுத்துனு வரேன்." கூந்தல் முடிந்தபடி சமையலறை  செல்கிறாள்  சித்தி.

" " அட்ரா செக்க அதான பாத்தேன். அடுத்தவன் தலைல இடியே வுழுந்தாலும் அலுக்காம சொல்லுவா 'அல்லேலூயா இந்த தர்மபுரிகாறி .."

"என்ன மாமா..?"

காப்பில சக்கர போடாதடீம்மா சரசு.."

" அறுவது வயசானாலும் அடங்குதாப் பாரு.." அப்பாவை முறைக்கிறாள் கட்டியவள். அந்த நேரம் பார்த்து,

" எக்கா..!எக்கா..?!" குளியலறை பக்கமிருந்து சித்தியின் வினோத ஒலி.
வேகமாக ஓடுகிறாள் அம்மா. இரு பெண்களும் கையில் எதையோ வைத்தபடி விழிக்க,கட்டிலிலிருந்து எழுந்து அவ்விடம் நோக்கி செல்லும் அப்பா. அவரை பார்த்ததும் வெட்கித் திரும்பும் சித்தி.

" என்னா சத்தம். அட.. என்னான்றேன்." திரும்பி நிற்கும் அம்மாவின் தோள்தொட்டு திருப்பி அவள் கையில் சித்தி திணித்ததை  பார்க்கும் அப்பா.
மூவரும் ஒருவரையொருவர் புதிருடன் கூடிய இனம் புரியா பரவசத்துடன் பார்த்தபடி உறைந்து போகிறார்கள்.

வீட்டில் விளக்கேற்றி 'ஓம்முருகா' 'அல்லேலூயா' எல்லாம் முடிந்து ஒருவித அமைதியுடன் அமர்ந்துள்ளார்கள் மூவரும். வழக்கத்துக்கு மாறாக டீவியில் ஜோராக பாடல்.

" ஏவாளுக்கே தங்கச்சித்தான் எங்கூடவே இருக்கா;
 ஆளுயர ஆலிவ் பலம் அப்படியே எனக்கா..!"

டப்.. டப்.. டப்.. அனைவரும் அலெர்ட் ஆகிறார்கள். அனைவரின் முகத்திலும் பரவசம். கதவை எப்பொழுதும்போல் அசதியோடு திறப்பவள் போல் முகத்தை அஷ்ட்ட கோணலாக வைத்தபடி திறக்கிறாள் அம்மா. எப்பொழும் கதவு திறக்கும் வரை சாதாரணனாய் இருந்து திறந்ததும் சிடுசிடுக்கிறான் கதையின் நாயகன்.

பேரமைதி. பளிச்சென வீட்டினுள் எல்லா லைட்டுகளும் மின்ன மூவரின் முகங்களும் ஜொலிக்கிறது. கணப்பொழுதில் அம்மாற்றத்தை உணர்ந்தவன் காரணம் தெரியாததால் விறைப்பாக உள்ளே செல்கிறான்.

" வா கண்ணே. நல்லா இருக்கயா  ?" சித்தி.

".. ஆங்.. எப்ப வந்தீங்..?

சித்தி பதில் சொல்வதற்குள் உள்ளே சென்று விடுகிறான்.மூவரும் சிரித்துக் கொள்கிறார்கள். குளித்து முடித்து சாப்பிட உட்கார,

" என்ன கண்ணே மதியம் சாப்ட்டயா.?"
" ரெஸ்ட் எடுத்தயா இல்ல காலையிலேயே போய்ட்டயா ?"
" ஆங் சித்தி. வீட்லதான் இருந்தேன். Evening தான் வெளில போனேன்."
"சரசு. அவன் சாப்புட்டும் வாம்மா இங்க.." அப்பாவின் கர்ஜனை.
" அவன் கிட்ட நாம ஏதும் தெரிஞ்ச மாறி காட்டிக்க கூடாது டீ ,வர சொல்லு அவள.." மனைவியிடம் ரகசியமாக சொல்கிறார்.
" ஏய் இவளே அஜீத்தப் பாறேன்.வெள்ள முடியோட சின்னப் பையன் மாறி என்னாவா ஆட்றான்."

நடப்பதெதுவும் விளங்கவில்லை அவனுக்கு.உள்ளறையை தாழிட்டு புத்தகம் புரட்டுகிறான். அவர்களின் திடீர் மாற்றத்திற்கான காரணம் யோசித்தபடி புத்தகத்தினுள் மூழ்கிப்போனவன் ஒரு மணி நேரம் கழித்து எதேச்சையாக   மதியம் பயன்படுத்திய ஆனந்த விகடன் அட்டைப்படம் பார்க்க.. அதிர்ந்தவனாய்  விழி பிதுங்க குளியலறை செல்கிறான். அவ்விடமுள்ள திட்டுமேல் மடித்து வைத்த தினசரி காகிதத்தை தேடுகிறான். இல்லை.இரண்டு கைகலாலும் தன்  முகத்தை மூடியபடி சுவரில் சாய்கிறான். இதயம் இடிக்கிறது.

" Oh, my god..! god..!! சொதப்பிட்டயேடா.."

நேரம் செல்ல நிதானித்து மெல்ல தன்  அறை  வந்து புத்தகமேந்தி நெடுநேரம் அமைதி காக்கிறான். மென்புன்னகை அரும்ப, மெல்ல நடந்து சென்று ஹாலில் தன் பெற்றோரைப் பார்க்கிறான். நெடுநாட்களுக்குப் பின் நிம்மதியாக உறங்குகிறார்கள். பெருமிதப்  பெருமூச்சு .திரும்ப வந்து லைட் அனைத்து படுக்கையில் படுக்கிறான். தன் பெற்றோருக்கு தற்காலிகமாக தன்னாலான நம்பிக்கை கொடுத்த திருப்தியில் இமைகள் இளகுவாய்  இணைய அன்றிரவு அவனும் நிம்மதியாகவே உறங்குகிறான்.

                                                                 *****

Thursday, 27 February 2014

சந்தியா ராகம்

பாலு மகேந்திரா
                            " I MAY BE A VULGAR MAN. BUT, MY ART IS NOT..!"

- மொஸார்டின் அந்த புகழ் பெற்ற வாக்கியத்தை தன்  வயோதிகத்தில் அடிக்கடி சொல்லியவண்ணம் இருப்பார் பாலு சார்.

படைப்பையும் படைப்பாளியையும் பிரித்தறிவதே சரி அல்லது இரண்டும் வெவ்வேறாக இயங்க இயலாது என்னும் விவாதத்தை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு 'பாலு மகேந்திரா ' என்னும் மனிதருடன் எனக்குண்டான பரிட்சயம் தந்த அனுபவத்தினை அசை போடுகையில் அவரிடமிருந்து நான் கற்றவை  பெற்றவை பல.

அவருடைய கடைசி மாணவனும் நானே, அவரிடம் கடைசியாக பேசியவனும் நானே. இறப்பதற்கு முந்தய தினம் அவரை பார்க்கச் சென்றிருந்தேன்.சமீப காலமாக  திறந்தே வைக்கப்பட்டிருக்கும் அறையினுள் நுழைந்ததும் உடைந்த குரலில்  பேசினார் மனிதர்.
" Pasu.. am not well da.. am feeling sick.."
இத்தனூண்டு உடம்புக்குள்ள இருபத்தேழு மருந்த ஏத்தறாங்கடா ..?!"
அவர் கூறும் முன்னரே அவரெதிரில்  அமர்ந்தேன். அவ்வுரிமையை அவர் கொடுக்கவில்லை. நானும் எடுக்கவில்லை. அது நிகழ்ந்தது.

