மாநகர் விட்டு
ஊர் திரும்புகையில்
வரவழைக்கப்பட்ட பகட்டோடு
தத்துவப் புத்தகத்தினுள்
முகம் புதைக்க
"ஊமையனூர் எறங்கு.."
மாமா அத்தை
சித்தி பெரிம்மா மச்சான்
கூட்டத்தோடு ஏறிய அச்சிறுவன்
என்னருகில் உட்கார்ந்து
அழகாக முறுக்குத் தின்றான்.
" யெம்மா ஒனக்கு.."
" ந்தாடா பையா கொய்யாக்கா.."
வாங்குகையில்
அது உருண்டோட
தாவிப் பிடிக்க குப்புற விழுந்து
அவன் சட்டையில் அழுக்கு.
" அட்ராத் தாய்லி
சட்டைய இப்புடி பண்ணிட்டயேடா .."
அப்பா அதட்ட,
பெரியம்மா பனங்கிழங்கு
உரித்த கையால்
சட்டையை துடைக்க
இன்னும் அழகானது அது - மண்பட்டு.
எச்சில் தெறிக்க உச்சுக் கொட்டி
மாங்கா தின்றான் சிறுவன்.
மௌன சாட்சியாக
அமர்ந்திருந்தேன் 'நான்'.
" அண்ணா சாப்புட்றியாண்ணா.."
மென் புன்னகையோடு தலையசைத்து
" நீ சாப்பிடு.."
சன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன்.
சிறுவனும் நானும்
ஒட்டியவாறு அமர்ந்திருந்தோம்
சிறுவன் முன்சீட்டு சொந்தங்களுடன்
அரட்டையடித்து கலைத்து
கண்ணயர்ந்தான் என் தோள்மீது.
மாமா அத்தி சித்தி
பெரிம்மா மச்சான்
அனைவரும்
கலைத்து கண்ணயர
சன்னலில் வெறித்த
'என் பார்வை' மட்டும்
கடைசி வரை
அப்படியே நீடித்தது.
****