சினிமா தான் என் தொழில் என முடிவெடுத்தப் பின் நான் சினிமா பழக தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடம் "பாலு மகேந்திரா ". அவரை நான் முதன் முதலாய்  பார்த்தது மார்ச் 2004 - ல் இளையராஜாவினுடைய 'திருவாசகம்' இசை வெளியீட்டின்போது மியூசிக் அகாதெமியில். தொப்பி, coolers, ஜீன்ஸ் சதம் ஒலிபெருக்கியில் தன்  கம்பீரக் குரலில்  பேசிக்கொண்டிருந்தார். அதன் பிறகு Chennai Film Chamber - ல் 'சுவாஷ்' என்ற மராத்திப் படம் அவருடன் பார்த்தேன். அவருடைய உதவியாளர் ரவி மூலம் அவருக்கே தெரியாது அவர் அப்பொழுது எடுத்துக் கொண்டிருந்த 'அது ஒரு கனாக்காலம்' படப்பிடிப்பில் பாடம் பயில ஆரம்பித்தேன்.   நான்கு வருடங்கள் இலக்கியம் உலக சினிமா என எனைத் தயார் செய்த பிறகு ஒரு நாள்( 11.11.2005) அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். செந்தில் மட்டுமே அலுவலகத்தில் இருந்தார்.
" சாரப் பாக்கணும்.."
" என்ன விஷயமா..?"
" கனாக்காலம் படத்தப் பத்திப் பேசணும்.."
வரவேற்ப்பறையில் அமர்த்தப் பட்டேன். சிறிது நேரத்தில் அறைக்குள்ளிருந்து வந்தவர்,
" யாரப்பா நீ.. ஒன்  பேரென்ன ? "
'கனாக்காலம்' படத்தைப் பற்றி ஒவ்வொரு காட்சி ரீதியாக கதை ,கதாப்பாத்திரங்கள், ஒலி மற்றும் ஒளி பயன்படுத்தப் பட்ட விதம் குறித்து பேச ஆரம்பித்தேன். சமையலறையில் 'Vegetable Soup' செய்துக் கொண்டிருந்த செந்திலை அருகில் வந்தமரச் சொன்னார்.( தன் உதவி இயக்குனர்கள் பலருக்கும் தான் விரும்பும் சமையல் கலையை கற்றுத் தருவார்.) பேச்சு முடிவில் எழுந்தவாறு,

" இந்த மாதிரி Detail - ஆ Criticize பண்ணாத்தானே Creators- க்கு Energetic- ஆ இருக்கும். Weather it's good or bad express your view points honestly. எங்க.. நேர்மையா ஒரு படைப்ப விமர்சிக்கிறப் பழக்கமோ பக்குவமோ இப்ப யாருக்குமே இல்லப்பா..It's too bad.. Anyway what you have talked so far is very encouraging.." என்றவாறு அறைக்குள் சென்றவர் சற்றே திரும்பி,
" ஒன் பேரென்னப்பா சொன்ன..?" ​ - முதல் நம்பிக்கைக் குறி.
நான்கு வருடப் பயிற்சிக்குப் பின், ஒரு மாத தவ வாழ்க்கையின் பயனாக அந்த வாசகத்தை  என்னுள் பரவவிட்டு நகர்வலம் திரிந்தேன்.

 கோவா சர்வதேச  திரைப்பட விழாவிற்குச்  சென்று அவ்வனுபவங்களை ஒரு நீண்ட பயணக் கட்டுரையாக அவரிடம் சமர்ப்பித்தேன். சில பக்கங்களை புரட்டியவர்,
" Why don't you become a Literary Writer..?" என்றார்.
" I wanna become  Film maker Sir."
" What's  the difference between  two. Both are Arts."
" No sir. It's different. ஒரு Writer- ஆ  நான் ஒரு உலகத்த காட்டறத விட ஒரு இயக்குனரா காட்டும் போது இன்னும் தீர்க்கமா நான் காட்ட நெனைக்கறத காட்ட முடியும்."
இரு கைகளையும் குவித்து கன்னம் ஊன்றியவர் நீண்ட மௌனத்திற்குப் பிறகு..
" Ok.. see you later.." என்றார்.
" Sir. I want to become your Asst. director.." என்றேன்.
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாதவராக,
" இல்லப்பா.. இப்ப vacancy இல்ல. நீ நெறைய படி.. படம் பாரு.. பாக்கலாம்.."
" இல்ல சார். அதத்தான் இத்தன வருஷமா செய்துட்டிருந்தென். I need practical knowledge hereafter."
" அதான் சொன்னனேப்பா ..இப்ப முடியாது.." வெடுக்கென சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

நிலைகுலைந்து போன நான் செய்வதறியாது பைக்கில் நகரைச் சுற்றித் திரிந்து மெரினா பீச் சென்று 'அசோகமித்திரன்' படித்துக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் இருந்து செந்தில் அழைத்தார்.சிட்டாகப் பறந்தேன். கையில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்திருந்தார் பாலு சார். தாவிச் சென்று அவர் காலடியில் அமர்ந்தேன்.
" இந்த புத்தகம்..."
" கல்மரம் சார்."
" இது..."
" இந்த வருஷம் சாகித்ய அகாடெமி விருது வாங்கி இருக்குங்  சார்."
" இது..."
" கட்டடத் தொழிலாளர்களப் பத்தினது சார்."
ஏறெடுத்துப்  பார்த்தவர்..
" இந்தக் கதைய Screenplay Pattern - ல எழுதி கொண்டு வா. Will You..?"
" Sure Sir."
" எத்தன நாள் எடுத்துப்ப.."
" Four days sir.."

மூன்று நாட்களில் சென்றேன். அவரின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் சிஷ்யர்கள் ரவி, செந்தில், அமர்நாத், கிருஷ்ணகுமார் மூர்த்திசார் முன்னிலையில் 'கல்மரம்' கதை சொன்னேன்.எவ்வித வெளிப்பாடுமின்றி,
" Ok.. ஒரு டீ  சாப்பிடலாம்பா.."
அனைவரும் களைய, என்னை அருகில் அமர்த்தி டேபிள் drawer - ல் இருந்து ஒரு பேப்பர் எடுத்து,
" இது தான் கதை நேரத்துக்காக எடுத்த ஒரு Short Film -ஓட  One Line."
தேநீர்( Black-Tea ) அருந்தியவாரு,

" ஒரு ஊர்ல ஒரு பாட்டி வட சுட்டுட்டு இருந்துச்சாம்... இந்த வாக்கியத்த பிரி. ஒரு ஊருண்ணா அது எப்படிப்பட்ட ஊர் ? நகரமா.. கிராமமா..? சாலையோரமா..கடற்புறமா..? ஒரு பாட்டியிண்ணா அந்த பாட்டி எப்படி இருப்பா ? சேலை கட்டிட்டா..ஜாக்கெட் பொட்டிருப்பாளா..மாட்டாளா..?அவள் தமிழா, வடக்கத்தியா..?இந்த ஒவ்வொரு கேள்விக்கான விடையும் ஒரு 'SHOT' .
என் குரு பாடம் நடத்தும் அழகே தனி.
" சரி நாளைக்குப் பாக்கலாம்."
நான் வெளியேறும் பொழுது,
" I Liked Your Narration..!"

சிறகடித்துப் பறந்தேன். அதற்குப் பிறகு அவர் என்னை எத்தருணம் தன் உதவியாளனாக சேர்த்துக் கொண்டார். நான் எப்பொழுது அங்கீகரிக்கப்பட்ட சிஷ்யனானேன் என்பது இருவருக்குமே தெரியாது.

'பிறப்பு' என்னும் திரைப்படத்திற்கு ஷங்கி மகேந்திரா தான் காமிரா மேன் . அவருக்கு வேறொரு டாக்யுமென்ட்ரி வேலை இருந்ததால் அப்படத்திற்கு ஒரு வாரம் பேட்ச்  வொர்க்  செய்ய பாலு சார் சென்றார். நான் தான் அவருக்கு உதவியாளன். அவர் காமிரா இயக்குவதை கனாக்காலத்தில் தூரத்தில் நின்று பார்த்தவன் இன்று அவருடன் வேலை செய்கிறேன். Lens, View-finder,Track and Trolley, Apple Box, Meter என அவர் கேட்க நான் இயங்க அவருக்கு கிடைத்த அனைத்து மரியாதைகளும் எனக்கும் கிடைத்தது. Pack up சொல்லி திரும்பும்போது காரில்,
" இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்து கொடுத்திருக்கலாம் டா.."
" Shot Division பண்ணி Shoot பண்ணியிருக்கனுமோங்  சார். "
" இல்லடா.அது வந்து...."
" கொஞ்சம் Rules - அ Break பண்ணி இருக்கலான்றீங்களா.?"
" இந்த காலத்துல  நெறைய பேர் இப்படி பேசறத கவனிச்சிட்டு தான் வர்றேன்.மொதல்ல ஒன்ன தெளிவா புரிஞ்சிக்கோங்கப்பா.
 ..கைல இல்லாத ஒன்ன தூக்கி போடா முடியாது."
 அப்பயணத்தில் அவருடன் விவாதித்தது என் சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்டம்.

அக்காலக்கட்டத்தில் அவருடன்  செந்திலும் நானும் மட்டுமே ஒரு வருட காலம் இருந்தோம்.எங்களுக்கு அலுவலகமே வீடு. தினமும் கூட்டி கழுவி அமைதி கோர்த்து  காத்திருப்போம் சார் வருகைக்காக.அவரே குரு, தகப்பனார், நண்பர் எல்லாம்.நாங்கள் தினமும் படிப்போம். படம் பார்ப்போம். விவாதிப்போம். பாலு சார் மதியம் கருவாட்டுச் சொதி சமைக்க காலையிலேயே  தயார் ஆவார். தேங்காப் பால் பிழிந்து சூடாக ஒரு கோப்பையில், சில்லென்று ஒரு கோப்பையில், பச்சைப் பட்டாணியின் அளவை வைத்துக் கொண்டு அதற்கு இணையாக பீன்சை வெட்டச் சொல்வார். இந்த அளவு வெப்பத்தில் இவ்வளவு நேரம் வேக வேண்டும். பரிமாறுவதில் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிப்பார்.

செந்திலிடம் கேட்பேன்.
" என்ன நடக்குது இங்க.. நாம சினிமா கத்துக்க வந்தமா இல்ல சமையல்ல Ph.D பண்ண வந்தமா.."
" தெர்ல Bro. ஆனா சொதி சூப்பரா இருக்கு.."
சொதியை சுவைத்தவாறே சிரிப்பார் செந்தில். பாலு சாரிடம்  இரண்டு படங்கள் உதவி இயக்குனராக சினிமா பயின்றவர். சாரின் சமையலும் அறிவார் . அதனைத் தொடர்ந்து அவர் பாடும் சங்கீதமும் அறிவார் .

"சமைக்கத் தெரியாதவனுக்கு Creativity - யே  கைகூடாதுடா." என்பார்.
"அநியாயமா இருக்கே.. சமையலுக்கும் சங்கீதத்துக்கும் என்ன தொடர்பு..?!"
                  நாம் உண்ணும் உணவே நாம் - சூட்சுமக்காரன் என் குரு.

நாங்கள் பேசாத விஷயமே  இல்லை. சினிமா, இலக்கியம்,ஓவியம், சிற்பம், உறவுகள் என நீளும், பொழுது. அவர் பூனே திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது, தான் செய்தவற்றைப் பற்றியும் பெண்களுடனான அவருடைய அனுபவங்களைப் பற்றியும் ஈழத் தமிழில் அவர் கூறக் கேட்கையில்
' செந்தமிழ் நாடெனும் போதினிலே....'

எங்கள் கையில் காசிருக்காது. ஆனாலும் படு மிடுக்காகக் கிளம்பி விடுவோம் நகருலா. மகேந்திரன் அவர்களின் 'சாசனம்' திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தோம் பாலு சார்,நான், ஆதவன் தீட்சண்யா மூவரும். பாதியில் நான் நெளிந்து,
 "சார்.Rest Room போயிட்டு வர்றேன்.."
சற்று நேரத்தில் ஆதவன் தீட்சண்யா வர்றார். இருவரும் சிரித்துக்கொள்கிறோம். படம் முடிந்து Tic-Tac சென்று DVD வாடகைக்கு எடுத்துக்கொண்டு  Woodlands - Drive In நோக்கிப் பயணிக்கையில்,

" என்னடா.. ஒண்ணுமே பேச மாட்டேங்கிற.. நானே கேட்கணுமா.."
" இல்ல சார்.."
"அப்ப சொல்லு.. எப்படி இருந்துச்சி படம்..?"
" No sir.. It's like.."
" பிடிச்சிருக்கு. பிடிக்கல.இவ்ளோதானே.. இத சொல்ல ஏண்டா இவ்ளோ பீடிக..!"
" சார். கண்ண மூடி பத்து நிமிஷம் படத்த கேட்டேன். எனக்கு புரிஞ்சிச்சி.. அதான்..."
" Cinema is basically a Visual Art. நான் தான் சொன்னேன். இலலேங்கள. ஆனா ஒரு படம் எந்த ஒரு உணர்வ சொல்ல வந்ததோ அந்த உணர்வ பார்வையாளனுக்கு கடத்திட்டா அது நல்ல சினிமா தாண்டா. அதுக்கு 'Grammar' முக்கியமில்ல. இயக்குனரோட பார்வை தான் முக்கியம்."

பின்னொரு சமயம் ' Inception ' படம் பார்த்துத் திரும்பும் போது  நான் கேட்டேன்.
" How was the Film Sir..?"
" Intellectual.. Very Very intellectual.."
".. along with the psychedelic music it's like Illusionary world, sir. "
" So What..?"
அவர் கேட்ட இந்த கேள்வி பின்னொரு நாள் வெற்றிமாறன் சாரிடம் சொன்னேன். குபீரென்று சிரித்தார்.
 " அதான் நம்ம சார்..! "
பூனே திரைப்படக் கல்லூரியில்  மாணவர்கள் இருவேறு பிரிவுகளாய் பயின்றார்கள்  . 'Intellectual  Group'  and 'Emotional  Group' . சத்யஜித் ரே மற்றும் ரித்விக் கட்டக்'கிடம்  பயின்றார் பாலு மகேந்திரா.

அவர்  படைப்புகளைப் போல் அடிக்கடி அதீத உணர்ச்சிக்குள்ளாவார் சார்.
"  இது ஒரு வித வரம்.ஒரு படைப்பாளி எங்கறவன் சாமான்யன் பாக்க முடியாததையும் பாக்கற நுண்ணுணர்வு மிக்கவன். அதாலையே அவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் அதீத பரவசத்துக்கு ஆளாகறான். துயரத்துக்கும் ஆளாகறான். துரதிஷ்டவசமா அந்த நுண்ணுணர்வே அவனுடைய சொந்த வாழ்க்கையையும் சீரழிச்சிடுது. It just collapses his very own Life.."
 பல மேடைகளில் அவர் தவறாமல் பேசும் வாசகம் இது.

பின்னாட்களில் கார் வசதி மட்டும் வாய்த்த போது மதிய வேளைகளில் பணமில்லா நாட்களில் மனம் தளராது நிலைக்க நகருலா செல்வோம்.   சாலையில் சென்று கொண்டிருக்க,
"எல்லாமே மாறிடுச்சிடா. சினிமா உட்பட நம்மைச் சுத்தன உலகம், வாழ்க்க, Everything....... காரத்திருப்பு.."
சம்பந்தமே இல்லாமல் விஜயா மருத்துவமனையினுள் போகச் சொல்வார்.
தேநீர்க் கடை மரத்தடியில் அமர்ந்தவாறு நோயாளிகள் உறவினர்கள் என பலதரப்பட்ட முகங்களையும் பார்த்தபடி,

" கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் 
 எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்  - இல்லானை
 இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த   தாய்வேண்டாள்
 செல்லாது அவன்வாயிற்  சொல்."

என  நாலடியார் சொல்லி  வானை வெறிப்பார். மாலை நேர மேகக் கூட்டம் நிசப்தத்துடன் நிற்கும் மரக் கிளைகளினூடே மெல்ல நகர்ந்தவாறே மந்தகாசப் புன்னகை பூக்கும். அத்தருணங்களில் அவர் விழிகளில் பனி படர்ந்திருக்கும். தேநீர் கொடுத்து மௌனம் கலைப்போம் செந்திலும் நானும்.  சட்டென எதிரே செல்லும் சிட்டைப் பார்த்து,
" இவ தன்ன பசங்க பாக்கனும் எங்கறதுக்காகவே இப்படி Dress பண்ணிட்டு போறாடா. இப்ப நாம பாத்தா சிடுசிடுப்பா.பாக்காட்டி Disappoint ஆயுடுவா.. நாம என்னடா செய்யறது?"
"சார். நம்மால இப்ப ஒன்னும் பண்ண முடியாது சார். போலாமா.."
" நீயா எப்படிடா இப்படி ஒரு முடிவுக்கு வருவ.. I am still 25 at heart.."
" Of course i agree if it's about your heart, sir.."
அது தொட்டு அவர் அனுபவங்கள் பகிர,
நாங்கள் சிரித்தவாறே அலுவலகம் நோக்கிப்  பயணிப்போம்.

"If a woman sleeps alone it puts a shame on all men. God has a very big heart, but there is one sin  He will not forgive. If a woman calls a man to her bed and he will not go." - ZORBA.
" Nature is Amazing டா. What a lovely arrangement it is..! இந்த' Pleasure ' - ங்கற சமாச்சாரம் மட்டும் இல்லேண்ணா 'Reproduction' - எங்கறதே  இல்லாமப் போயிடும் இல்லயாடா."

என் மொபைலில் ரிங் டோனாக ' ZORBA THE GREEK' இசை வைத்துள்ளேன். ECR - ல் உள்ள 'தக்ஸனசித்ரா'  சென்று திரும்பும்போது,
 "நல்லாருக்கே,என்ன மியூசிக் ? "
துள்ளியபடி.. " OH..! ANTONY QUINN..! What a performer. What a character. ZORBA.!!"
பாலு சாரும் ANTONY QUINN- ம் ஒரே சாயல்.


"சார். என் பேர 'ZORBA' - ன்னே வெச்சுக்கலாம்னு இருக்கேன். அடுத்த நாள் என்னை அழைத்து,
 " Zorba , Come to school. We ll go for Lunch.." என்றார்.
" சார். இந்த தமிழ் காப்பர்'களை நெனச்சாதான் பயமா இருக்கு.தமிழனுக்கு ஏன் கிரேக்கப் பேரும்பாங்க. அதான்...."
" அவங்க கெடக்கறாங்க.. 'ANTONY' -க்கும் 'அந்தோணிக்கும்' என்ன சம்பந்தம்.."

பாலு மகேந்திராவும்  ஒரு 'ஜோர்பா' தான்.
ZORBA
ZORBA
"A man needs a little madness, or else.. He never dares cut the rope and be free.."-ZORBA
அவருடன் சண்டை போட்டு ஒரு வருடம் பார்க்காமல் பேசாமல் இருந்தேன். 'நான் கடவுள்' இசை வெளியீட்டு விழாவில் சந்தித்த போது வெண்முரசு பூத்த முகத்தோடு இருந்தார். விழா முடிய பழைய கோவங்களும் மறைய கூட்டத்தினுள் நடந்தவாறே ,
" ஹலோ சார்.." என்றேன்.
மெதுவாகத் திரும்பியவர்,
" டேய்.. எங்கடா பொயிட்ட  இத்தன  நாளா..? Phone நம்பரையும் மாத்திட்டயா..? எத்தனப் பேரப்பா விசாரிக்கறது  நானு."
( இதில் பாதி நிஜம். மீதி, ஹி..ஹி..!)
"எங்கேயும் போகல சார். Am always here."
நடந்தவாறே என் இடக்கை விரல்களுக்குள் அவர் வலக்கை விரல்களை  புதைக்க  அன்று மீண்டும் சங்கமித்த உறவு அவர் பூதவுடல் மறைந்த பின்னும் தொடர்கிறது.
" என்ன சார் இது கோலம்.."
வெண் முரசுக்கு மத்தியில் கருப்பு அவலட்சணமாய் மீசை.
" Why.. நல்லா இல்லையா.."
" முதுமைக்கு அழகு நரை சார்."
அடுத்து  அவரை சந்திக்கும் போது  முழுமையாக இருந்தார். நான் இன்றும் நினைத்து பெருமை கொள்ளும் நிகழ்வது.

தான் பிறந்த மண்ணை ஒரு முறையேனும் தன்  வாழ்நாளில் ஸ்பரிசித்துவிட  வேண்டுமென  பலவருடங்கள் ஏங்கிக் கிடந்தார் பாலு சார். அம்மண்ணைப் பற்றி எப்பொழுது பேசினாலும் அவர் ஒலி கவிபாடும்.
தன்  தந்தை தனக்கு எப்படியோ அப்படியே தன்  மகனையும் வளர்க்க விரும்பினார்.
கணிதம், ஆங்கிலம், சமஸ்கிருதம் என போதித்ததோடு பெஞ்சமின் மகேந்திரனின் (பாலு மகேந்திரா) காதலுக்கும் உதவி இருக்கிறார் அவர் தந்தை பாலநாதன்.
 " உன் காதலியை என்னிடம் காட்டு. நான் பார்க்கணும் ."
இருவரும் ஒளிந்திருந்து அவளைப் பார்ப்பார்களாம்.
" Do you Masturbate..?" - அப்பா.
" Yes dad.."
" How do you do..?"
" It's just like everybody else dad.."
" No. Do it with your saliva in hand. It'll arouse more pleasure.."

1940 - களில்  ஈழ மண்ணில் அப்படியொரு வாழ்க்கை அது.




( அவரை வைத்து நான் இயக்குவதாக இருந்த 'யாத்ரிகன்' படத்திற்காக  எடுத்த உரைகாட்சிகள்.)

சிறுவன் மகேந்திரன் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில்  மிகுந்த ஈடுபாடு உடையவன். ஒரு நாள் தன்  நாயிடம் பகடி செய்ய முற்பட்டு தன்  வீட்டெதிரே உள்ள மரத்தின் மேல் ஏறி அங்கிருந்து கீழே குப்புற விழுந்து மூர்ச்சை ஆகிறான். படபடத்த நாய்  அவன் அருகே சென்று தன்  நண்பனை பிராண்டுகிறான். சிறு சலனமும் இல்லை. பரிதவித்தவன் வீட்டை நோக்கிச் சென்று அனைவரையும் அழைத்து வந்து தன்  நண்பனின் முகத்தை மூக்கால் வருட,
 " ப்பே ..!"  - சிரித்தவாறு துள்ளி குதித்தெழுகிறான்  மகேந்திரன்.
நிசப்தம்.
மௌனமாக தன்  நண்பனை பார்த்தவன் மெதுவாகத் திரும்பிச் சென்று விடுகிறான்.

" நான் எவ்வளவு முயற்சி செய்தும், சாரி கேட்டும் ஒரு மாசம் என்னோடப் பேசவே இல்ல அவன். அண்ணையிலேந்து அவன் கிட்ட அந்த மாதிரி விளையாடறத நிறுத்திட்டேன் நான்."
இன்றும் தன்  வீட்டில் எஜமானர்களாய் வாழும் வள்ளி,சுப்பு  இருவருக்கும் நேரம் ஒதுக்கியப் பிறகு தான் மற்ற வேலைகளே ஆரம்பமாகும்.

வள்ளி,சுப்பு 
ஒருநாள்  படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பினோம். அசதியாக இருந்தார் சார். நான் விடை பெறுகையில் வாசலில் நின்றபடி ,
" டேய். நான் ஒனக்கு என்ன கொற வெச்சேன். வர வழியில ஒன்ன மாதிரி ஒருத்தன பாத்தேன். எவ்வளோ Healthy யா அழகா முகமெல்லாம் பிரகாசமா ஜொலிக்கிறான் தெரியுமா. நீயும் இருக்கயே... அது.. ஒனக்கு செல்லம் கொஞ்சம் அதிகமாயிடுச்சி அதான். இன்னிலேந்து ரெண்டு நாளைக்கி ஒன்னோட பேசப் போறதில்ல." வீட்டினுள் நடந்தபடி "பசு,அப்பதாண்டா இவன் சரிபட்டு வருவான்."
வீட்டு வாயிலுள்ள பூச்செடியிடம் நடந்த சண்டை.'இயற்கையில் கறைதல்' என்பதை கண்கூடாக கண்ட நாள்,அது.

கடந்த சில வருடங்களாகவே சார் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி,
" Why should i stretch this(life)..?"
" பிறப்பினுடைய அடிப்படை நோக்கமே உயிரை நீட்டிக்கறது தானே சார்.."

ஏதாவதொரு உணவகத்தில் அமர்ந்தவாறு எப்பொழுதும் நிகழும் உரையாடல் இது. அவ்விடம் கனத்த மௌனம் நிலை கொள்ளும். கையலம்பும் போது பொங்குவார்  செந்தில்.
" என்ன செந்தில் ஒண்ணுமே பேசாம இருக்கறீங்க..?"
" Life -அ Intellectual -ஆ அணுகறதுல உடன்பாடில்ல  எனக்கு." என்பார். (தன்  உணர்வுகளை அவர் அதீதமாக வெளிப்படுத்தி  நான் பார்த்ததில்லை.ஆனால், இதே மனிதர் ஆசானின் இறுதி பிரிவின் போது கதறியதை பார்த்தேன் நான்.)

பாலு சார் எடுப்பது  'Emotional Cinema' தான். ஆனால் அவருடைய கடைசி காலத்தில் எடுத்த பெரும்பாலான முடிவுகள் அனைத்தும் அறிவு சார்ந்து யோசித்து செதுக்கியதே.நாங்கள் ஒருவரும் நம்பவில்லை. ஒரு  சினிமாப் பட்டறை ஆரம்பிப்பார். ஒரு படம் இயக்குவார் என்று. ஆனால் கிழவன் செய்தான். தொழில்நுட்ப ரீதியாக தான் பின்தங்கி விட்டதாக அடிக்கடி சொல்வார். அவர் கடைசியாக இயக்கியப் படம் 5D - எனும்  டிஜிட்டல் காமிராவில் எடுத்து காண்பித்தார்.
தலைமுறைகளுக்காக ஒரு பழைய வீடு தேடி அலைந்தோம். ஒரு வழியாக கண்டுபிடித்த பின்,
" இந்த வீடு நான் வருவேங்கறதுக்காகத் தான் 150 வருஷமா காத்திட்டு இருந்திருக்கு டா.." சிலிர்த்தார்.
தலைமுறைகள் வீடு தேடி..
" I dunno how. But, When i was shooting  climax scene for 'மூன்றாம் பிறை ', எனக்கு மழை தேவப் பட்டது.. வந்தது. I was Wondering..!? இப்ப.. 'தலைமுறை'க்கு புயல் தேவப் பட்டது.. Again, வந்தது. Dunno how..!?"
" If a person really desires to achieve something all the universe conspires to help that person to achieve his dream, sir."
" True டா."
அவருக்கே உரிய பலவீனத்தால் அவரின் கடைசி காலகட்டத்தில் வெறுமையை சந்தித்தார். தான் படுத்துறங்கும் போது  தன்  துணைவியார் அருகிலேயே உயிர் பிரிய வேண்டுமென ஏங்கினார். அவ்வண்ணமே செய்தார்.

இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தொடர் வாந்தி என என்னை  அழைத்தார்.
மாணவர்களிடம் அவரை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொன்னேன்.'Food  Poisoning ' என்று மூன்று  நாட்கள் மருத்துவமனையில் இருந்தவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து என்னை அழைத்தார்.
" டேய். எப்ப வர என்ன பாக்க.."
" Script,  எழுத  திருச்சி வந்தேன் சார் . வந்துடறேன்."

இறப்பதற்கு முன் நாள் அவரை சந்திக்கச் சென்றபோது மிகவும் பயந்து தளர்ந்து காணப் பட்டார்.
" நீ  வர்ற. பாலா வர்றான். வெற்றி வர்றான். ஆனா என் புள்ள வந்தானா? இல்லையே. நீங்கெல்லாம் தாண்டா என் புள்ளைங்க."
தேற்ற வழியின்றி சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தேன். அக்கணத்தைக் கலைக்க நினைத்து, அவர் ஏற்கனவே சொல்லிய அடுத்த படத்துக்கான திரைக்கதை வேலையை ஆரம்பிக்குமாறு சொல்லி,
கமல் ஹாசன் தலைமுறைகள்  பற்றி பேசிய வீடியோவை போட்டுக்  காட்டினேன்.
                                                   
என் கைபேசியில் இக்காட்சியை காண்பிக்க நுனி நாற்காலியில் உட்கார்ந்தவாறு அதை பார்த்தபடி உடைந்தழுதார்.

நண்பன் வசந்த் தலைமுறைகள் படத்தை பார்த்தே தீருவேன் என்றிருந்தான்.
"இக்கால கட்டத்தில் இப்படியொரு படம் அவசியம்."
நாங்கள் ஒருவரும் நம்பாத போதும் அவன் மட்டுமே உறுதியாகச்  சொன்னான்.
" அவர் படம் எடுப்பார்."
அவன் கூறியதைச் சொன்னேன். உற்சாகமானார். கதை விவாதம் நடந்தது.
திரைக்கதையில் உள்ள சிக்கல்களை களைய ஆராய்ந்தோம்.பிறகு, தன் கண்கண்ணாடியை கழட்டி டேபிள் மேல் போட்டார். நான் எப்பொழுதும் பார்த்திறாத  கலங்கிய கண்கள்.

டிரைவர் சத்யாவை M.A. படிக்க வைக்கிறார். Black Tea கொண்டு வந்தவனிடம்,
"பாஸ் பண்ணிட்டியா"  என்று கேட்டேன்.
"தொல்காப்பியத்தில் போயிடுச்சி சார் ".
அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
 என்னை பார்த்தவாறு அமர்ந்திருந்தார் சார்.
"மதியத்துல அவசியம One hour, Rest  எடுங்க சார்".
சத்யாவிடம், Daily ரெண்டு 'Celin' Tablet கொடுக்கச் சொன்னேன்.
"அப்ப நான் வறேன்  சார்." மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தவர் பிரிய மனமில்லாமல்,

"What's Going..?"
"Am writing my script sir. "
" You  mean' 900 km'..?"
" Yes sir." ( அப்படத்திற்கு அவர் வைத்த தலைப்பு - 'பாதைகளும் பயணங்களும்')
" Good. Do it. நீ சொன்ன மாதிரியே  எடுத்தயிண்ணா Surely, It's going to be a classical film. எதுக்காகவும் யாருக்காகவும் Compromise ஆவாதே."
Sure sir. Am going to Odissa sir. To explore the Road,NH-5. Srikakulam Collector, Veerapandiyan, friend of mine has invited me to meet the Tribals there, sir. "
" Good. Do it. You are always a traveller - ப்பா. போயிட்டு வா. நாம பேசுவோம்."
" Sure Sir."
எழுந்தவனிடம்,
" Keep in touch with me.."
" Sure sir."
அறையை விட்டு வெளியேறியவன் சற்றே  தயங்கி 'மறுபடியும்' உள்ளே வந்து,
" சார். எனக்கு 'சந்தியா ராகம்' வேணும். "
ஏறெடுத்துப்  பார்த்தவர், தன்  அருகிலுள்ள Self -ல் இருந்து DVD எடுத்து என் கைகளில் வைத்து என் கண்களுள் தீர்க்கமாகப்  பார்த்தார்.

" SEE YOU SIR..!"

                                                            *****
அவரை வைத்து  ஒரு படம் இயக்க நினைத்து 'யாத்ரிகன்' என அவர் வாழ்க்கையை புனைந்து 2010-ல் ஒரு கதை சொன்னேன்.  'First time in front of camera, Balu mahendra' என்றேன். தனக்கு பிடித்துள்ளதாகவும் தான் நடிப்பதாகவும் கூறினார். காலம் கை கூடவில்லை.
அவரின் நிர்வாணத்தை அவரே காட்டிச் சென்றார்.(தொப்பி..)


தலைமுறைகளில் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்.
"தமிழை மறந்துடாதே..
இந்த தாத்தாவ மறந்துடாதே.."

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை இப்படியொரு மரணம்.
பாலு மகேந்திராவிடம் இருந்து  கற்றவற்றை தொகுத்தால்,
'நேர்மை', 'ஒழுக்கம்'. எனும் இரு வார்த்தைகளுள் அடங்கும்.
(நேரடியாகவும், எதிர்மறையாகவும்)

                                                             *****
"பாலு சார் விஜயாவுல அட்மிட் ஆயிருக்கார். வெற்றி சார் உடனே போகச் சொன்னார். ரெடியா இருங்க.." செந்தில் சொன்னார்.
 அடுத்த பத்தாவது நிமிடம் ICCU  சென்று பாலா சாரிடம் கேட்க,
 "வெற்றிய வரச் சொல்லிடு.." என்றார்.
Dr. விஜயக்குமாரிடம் பேசினேன்.
" He is very serious. Inform his relatives and friends."
" What happened doctor.?"
" He had Stroke as well as Myocardial Infarction."
"...................."
" What about his film,Thalaimuraikal. Is it Released..?"
" yes doctor. It's a successful film.."
" Good. Can i get a copy of that movie..?"
" Sure doctor."

அகிலாம்மா விடமும் அர்ச்சனா விடமும் டாக்டர் 10% வாய்ப்பிருப்பதாகச் சொன்னார்.அதையும் கடவுள் எப்படியாவது எடுத்து விடவேண்டுமென பிரார்த்தித்தேன்.  பிழைத்து படுக்கையில் பிணமாக வாழ்வதை கிழவன் விரும்ப மாட்டான். திருப்தியா சாவட்டுமே.வெற்றி சாரைக் கூப்பிட்டேன்.
" சார். நம்ம சார் இன்னும் கொஞ்ச நேரத்துல இறந்திடுவார். நீங்க கெளம்பிடுங்க.."
பெங்களூருவில் இருந்து புறப்பட்டார்.
அடுத்தடுத்து, ஒவ்வொருவராக சேர்ந்தோம்.
ராஜா. சுகா. சீனு ராமசாமி . ராம். Lawyer சுரேஷ். ரவி. அமர்நாத். கிருஷ்ணகுமார். அர்ச்சனா, Institute Students என கூட்டம் கூட,

" இது தான் ரயில் பெட்டியோ..!!!" திருமணம் ஆனப் பொழுதில் மட்டக்களப்பில்  ஆச்சர்யப் பார்வை பார்த்தப் பெண் 'அகிலா' அதே வெள்ளந்திப் பார்வையோடு அனைவரையும் வெறிக்க,
அவரைப் பார்த்த அனைவரும் கதறினார்கள்.

அடுத்தடுத்து  நிகில் முருகன் மூலம் செய்தி பரவ, பாலா சார் எங்கள் குருவின் தொப்பியை கொண்டு வரச் சொன்னார்.
செந்திலும் நானும் ICCU - வினுள் சென்று சாரைப் பார்த்தோம்.
மூச்சு விடுவதைப் போலவே பிரமை.
ஆசானின் கரம் பற்றினேன். நெற்றியில் உள்ளங்கை வைத்து  என் கண்கள் மூடினேன். செந்தில் பாலுசார் கரம் பற்றி அவர் கண்களுள் ஊடுருவினார்.

அவருக்கு அவரின் அடையாளங்கள் அணிவிக்கப் பட்டது. அதே கம்பீரத்துடன் மருத்துவமனையை விட்டு  அழைத்து வந்து  அவருடைய சினிமாப் பட்டறையில் படுக்கச் செய்து கூட்டத்தினை கட்டுப் படுத்தினோம். அனேகமாக தமிழ் திரை உலகைச் சேர்ந்த  அனைவரும், எழுத்தாளர்களும், சில தலைவர்களும் வந்து அஞ்சலி செழுத்தினர்.
சினிமாப் பட்டறை 
அகிலாம்மா தண்ணை  உலுக்கி ஆறுதல் சொன்னவர்களை சற்றே  விலக்கி தன்  கணவன் முன் சென்று  அவரின் நெற்றியில் மூன்று முறை சிலுவை இட்டு அந்த மனிதனின் நெஞ்சில் கை வைத்து கண்கள் மூடியவாறு சற்றே உறைந்திருந்தார். பிறகு சட்டெனத் திரும்பிச் சென்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். ஆலயத்தில் இருந்த அனைவரும் ஏதும் புரியாமல் விழித்தனர்.

'வம்சி புக்ஸ்' ஷைலஜா தன்  குடும்பத்துடன் வந்து 'அப்பா,அப்பா' என  கத்திக் கதறி அழுதது அனைவரையும் சிலிர்க்க வைத்தது.. சென்னை போன்ற மாநகரில் அவ்வழுகை ஒலி அசலான கிராமத்தை நினைவு கொணர்ந்தது.

13 பிப்ரவரி 2014 இரவு முழுவதும் ஒரு கூட்டுப் பறவைகள் அனைத்தும் தங்கள் தாய்ப் பறவை உடனான நினைவுகளை கிளற சிரிப்பொலி சினிமாப் பட்டறையை அதிரச் செய்தது.
" ACTUAL - ஆ இன்னைக்கு காலைலிருந்தெ நாம இப்படி தான் ஜாலியா சிரிச்சிப் பேசிட்டு இருந்திருக்கனும்..தனக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்திட்டு திருப்தியா செத்திருக்கார் சார். எது..75 வயசா ?நீங்க வேற, கலையில தான் அவரோட ஜாதகத்துல பாத்தேன்.Date of birth 1930 - ன்னு இருந்துச்சி." வெற்றி சார் கூறினார்.

பாலு சாரின் ஆத்ம விசுவாசிகளான முருகன் மற்றும் பாஸ்கர் இருவரும் அன்றிரவு அனைவருக்கும் ஈழத்து தேநீர் வைத்தும் பெண்களுக்கு மோர் பரிமாறியும் எப்பொழுதும் போல் கர்ம யோகிகளாகத் திகழ்ந்தனர். ஆனால், அந்த முருகன் ஊர்வலத்தில் தேர் மேல் ஏற முற்பட இறக்கி விடப்பட்டான். வந்தேறிகள் சிலர் தங்கள் விளம்பலுக்கு வழிவிடுமாறு  சொல்ல ஏதும் அறியாதவனாய் எகிறி குதித்து சாலையில் கும்பலுள் ஒருவனாக நடக்கலானான். இந்நிகழ்வைப் பார்த்து பொங்கினார் செந்தில்.
ஸ்டில் ராபர்ட், சாரை சர்ச்சில் அடக்கம் செய்ய முயன்றார்.
கருணாஸ் சரக்கு பாட்டில்களை காருக்குள் வைத்து சாவியை டிரைவரிடம் கொடுத்தனுப்பியதால் தன்  கூட்டாளிகளுடன் பெரும் அவஸ்தைக்குள்ளானார் .தன்  மனைவியை  இரவு இரண்டு மணிக்கு அழைத்து,

" கிரேசு.. என்ன தூங்கிட்டயா..ஒன்னும் இல்ல.. நான் பாலு சார் ஸ்கூல்ல தான் தம் அடிச்சிட்டிருக்கேன். சரக்கு கார்ல வச்சி சாவி ... வி.. வீட்ல ஏதும் சரக்கு இருக்கு.. சரி.. சரி.. நீ படு.. நாங்க ராத்திரி பூரா இப்டிதான்....! "
நாங்கள் அனைவரும் ஆச்சர்யமாகப்  பார்க்க, லாயர் சுரேஷ் சார்(எத்தன்),
" வய்ப் கிட்டே சரக்கு கேக்கறீங்க..?!"
" மனுஷனா பொறந்தா யாராவது ஒருத்தர்ட்டயாவது உண்மையா இருக்கணும். நான் என் பொண்டாட்டி கிட்ட இருக்கேன்.."
தூரத்தில் பாலு சார் அருகில் அமர்ந்தவாறு அவர் முகத்தை வெறித்தபடி அகிலாம்மா..!
லாயர் சுரேஷ் சார் மொபைலில் கருணாஸ் திரும்பவும்,
" கிரேசு.. தூங்கிட்டயா..ஒன்னியும் இல்ல.. தொடர்ந்து சரக்கடிச்சா காத்தால சார் ஊர்வலத்தள ஸ்டாமினா போய்டும். அதான் ஸ்டாப் பண்ணிட்டு ஒரு தம் மட்டும் அடிக்கறேன். எது.. இல்லமா.. அட.. நீ தூங்கு..நா இனிமே டிஸ்டப் பண்ண மாட்டேன்.. அட..கட் பண்ணிட்டா..!"
அனைவரும் விழுந்து சிரிக்க, அடுத்த டாபிக் அரங்கேறியது.

இரண்டு நாட்களும் வெறும் தண்ணீரை  மட்டுமே அருந்தி விட்டு ஒரு மூலையில் நின்று  அனைத்தையும் வெறித்தபடி நின்றிருந்தார் ராஜா சார் .
(அன்றிரவு கூட்டத்தில் அதிகளவு எங்கள் ஆசானுடனான நினைவுகளைக் கூறி பகடி செய்தவரும் இவரே.)

மீரா கதிரவனை சற்றே தூங்குமாறு அனுப்பி வைத்தேன். சென்றவர்  இரவு முழுவதும் Phone செய்து,
" ரொம்ப Guilty -யா இருக்கு. எல்லா Ego வைராக்கியத்தையும் தூக்கிப் போட்டுட்டு அவர ஒருவாட்டி பாத்திருந்திருக்கணும். இப்ப Feel பண்றேன்.எனக்கு அங்கயே இருக்கணும் போல இருக்கு.ஆனா முடியல."
" நீங்க நல்ல படம் பண்ணியிருக்கீங்க மீரா.."
" யாரு கேட்டா..இந்த மாதிரி சமயத்துல தான் சமூக வெற்றியோடய மதிப்பு ரொம்ப புரியுது.." என்றார். அவரை தேற்றி தூங்க  வைத்தேன். அடுத்து அரைமணி நேரத்தில் வந்து நின்றார்.

"இந்த கிழவன் இவ்ளோ கூட்டத்த சம்பாதிச்சது பெருசில்ல. அதோ. அந்த மூலையில மூணு மணி நேரமா ஒக்காந்திருக்காரே ஒரு பெரியவர். யார் தெரியுமா. நம்ம சொக்கலிங்க பாகவதரோட புள்ள. அதான் பாலு மகேந்திராவுடைய சொத்து.." என்றார் சுகா.

இளையராஜா சார் அருகில் நின்று பிரார்த்தித்து மௌனமாகச் சென்றார்.
இறந்ததற்கு இரங்கல் சொல்வதைவிட முக்கியம் பெற்றதர்க்கு  நன்றி சொல்வது  என்றார்,கமல் ஹாசன்.  


பாலு மகேந்திராவை ஐஸ் பெட்டியில் பார்த்ததும் உடைந்து அழுத பாரதிராஜா தேரில்  தன் நண்பனைக் கிடத்தி  வெய்யிலில் தானும் அவர்  அருகிலேயே பயணித்து  மின் தகன மேடை வரை வந்தார்.



பாலு மகேந்திராவின் மார்பில் கற்பூரம் ஏற்ற தகன மேடை அவரை உள்ளிழுத்துக் கொண்டது. சுற்றி நின்ற அத்தனைப் பேரும் உடைந்தழுதார்கள். சக்தியை இழந்த சித்தன் வானை வெறிப்பதைப்  போல் செயலற்று சுவரில் சாய்ந்து கிடக்கிறார் பாலா. தகன மேடையில் நடக்கும் நிகழ்வுகளை பதட்டத்துடன் பார்த்தபடி சாரு நிவேதிதா .
சுகா ஒரு புறம், ராஜா ஒரு புறம் கதற, செந்தில் விம்மி அழுகிறார். அவரை  கட்டி அணைத்து,
" ..த்தா.. என்ன.. ம்.. ஒண்ணுமில்ல.. வா.."
ஆச்சர்யம். வெற்றி சாரின் கண்களிலும்  துளி.

இச்சூழலிலும் என் கண்களில் ஒரு துளி கண்ணீரோ மனதில் துயரமோ இல்லை. அனைவரையும் பார்க்கும் போது அவமானமாகக் கூட நினைத்தேன்.
'INTELLECTUAL vs EMOTIONAL'  ஆய்வில் என் சுயம் இழந்தேனோ..?!

ஒரு மணி நேரம் கழித்து,  அஸ்தி  எடுக்கப் போனேன். உடைந்து வெந்து சாம்பலான பாலு மகேந்திராவின் உடலை பானையில் போட்டு  வெளியே கொண்டு வர,அனைவரும் வழிபட்டார்கள். வெற்றிமாறன், ராம்,செந்தில்,நான் அனைவரும் காரில் 'வீடு' திரும்பினோம். என் கைகளில் பாலு மகேந்திரா. கீழே வைக்க மனம் வராமல் சூட்டோடு கைகளிலே ஏந்தி வந்தேன் அவரை.

" ஒரு டீ சாப்புட்டு  கெளம்பிடலாம்.." வெற்றி சார்.
"நேத்துதான் நீ சாரப் பாத்தல்ல. அது ..ஒரு மாதிரி..அது.. நீ Gifted ப்பா.." என்னிடம் வெற்றி சார் சொல்ல,மௌனமாக டீ அருந்தி முடித்து அனைவரும் களைய,

அவ்விடத்தே நிலைத்த வெறுமை, என்னுள் புதைந்திருந்த ஆழ்கடலை  திரட்டி  எழுப்பி  கண்கள் வழி கொப்புளிக்க,உடைந்தேன் 'நான்'.

செந்தில், ஸ்டில் ராபர்ட்,அவர் மனைவி மூவரும் என்னை தேற்றினார்கள்.
எனக்குள்  சினிமா புகட்டி சினிமாவில் என் முகவரியை நிலை நிறுத்திய
என் குரு, என் கிழ நண்பன் இனி இல்லை.
"ஒடிஸா போயிட்டு வாடா .பேசுவோம்.."
" வந்துட்டேன் சார். பேச நெறைய இருக்கு.எங்க இருக்கீங்க..?"

அன்று நான் கலங்கியதைப் பார்த்த பாலா என்னும் சினிமாப் பட்டறை மாணவர் என் கைகளைப் பற்றியவாறு,
" நேத்துதான் பாலு சார் 'மறுபடியும்'படம் போட்டுக் காட்டி அவனுக்கு ரொம்பப் பிடிக்கும் ஒரு நாள் அதப்பத்தி ஒங்க கிட்ட பேசச் சொல்றேன்னார்." என்றார்.

ஆமாம். நிறைய வேலை இருக்கிறது. ' நேரமாகுது. சரி. கெளம்பலாம்.'
" ஆமா.சார் எங்க.. ? "

'அட. என்னையே நான் வெளியில தேடலாமா'.

                                                                     *****


பாலு மகேந்திராவை  கடைசி காலகட்டத்தில் பிரிந்திருந்த அவர் மகன் ஷங்கி மகேந்திரா,
" Actual- ஆ நான் இந்த DEATH CEREMONY- க்கு வரவேண்டாம்னு தான் இருந்தேன். BUT, இந்த PROCESSION - ல யாரோ ரோட்ல போற பெரியவர் எல்லாம் தன்  செருப்ப கலட்டி விட்டுட்டு அப்பாவ  கை எடுத்து கும்பிடறதப் பாக்கும் போது, அது அவ்வளவும் JUST அவருடைய படங்கள் மூலம் அவர் சம்பாதிச்ச மரியாதைன்னு  புரியுது.
HE MIGHT NOT BE A GOOD FATHER . BUT HE IS AN ABSOLUTE FILM MAKER.
அப்பாவோடய அஸ்திய  அவர் பொறந்த  நிலத்துல உள்ள கடல்லயே       கறைச்சிடறேன் ."

பாலு மகேந்திரா சார் தன் சந்தியா ராகத்தை திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் நிகழ்த்த நினைத்தார்.அவருடைய சரிபாதி அஸ்தியை அவ்விடமே சேர்ப்பதாக பாலா சார் கூறினார்.


                                                                             *****
வடபழனி சிக்னலில் ஒரு மூதாட்டி  பாடி  பிச்சை எடுக்க, அவரை  அழைத்து வந்து  தலைமுறைகளில் ஒரு கதாபாத்திரம் உருவாக்கி நடிக்கச் சொன்னார். அவர்  மறுத்து விட்டார்  .அவரை பாடச்சொல்லி பாலு சார் ரசிக்க நான் படம் பிடித்தேன்.

                         " I MAY BE A VULGAR MAN. BUT, MY ART IS NOT..!" 
          கலையையும்  கலைஞனையும்  ஒன்றாக்கிடும்  வேட்கையோடு
          தன்  மாணவர்கள் மூலம் தொடர்கிறார் ஆசான்  பாலு மகேந்திரா.

யாத்ரிகன்

                                                                     *****